Published:Updated:

புது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்!

ஆன்லைன் மது விற்பனை...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் மது விற்பனை...

ஆன்லைன் மது விற்பனை...

‘மதுபானங்களை, ஆன்லைனில் டோர் டெலிவரி மூலம் கொடுக்கலாம்’ என்று டெல்லி உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை யோசனை சொல்லியிருக்கின்றன.

உடல் உழைப்புத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் ஆகியோரின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் டாஸ்மாக் கடை விநியோகமும் நடக்கும். உயர் பிரிவு வருவாய் உள்ளவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், டெக்னாலஜி உதவியுடன் ஆன்லைன் மது விநியோகமும் நடக்கும். இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டுவருமா?

மதுபான பிசினஸில், ஏற்கெனவே பெரும் பண முதலைகள் தங்கள் பின்னணியில் பல்வேறு நம்பர் டூ நெட்வொர்க்குகளை அமைத்திருக்கின்றன. டாஸ்மாக் மூலம் அரசுக்கு 35,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்றால், இந்தப் பெரு முதலைகளுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் போகிறது. டோர் டெலிவரி மூலம் மதுபான விநியோகம், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை முறைகள் வந்தால், மக்களுக்கு அந்த வழிகள் பிடித்துப்போகலாம். ஆன்லைன் மூலம் மதுபானத்தை வாங்கிக் குடிக்கும் பழக்கத்துக்கு குடிமகன்கள் மாறிவிட்டால், பிறகு அவர்கள் டாஸ்மாக் கடை, பார்களுக்கு வரவே மாட்டார்கள். இதனால் பாதிக்கப்படும் மது பிசினஸ் முதலைகள் சும்மா இருக்குமா? அதற்குள் போகும் முன், சில டாஸ்மாக் லாபிகள், நெட்வொர்க்குகளை இங்கே பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுபான ஓனர்களின் லாபி

டாஸ்மாக் கடைகளில் எந்தச் சரக்கை எவ்வளவு விற்க வேண்டும் என்பதை அரசு மேலிடம்தான் முடிவுசெய்யும். அதற்கான கப்பம் மாதம் ஒருமுறை முடிவாகும். அதை முறைப்படி கட்டினால், மதுபானக் கொள்முதல் அளவு நிர்ணயமாகும். இதற்கு தகுந்தாற்போல் குடிமகனின் விருப்பம் இன்ன பிராண்டுதான் என டாஸ்மாக் கடைகளி லிருந்து புள்ளிவிவர ஃபைல்களை ரெடி செய்வார்கள். ஆளுங்கட்சியின் அட்சயப் பாத்திரமே, டாஸ்மாக் துறை மூலம் கிடைக்கும் இந்த வகை வருமானம் தான்.

புது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்!

தற்போது, 11 ஆலை அதிபர்கள் இருக்கின்றனர். மதுபான ஆலைகளில் உற்பத்தியைக் கண்காணிக்கும் தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை, தரத்தைச் சோதிக்கும் ஆய்வகங்கள் ஆகியவை அரசின் துறைகள். இவற்றின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கவே, ஆலை அதிபர்கள் விரும்புவார்கள். ஆன்லைன் டோர் டெலிவரி சிஸ்டம் வந்தால், அகில இந்திய அளவில், உலக அளவில் மார்க்கெட்டில் உள்ள பிரபல மதுபானங்களை மது பிரியர்கள் கேட்க வாய்ப்புகள் உண்டு. அப்படியொரு தேவை வந்தால், டாஸ்மாக் தனது நிலைப்பாடுகளை விரிவாக்க வேண்டிவரும். அதனால், தற்போதுள்ள ஆலை அதிபர்களின் நெட்வொர்க்கின் தொடர்பு குறையும். வெளியாட் களின் நெட்வொர்க் புதிதாக உருவாகலாம். மிகப்பெரிய முதலாளிகள் டாஸ்மாக் துறையில் கால் பதிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்பிரிட் நெட்வொர்க்

இது, அகில இந்திய அளவிலான அண்டர் கிரவுண்டு டான்களைக்கொண்டது. தமிழகத்தில் போலி சரக்கு தயாரிப்பதற்கு முக்கியமான பொருளே ஸ்பிரிட்தான். இதை திருட்டுத்தனமாக டிரக்கர் லாரிகளில் கடத்திவந்து போலி லேபிள், பாட்டில்களில் கலர் பவுடர் சேர்த்துக் கலந்து சரக்குகளை உருவாக்குகிறார்கள். பிறகு, தமிழகத்தில் டாஸ்மாக் கடை ஏரியாக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை மூடப்பட்ட நேரங்களில், இந்தச் சரக்கை கடைகளில் வைத்து ரகசியமாக விற்கிறார்கள்.

புது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்!

கடந்த ஆண்டு மட்டும் 15 டிரக்கர் லாரிகள், 2 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் ஆகியவற்றை மதுவிலக்கு போலீஸார் பிடித்திருக்கிறார்கள். அவற்றில் 14, நாமக்கல் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு பிடித்தவை. அப்போதுதான் ஒரு பெரிய பண முதலையைப் பற்றித் தெரியவந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரைச் சேர்ந்த வடிவேலு என்பவர் ஸ்பிரிட் கடத்தலின்போது தமிழக போலீஸிடம் பிடிபட்டார். வடிவேலு கொடுத்த வாக்குமூலத்தில், அவர் கடத்திய ஸ்பிரிட்டை அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து வாங்கியதாகச் சொல்லியிருக்கிறார். அது, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்பத் தினருடன் தொடர்பில் உள்ள தொழிற்சாலையாம். அதேபோல் ஹரியானா மாநிலம் குர்கான், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் ஆகிய ஊர்களில் இருந்தும் தமிழகத்துக்கு ஸ்பிரிட் கடத்திவரப்படுகிறது.

தமிழகத்தில் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறவர் களுக்கெல்லாம் பாஸ் என அழைக்கப்படுகிறவர் ‘குளித்தலை’யை அடைமொழியாகக்கொண்டவர். பெயருக்கு முன்னால் விழுப்புரம், மதுராந்தகம், திருவான்மியூர் பிரதர்ஸ், திருப்பூர் என அடைமொழி கொண்ட இன்னும் சில புள்ளிகளும் இந்த நெட்வொர்க்கில் இருக்கின்றனர்.

பார் நெட்வொர்க்

தமிழகத்தில் லோயர் கிளாஸ், லோயஸ் மிடில் கிளாஸ், தினக்கூலிகள் என்கிற வகையில் 40 சதவிகித மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளையொட்டி உள்ள பார்களில்தான் குடிக்கிறார்கள். துர்நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டிபோல் சுத்தமில்லாத இடத்தில் அரசு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு இருக்கும் இடம்தான் டாஸ்மாக் பார்கள்.

எந்த ஆட்சி நடந்தாலும் தமிழகத்தில் உள்ள பார்களை நடத்துகிறவர்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவினர்தான். தின்பண்டம் மற்றும் காலி பாட்டில் சேகரிப்பு வேலைகளையும் இவர்களே கவனிப் பார்கள். தற்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சியில் ஆங்காங்கே உள்ள லோக்கல் பிரமுகர்களுக்கு டாஸ்மாக் பார்கள் கோட்டா முறையில் கட்சிப் பதவிக்குத் தகுந்தபடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கெனவே பார் நடத்துகிறவர்கள் தொடர்ந்து பார்களை நடத்துவதற்காக பெருந்தொகையை இவர்களுக்கு மாமூலாகக் கொடுத்துவிடுகிறார்கள். சில இடங்களில் அ.தி.மு.க-வினரே அவர்களின் குடும்ப உறுப்பினரை வைத்து பார் நடத்துகிறார்கள்.

இப்படி பணம் தாராளமாகப் புழங்கும் பகுதி என்பதால், அரசின் பல்வேறு துறையினரின் ஆசிகள் இந்த நெட்வொர்க்குக்கு எப்போதும் உண்டு. ஆன்லைன், டோர் டெலிவரி முறைகளால் நிச்சயமாக இந்த பார்கள் அடிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

எனவே, இந்த மாஃபியாக்கள் விரைவில் புது அவதாரம் எடுக்கப்போகிறார்கள்; பசுத்தோல் போர்த்திய புலியாகப் புதிதாக வரவிருக்கும் ஆன்லைன் சிஸ்டத்தில் நுழையக் காத்திருக்கிறார்கள். அதே மாமூல், போலிச் சரக்கு, கள்ளச்சாராயம் எனப் பல வகைகளிலும் நடக்கத்தான்போகின்றன. காலத்துக்கு ஏற்ப டெக்னாலஜி என்ற புதிய முகத்துடன் நடக்கத்தான்போகிறது.

இந்நிலையில், ’ஆன்லைன் மூலமாகவும் மதுவிற்பனை செய்யத் தடைவிதிக்க வேண்டும்’ என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த திங்கன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை, 14-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.