Published:Updated:

“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

ஆன்லைன் கேம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் கேம்

நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள்

இப்படி இவர்கள் மட்டுமல்ல... கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மதுரை மாவட்டம் நாகமலைப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் - மீனாட்சி தம்பதியர், கடலூர் மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அருள்வேள் மற்றும் அவரின் தாய், விழுப்புரம் ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஏழுமலை... என இரக்கமே இல்லாமல் நீள்கிறது ஆன்லைன் சூதாட்டத்தின் காவுப் பட்டியல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணையப் பக்கங்கள் எனத் திரும்பிய திசையெல்லாம் ‘ரம்மி விளையாட வாங்க...’ என்று ஆசைகாட்டி அழைக்கின்றன விளம்பரங்கள். சூதாட்டப் பிரியர்களும், காசுக்காகத் தடுமாறுபவர்களும் அதில் விழுந்த கணமே தடம் மாறிவிடுகிறார்கள். ஆட்டம் ஆரம்பிக்கும்போது பலருக்கும் அதிர்ஷ்டமே கதவைத் தட்டுகிறது. 500 ரூபாய் கட்டியவர்களுக்கு 5,000 ரூபாய் விழவைத்து ஆசைகாட்டுகிறது ரம்மி. பத்துப் பேர் சுதாரித்துக்கொண்டு ஐந்தாயிரத்துடன் வெளியேறினால், நூறு பேர் சர்க்கரைப் பாகில் விழுந்த ஈக்களாக உள்ளே விழுந்துவிடுகின்றனர்.

“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

அடுத்தடுத்து, பெரும் பணத்தை இதில் கட்டுகிறார்கள். இழப்புகளே பரிசுகளாகின்றன. பிறகு அவர்களால் எழவே முடிவதில்லை. சில நாள்களிலேயே அதற்கு அடிமையாகிவிடுபவர்கள், விட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற வெறியில் கடைசிக் கையிருப்பையும் தொலைத்து, அடுத்ததாக உறவுகளையும் நட்புகளையும் இழக்கத் துணிந்துவிடுகிறார்கள். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். கடந்த வாரம் அப்படி பலியானவர்தான் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார்.

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமாருக்கு 11 வயதில் மகன் மற்றும் 8 வயதில் மகள் இருக்கிறார்கள். செல்போன் ரீசார்ஜ் கடைவைத்திருந்த விஜயகுமார் படிப்படியாக முன்னேறி, தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டு மொத்த விற்பனையாளரானார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கியவர், 38,00,000 ரூபாயை அதில் இழந்து, அந்த விரக்தியில் தன்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

அதற்கு முன் தன் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோதான் அனைவரையும் அதிரவைத்திருக்கிறது... ‘‘என்னை மன்னிச்சிடு மது. என்னால ஒண்ணும் பண்ண முடியலை... கணக்குப் பாத்தா 38 லட்ச ரூபாய்க்கு மேல ஆன்லைன் ரம்மியில விட்டிருக்கேன். போதை மாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு 50,000 ரூபா ஜெயிச்சா, மத்த மூணு நாள்ல நம்மகிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா போயிடுது. அது புரியாமலே விட்ட காசைப் புடிச்சிடலாம்னு விளையாடிட்டே இருந்தேன். கடைசிவரைக்கும் அவனுங்க நம்மளை வெச்சித்தான் செஞ்சானுங்கனு எனக்குத் தெரிஞ்சுடுச்சு.

தெரிஞ்சும் விளையாடினேன். இப்போக்கூட எனக்கு விளையாடணும்னு தோணுது. எனக்கு இதைவிட்டா வேற வழியே தெரியலை மது. நீ எனக்காக ஏதாவது பண்ணணும்னு நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கிற விஷயத்தையெல்லாம் தடுக்குறதுக்கு யார்கிட்டயாவது சொல்லு.

விஜயகுமார்
விஜயகுமார்

‘எம்புருஷன் செத்துட்டான். என் வாழ்க்கை அழிஞ்சிருச்சு’னு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதுலயாவது போட்டு ஆன்லைன்ல நடக்குற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. இன்னைக்கு நான் சாகறதுக்கு முழுக் காரணமும் அதுதான். என்னைப்போல பல பேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கானுங்க. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியையெல்லாம் இழுத்து மூடிடு மது. எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தைவிட்டு நான் போறேன். இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா, உங்க கூடவேதான் இருப்பேன். பசங்களைப் பார்த்துக்க. ஐ லவ் யூ மது. நன்றி’’ என்று பேசியிருக்கிறார் விஜயகுமார். அத்துடன், ‘‘நிறுத்திடுங்க ப்ளீஸ்’’ என்று Ace2Three ரம்மி நிறுவனத்துக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அழுது அழுது வீங்கிப்போன முகத்துடன் வீட்டின் மூலையில் முடங்கிப்போய் கிடந்தார் விஜயகுமாரின் மனைவி மதுமிதா. அப்பாவின் மரணம் புரிந்தும் புரியாத குழப்பமான நிலையில், அம்மாவின் சேலையைப் பிடித்தபடி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தனர். மதுமிதாவைத் தேற்றி, பேசவைத்தோம்...

“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

‘‘கொரோனா நேரத்துல பொழுதுபோக்குக்கு விளையாடறேன்னு போயி மாட்டிக்கிட்டாரு. முதல்ல நூறு ரூபாய்க்கு 500 ரூபாய் கொடுத்துருக்கானுங்க. 500 ரூபாய்க்கு 5,000 கொடுத்துருக்கானுங்க. 50,000 ரூபாய்க்கு ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கானுங்க. அந்த ஒரு லட்ச ரூபாயைவெச்சு பெருக்கிப் பெருக்கி பொண்டாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்துடலாம்னு நினைச்சிருக்காரு. ரெண்டு நாள்ல 50,000 ஜெயிச்சா, மூணு நாள்ல மூணு லட்ச ரூபா விட்டிருக்காரு. விட்ட காசை எடுத்துடலாம்னு கடன் வாங்கி கடன் வாங்கியே 38 லட்சம் ரூபாயை விட்டிருக்காரு.

உங்க எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிறேன்... என் புருசனோட கடைசி ஆசையும் அதுதான். 100 ரூபாய்க்கு 500 ரூபா கிடைக்கும்னு தயவுசெஞ்சு யாரும் ஆன்லைன் ரம்மி விளையாடாதீங்க. அப்புறம் உங்க குடும்பம் நடுத்தெருவுலதான் நிக்கும். நானும் எம் புள்ளைங்களும் அநாதையா நிக்குறோம். எதையாவது பண்ணி அந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்க’’ என்றவர் பெருங்குரலெடுத்து அழுதார்.

கேவலுடனேயே தொடர்ந்தவர்... ‘‘ஆன்லைன் ரம்மி விளையாடுற எல்லாரையும் கேட்டுக்குறேன். உங்க பொண்டாட்டி புள்ளைங்களை நடுரோட்டுல விட்டுடாதீங்க... அவரு எந்த சூதுக்கும் போவாதவரு... விளையாட்டா போயி 38 லட்ச ரூபாயை விட்டுட்டாரு. ஒரு உசுரு கருகிப்போச்சு. நூறு பேரு திருந்துனாக்கூட எம் புருசன் ஆத்மா சாந்தியடையும். ஆன்லைன் ரம்மிக்காரன் பணத்தோட உயிரையும் புடுங்கிட்டானே...’’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார்.

‘சூதாடுவது சட்ட விரோதம்’ என்று கூறும் அரசு, ‘இது சட்டபூர்வமானது’ என்ற அறிவிப்புடன் கோடிக்கணக்கில் வர்த்தகத்தை நடத்திவரும் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? அப்பாவி மக்களின் உயிர்களைக் குடிக்கும் அந்த நிறுவனங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு இன்னும் எத்தனை பேரைக் காவு கொடுக்க வேண்டும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

26, ஜூலை 2020: சென்னை, டி.பி.சத்திரம்... நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிதிஷ் குமார், கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் திறக்கப்படாதபோது டாட்டூ நிலையம் ஒன்றுக்குப் பகுதி நேர வேலைக்குச் சென்றார். பொழுதுபோக்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் ஈடுபட்டு, பணத்தை இழந்திருக்கிறார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன் பெற்றோருக்கும் காதலிக்கும், “ஆன்லைன் சூதாட்டத்தில் என் சேமிப்புப் பணத்தை மொத்தமாக இழந்துவிட்டேன். அதனால், தற்கொலை செய்துகொள்கிறேன்’’ என்று உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அந்த டாட்டூ நிலையத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

7, ஆகஸ்ட் 2020: திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையைச் சேர்ந்தவர் காவலர் ஆனந்த். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டவர். அதற்காக நண்பர்கள், உறவினர்களிடம் ஏகப்பட்ட கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, அழுத்தம் தாங்க முடியாமல் தன் தாயின் சேலையில் தூக்குப்போட்டு வாழ்வை முடித்துக்கொண்டார்.

22, செப்டம்பர் 2020: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டாலியன் காவலரான வெங்கடேஷ், சேலத்தில் பணியாற்றிவந்தார். பொழுது போக்காக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நுழைந்தவர், தன் மொத்தச் சேமிப்பையும் தொலைத்தார். விரக்தியடைந்தவர், தனது அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.