Published:Updated:

சீனாவிலிருந்து ஆன்லைன் வார்?

ஆன்லைன் வார்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வார்

வட்டி 36 சதவிகிதம்... ஏமாந்தோர் ஒரு லட்சம்... மோசடித் தொகை ரூ.300 கோடி...

சீனாவிலிருந்து ஆன்லைன் வார்?

வட்டி 36 சதவிகிதம்... ஏமாந்தோர் ஒரு லட்சம்... மோசடித் தொகை ரூ.300 கோடி...

Published:Updated:
ஆன்லைன் வார்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் வார்
ஆன்லைன் ஆப் மூலம் கடன் கொடுத்து, 36 சதவிகித வட்டி வசூல் செய்து, சுமார் ஒரு லட்சம் பேரிடம் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்களை, பொறிவைத்துப் பிடித்திருக்கிறார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார். முதற்கட்டமாக, பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி மோசடி பிசினஸை கவனித்துவந்த ஜீயோ யமாவோ (Xioa Yamao), வூ யுவான்லன் (Wu Yuanlun) ஆகிய இரண்டு சீனர்களைக் கைதுசெய்திருக்கிறார்கள். மோசடி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்த இரண்டரைக் கோடி ரூபாய் பணத்தையும் முடக்கியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பாஸாகச் செயல்பட்ட ஹாங்க் என்பவரைக் கைதுசெய்ய, டெல்லியிலிருக்கும் சீன தூதரகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறது தமிழக காவல்துறை.

‘‘சில மாதங்களுக்கு முன்பு, டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன ஆப்களை பிரதமர் மோடி முடக்கினார். கோபமடைந்த சீனா, பொருளாதாரச் சீரழிவுகளை உண்டாக்கும் வகையில் சைபர் போரை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த ஆப் மோசடி. இந்த மோசடிக் கும்பலின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த ஓராண்டில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 15 பேர் வரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

சீனாவிலிருந்து ஆன்லைன் வார்?

இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆன்லைன் ஆப் மூலம் உடனடிக் கடன் கொடுப்பதாகச் சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ‘எம் ரூபி’ (M Rupee) என்ற ஆப்பைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார். ரூ.5,000 கடன் வாங்கியிருக்கிறார். அதிலும் ரூ.1,500-ஐ பிடித்துக்கொண்டு ரூ.3,500 தான் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரம்தான் கெடு. அதற்குள் கணேசனால் கட்ட முடியவில்லை. அதற்காக வேறொரு ஆப் மூலம் கடன் வாங்கியிருக்கிறார். இப்படி 40 ஆப்களில் கடன் வாங்கிச் சமாளித்திருக்கிறார். ஒருகட்டத்தில், கடன் கொடுத்த ஆப் நிறுவனத்திலிருந்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை, வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்கள் வந்தன. அதன் பிறகே கணேசன் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்துதான் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், கணேசனுக்கு மிரட்டல் விடுத்த போன் எண்ணைவைத்து பெங்களூருக்கு விரைந்தனர். அங்கே ‘ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் ஊழியர்கள்தான் கணேசனை மிரட்டியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக பிரமோதா, பவான் என இருவர் இருந்தார்கள். இவர்களைப் பின்னிருந்து இயக்கியவர்கள்தான் அந்த இரண்டு சீனர்கள்.

அவர்களின் வாக்குமூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ந்த அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளை அழைத்து அவசரக் கூட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையில் பல அதிர வைக்கும் தகவல்கள் தெரியவந்தன. சீனர்கள் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது. எனவே, இங்குள்ள சில தனியார் நிதி நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து மோசடி பிசினஸை நடத்தியிருக்கிறாகள். இப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆப் மூலம் கடன் கொடுக்கும் 15 நிறுவனங்களை சீனர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனங்களின் ஒரு பாதி இந்தியாவிலும், மறு பாதி சீனாவிலும் செயல்படுகின்றன. ஆன்லைன் லோன் மோசடிக்காக சென்னையில் 600 சிம் கார்டுகளை கமிஷன் கொடுத்து சட்டவிரோதமான முறையில் சீனர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

வூ யுவான்லன்
வூ யுவான்லன்

நம்மூர் கந்து வட்டி, கடப்பாரை வட்டி, மீட்டர் வட்டி இவற்றுக்குச் சற்றும் சளைத்ததல்ல சீன ஆன்லைன் வட்டி. கவர்ச்சியான லோன் விளம்பரங்களை ஆன்லைனில் பரப்புவார்கள். தூண்டிலில் சிக்குபவர்களிடம் ஆதார் எண், பான் எண், புகைப்படம் வாங்கிக்கொண்டு கடன் தருவார்கள். அசலைத் திருப்பி தருவது, வட்டி கட்டுவதில் பிரச்னை என்றால், அந்த மோசடி நிறுவனமே தங்களின் வேறொரு ஆப்புக்குப் போய் கடன் வாங்கி, முந்தைய கடனை அடைக்கச் சொல்கிறார்கள். ஆப்பை டௌன்லோடு செய்யும்போதே போனிலுள்ள கான்டாக்ட் எண்களைத் திருடிவிடுவார்கள். கடனைக் கட்ட முடியாதவர்களைக் கண்டபடி திட்டுவதுடன், அவர்களின் வீட்டுப் பெண்கள், நண்பர்களின் தொலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு திட்டுவார்கள்” என்றார்கள் விரிவாக.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், “சென்னையில் சைபர் க்ரைம் அதிகரித்துவருவதால், போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார் கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனர்களுக்கு போலி சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்தவர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம். ஆன்லைனில் கடன் வாங்கி டார்ச்சருக்கு ஆளானவர்கள் புகார் தரலாம்” என்று கூறியிருக்கிறார்.

ஜீயோ யமாவோ
ஜீயோ யமாவோ

இது குறித்துப் பேசிய சைபர் செக்யூரிட்டி நிபுணர் சாமுவேல் சங்கரன், ‘‘சில தனியார் நிறுவனங்களுக்கு ‘நான் பேங்க்கிங் ஃபைனான்ஷியல் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் நிதிப் பரிவர்த்தனை செய்துகொள்ள ஆர்.பி.ஐ லைசென்ஸ் கொடுத்திருக்கிறது. அவர்களில் சிலர் தவறாக வெளிநாட்டு மோசடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுவிடுகிறார்கள். ஆர்.பி.ஐ மற்றும் சைபர் க்ரைம் போலீஸார்கொண்ட தனிக்குழுவை நியமித்து நடவடிக்கை எடுத்தால்தான், இது போன்ற வெளிநாட்டு மோசடி நிறுவனங்களை ஒழிக்க முடியும்” என்றார்.

இப்போதாவது போலீஸார் விழித்துக்கொண்டார்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism