Published:Updated:

காவு கேட்கும் ஆன்லைன் கேம்! - கவனம் செலுத்துமா அரசு?

காவு கேட்கும் ஆன்லைன் கேம்
பிரீமியம் ஸ்டோரி
காவு கேட்கும் ஆன்லைன் கேம்

ரம்மி ஆன்லைன் கேம் நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சிறு நிறுவனங்களின் ஆப்-கள். அவற்றில் பெட்டிங் கிடையாது.

காவு கேட்கும் ஆன்லைன் கேம்! - கவனம் செலுத்துமா அரசு?

ரம்மி ஆன்லைன் கேம் நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சிறு நிறுவனங்களின் ஆப்-கள். அவற்றில் பெட்டிங் கிடையாது.

Published:Updated:
காவு கேட்கும் ஆன்லைன் கேம்
பிரீமியம் ஸ்டோரி
காவு கேட்கும் ஆன்லைன் கேம்

பேராசைக்கும், வீழ்ச்சிக்கும், குற்றத்துக்கும் தூண்டுவது சூதாட்டம். சமூகத்தில் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்ட சூதாட்டத்தை, தற்போது வீட்டுக்குள்ளேயே அமர்ந்து ஆடும் அளவுக்கு இயல்பான ஒன்றாகக் காலமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றிவிட்டன. பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்த பலரும் பொழுதுபோக்காகத் தொடங்கி, பின்னர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கின்றனர். இதனால் தற்கொலை, கொலை, கொள்ளைகள் நடப்பது தொடர்கதையாகிவருகிறது. சிக்கிம், கோவா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றி, எந்தெந்த ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிப்பது, எவற்றைத் தடைசெய்வது என்று தெளிவுபடுத்தியிருக்கின்றன!

“2019-ம் ஆண்டு கணக்குப்படி, தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது” என்கிறது ஓர் ஆய்வு. ஏஸ் 2 த்ரீ, பாக்கெட் 52, கேஸ்டோ கிளப், போக்கர், ஷூட்டிங் ஃபைட்டர்ஸ் இப்படிப் பல பெயர்களில் இந்தியாவில் 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுச் செயலிகள் இருக்கின்றன. இவற்றை ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஜங்லி கேம்ஸ், கே.பி.எம்.ஜி, ஆர்.ஜி.எம் போன்ற சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன.

குற்றங்களும் தற்கொலைகளும்!

சென்னை மணலி அறிஞர் அண்ணாநகரைச் சேர்ந்த நாகராஜன் என்ற பெயின்ட்டிங் கான்ட்ராக்டர், ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்ச ரூபாய் வரை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியின் புதுநகரைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 3 லட்ச ரூபாயை இழந்ததோடு, 20 சவரன் தங்க நகைகளை விற்று அதில் வந்த பணத்தையும் இழந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலடைந்து தற்கொலை செய்துகொண்டார். தாம்பரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், பெருங்குடியில் மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட வங்கி அதிகாரி மணிகண்டன், கோயம்பேட்டில் தினேஷ், போரூரில் பிரபு, மேற்கு மாம்பலத்தில் காந்தி ராஜன், ஆயுதப்படைக் காவலர் சரவணன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியிலும் ஆன்லைன் கேமுக்காக வாங்கிய கடன் இருக்கிறது. பாலின வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்துப் படிநிலையில் இருப்பவர்களும் ஆன்லைன் சூதாட்டத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காவு கேட்கும் ஆன்லைன் கேம்! - கவனம் செலுத்துமா அரசு?

“ஆசையைத் தூண்டி ஏமாற்றும் வித்தை!”

“ரம்மி ஆன்லைன் கேம் நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சிறு நிறுவனங்களின் ஆப்-கள். அவற்றில் பெட்டிங் கிடையாது. விளையாட்டின் இடையில் ஒளிபரப்பும் விளம்பரங்கள் மூலம் பணத்தை ஈட்டுகின்றன. இரண்டு, பெருநிறுவனங்களின் ஆப்-கள். இவற்றில்தான் ஆபத்தான பெட்டிங் இருக்கிறது. ஒரு பயனாளர் இந்த கேமை விளையாடத் தொடங்கும்போது, முதலில் அவரை வெற்றி பெறச்செய்து ஆசையைத் தூண்டுகிறார்கள். வெற்றிபெற்ற ஆசையில் அவர் தொடர்ந்து எவ்வளவு நேரம் விளையாடுகிறார் என்பதை அடிப்படையாகவைத்து, அந்த கேமில் அவர் காட்டும் தீவிரத்தைக் கணக்கிடுவார்கள். அதன் பிறகு, முதலில் ஆறு கேம்களில் தோற்பது. இடையே ஒரு கேமில் வெற்றி பெறுவது. பின்னர் நான்கில் தோல்வி அடைவது, இரண்டில் வெற்றி பெறுவது என்கிறரீதியில் அடுத்தடுத்து அந்த கேமுக்குள்ளேயே ஒருவரை மூழ்கச் செய்யும் வகையில் கேமை வடிவமைத்திருக்கிறார்கள். விளையாட்டு என்பதைத் தாண்டி, ஒரு கட்டத்தில் ‘விட்டதைப் பிடிக்கிறேன்’ என்று சொல்லி அதற்குள் மூழ்கி, அடிமையாகி, தங்கள் பணத்தை முழுவதுமாக இழக்கிறார்கள். அதிர்ஷ்டத்தின்மீதான நம்பிக்கையில், கூடுதலாகக் கடன்பெற்றும் விளையாடுகிறார்கள்” என்கின்றனர் சைபர் க்ரைம் வல்லுநர்கள்.

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம்!

தமிழ்நாட்டில் 2020, நவம்பர் 21-ம் தேதி, ஆன்லைன் கேம்களைத் தடைசெய்து சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2021, பிப்ரவரி 4-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, “ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராதம், ஆறு மாதச் சிறைத் தண்டனை. ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டுச் சிறைத் தண்டனை” என அறிவித்தார் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இந்தச் சட்டம், பிப்ரவரி 25-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, ஜங்கிள் ரம்மி உள்ளிட்ட சில ஆன்லைன் கேம் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு விசாரணையில், ‘‘ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்திருக்கிறது. சட்ட ஆணையமும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்’’ எனக் கூறி, ‘‘தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது’’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் சூதாட்ட ஆப்களைத் தடைசெய்ய, அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் க்ரைம் நிபுணர், வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் கேட்டோம். “மாநில அரசு சட்டம் நிறைவேற்றினாலும் அது வெறும் காகித அளவில்தான் இருக்கும். ப்ளே ஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோர்களில் இருக்கும் ஆன்லைன் சூதாட்ட ஆப்ஸை முற்றிலுமாகத் தடைசெய்தால் இதற்கு ஓரளவாவது பலனிருக்கும். அப்படித் தடை விதிப்பதற்காக ஒரு லிஸ்ட் ரெடி செய்து நடவடிக்கை எடுத்தாலும், வேறு பெயரில் அதே கேம்களை அப்படியே பதிவிடுவார்கள். எனவே இதற்காக, சட்டம், தொழில்நுட்பம், உளவியல் வல்லுநர்கள் அடங்கிய ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். இந்தியாவில் எந்த கேம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றாலும் இவர்கள் ரிவ்யூ செய்து பதிவேற்றம் செய்யும் வகையில் அந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். அதுவும் மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது. மற்றபடி மாநில அரசுகள் என்ன சட்டம் கொண்டுவந்தாலும் அது வெறும் காகித அளவிலானதாக மட்டுமே இருக்கும்” என்றார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

அரசு செய்துகொண்டிருப்பது என்ன?

‘ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்’ என்றார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. அடுத்த சில நாள்களில் ‘உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நல்ல தீர்ப்பைப் பெறுவோம்’ என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ‘ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட ஆய்வுக்குழு’வை அமைத்து, அறிக்கை பெற்றிருக்கிறது அரசு. அறிக்கையின் அடிப்படையில் விரைவில் சட்டம் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதல் பெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

“ஆன்லைன் சூதாட்டத்தை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் இதைத் தடை செய்யத் தயங்குவது ஏன்... என்ன உள்நோக்கம்... இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் தீமையை நீக்கிட வேண்டும். தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்” என, 2020-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையை நினைவூட்டி விமர்சிக்கும் இன்றைய எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார் முதல்வர்?