Published:Updated:

அவசரகதி அரசு மருத்துவக் கல்லூரி... ‘சோதனை எலி’களான மாணவர்கள்!

ஊட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஊட்டி

கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. நடந்து செல்லும் வழியிலும் புதைகுழிபோல இரண்டு அடிக்குச் சேறு நிரம்பிக் கிடக்கிறது

அவசரகதி அரசு மருத்துவக் கல்லூரி... ‘சோதனை எலி’களான மாணவர்கள்!

கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. நடந்து செல்லும் வழியிலும் புதைகுழிபோல இரண்டு அடிக்குச் சேறு நிரம்பிக் கிடக்கிறது

Published:Updated:
ஊட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஊட்டி

‘‘எங்க மாவட்டத்துக்கே மருத்துவக் கல்லூரி வந்தது வரப்பிரசாதம் என்று நம்பியிருந்தோம்... ஆனால், சாபம் என்று இப்போதுதான் தெரிகிறது’’ எனப் புலம்புகின்றனர் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.

மலைப்பிரதேசமான ஊட்டி ஹெச்.பி.எஃப் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 461.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. பணிகள் முடியும் முன்பே, 2022-ம் ஆண்டு, ஜனவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு 120 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள மாற்றுக் கட்டடத்தில் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. ஆனால், மாற்றுக் கட்டடத்தில் வசதிகள் போதவில்லை என்பதால், கட்டுமானப் பணிகள் நடைபெறும் அலுவலகக் கட்டட வளாகத்துக்கே வகுப்புகள் மாற்றப்பட்டன. ஆனால், ‘இங்கு கல்வி கற்பதற்கான அடிப்படைச் சூழலே இல்லை’ என்று அரசுக்குப் புகார்கள் குவிந்துவருகின்றன.

அவசரகதி அரசு மருத்துவக் கல்லூரி... ‘சோதனை எலி’களான மாணவர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவ மாணவர்கள், “கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. நடந்து செல்லும் வழியிலும் புதைகுழிபோல இரண்டு அடிக்குச் சேறு நிரம்பிக் கிடக்கிறது. நூலகத்துக்குப் போகவும் வழியில்லை. எல்லா இடங்களிலும் சேறும் சிமென்ட்டுமாகக் கிடக்கின்றன.

எப்போதும் டிப்பர் லாரிகள், இயந்திரங்களின் இரைச்சலாக இருப்பதால் வகுப்பறையில் பாடங்களை கவனிக்கவே முடியவில்லை. விளையாட்டு மைதானம், ஹாஸ்டல் வசதி என எதுவும் இல்லை. புதிய மருத்துவக் கல்லூரியின் முதல் செட் மாணவர்கள் என்பதால், எங்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். ஆனால், எங்களைச் ‘சோதனை எலி’களாக மாற்றியிருப்பதை இங்கே வந்த பிறகுதான் புரிந்துகொண்டோம்” என்றனர் நொந்தவாறு.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

இந்தப் பிரச்னை குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, “புகார்கள் வந்ததால் நானும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து குறைகளை சீக்கிரமே சரிசெய்து கொடுப்பதாக மாணவர்களிடமும்‌ உறுதி அளித்திருக்கிறேன். கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்லும் பாதை, ஈரநிலமாக இருப்பதால் பொருள்களைச் சரியான நேரத்தில் வளாகத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இருந்தாலும் விரைவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்” என்றார்.