Published:Updated:

ஆபரேஷன் டேர்! - ஆபத்தான 39 ரௌடிகளை சுற்றிவளைக்கும் போலீஸ்!

OPERATION DARE
பிரீமியம் ஸ்டோரி
OPERATION DARE

கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ரௌடிகள் சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களில், ஏ ப்ளஸ் பிரிவிலுள்ள 39 பேரின் பட்டியலை முதற்கட்டமாக எடுத்திருக்கிறோம்

ஆபரேஷன் டேர்! - ஆபத்தான 39 ரௌடிகளை சுற்றிவளைக்கும் போலீஸ்!

கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ரௌடிகள் சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களில், ஏ ப்ளஸ் பிரிவிலுள்ள 39 பேரின் பட்டியலை முதற்கட்டமாக எடுத்திருக்கிறோம்

Published:Updated:
OPERATION DARE
பிரீமியம் ஸ்டோரி
OPERATION DARE

சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பிறகு “ரௌடிகளுக்கு இனி இடமில்லை” என்று எச்சரிக்கை விடுத்தார். மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் ஏ ப்ளஸ் பிரிவிலிருந்த சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இதர ரெளடிகளையும் சுற்றிவளைப்பதற்காக ‘ஆபரேஷன் டேர்’ (Operation Dare) என்ற திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது சென்னை போலீஸ்!

‘Drive Against Rowdy Elements’ என்பதன் சுருக்கமே ஆபரேஷன் ‘DARE’ என்கிறார்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார். ஏற்கெனவே, போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த ‘Drive Against Banned Tobacco Products’ (DABTOP) என்ற பெயரில் நடைமுறையிலிருக்கும் ஆபரேஷன் பாணியைப் பின்பற்றித்தான் ரெளடிகளைக் கட்டுப்படுத்த ஆபரேஷன் டேர் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருக்கும் சில அதிகாரிகள் இந்த ஆபரேஷன் பற்றிய விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்...

“கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ரௌடிகள் சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களில், ஏ ப்ளஸ் பிரிவிலுள்ள 39 பேரின் பட்டியலை முதற்கட்டமாக எடுத்திருக்கிறோம். சென்னையில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர்களின் நடவடிக்கைகளை தினமும் ரகசியமாகக் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்புவது இந்த ஆபரேஷனின் பணிகளில் ஒன்று. ஏற்கெனவே உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு, ரெளடிகள் ஒழிப்புப் பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை ரெளடிகளைப் பற்றி ரிப்போர்ட்களைக் கொடுத்துவருகின்றன. ஆனால், டேர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸார் மேற்கண்ட 39 ரெளடிகளின் ஒவ்வொரு மூவையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். ஒவ்வொரு ரெளடி முகாமுக்கும் ‘ஷேடோ வாட்ச்’ போடப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன் உரையாடல்கள், கூட்டாளிகளின் நடவடிக்கைகள், குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள், கொடுக்கல் - வாங்கல், வங்கிப் பரிமாற்றங்கள் என எதுவும் டேர் ஆபரேஷனின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.

இவர்கள் தவிர சிறையிலிருக்கும் ரௌடிகள், தலைமறைவாக இருக்கும் ரௌடிகள், புதிதாக ரௌடிகளாகத் தலைதூக்குபவர்கள் ஆகியோரையும் இந்த ஆபரேஷன் கீழ் கொண்டுவந்திருக்கிறோம். இது போன்ற கண்காணிப்பின்போது ஒரு ரெளடி குற்றச் செயலைச் செய்ய ஆயத்தமாகும்போதே, நாங்கள் முன்கூட்டியே சுதாரித்து, அவரைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்துவிடுவோம். இதன் மூலம் ரெளடிகள் முடக்கப்படுவதுடன், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க முடியும்” என்றவர்கள், தங்கள் கண்காணிப்பு வளையத்திலுள்ள ரெளடிகளைப் பற்றியும் சில தகவல்களைச் சொன்னார்கள்.

“டேர் ஆபரேஷனில் இருக்கும் 39 ரெளடிகளின் பட்டியல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலில் தாங்கள் இருப்பது சம்பந்தப்பட்ட ரெளடிகளுக்குத் தெரிந்தால், அவர்கள் அலர்ட் ஆகிவிடவும், தலைமறைவாகிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, காவல்துறையிலுள்ள சில கறுப்பு ஆடுகள் மூலமாகத் தனது பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதை அறிந்த சம்பவக்கார ரெளடி ஒருவன், தனக்கு பதிலாக தனக்கு வலதுகரமாக இருக்கும் மற்றொரு ரெளடியை சரண்டராக வைத்திருக்கிறான். ஆனாலும், எங்கள் கண்காணிப்பிலிருந்து அவன் தப்ப முடியாது. விரைவில் அவனைக் கைதுசெய்துவிடுவோம். அதேபோல வடசென்னையைச் சேர்ந்த ஊரின் பெயரை அடைமொழியாக வைத்திருக்கும் ஏ ப்ளஸ் பிரிவு ரௌடி, டெல்லியில் தலைமறைவாக இருந்தபடியே, தன் ஆட்களை இயக்கிவருகிறான். அவனது மூவையும் உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம். வடசென்னையைக் கலக்கிக்கொண்டிருந்த ரெளடி ஒருவன் கடந்த ஆட்சியின்போது, சிறையிலிருந்தபடியே சில சம்பவங்களை நடத்தியிருக்கிறான். அவனின் கூட்டாளிகளையும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். தென் சென்னையிலிருக்கும் ரௌடி ஒருவனுக்கும், வடசென்னையிலிருக்கும் ரௌடி ஒருவனுக்கும் இடையிலான மோதலில் இரு தரப்பிலும் அடிக்கடி கொலைகள் விழுகின்றன. இரண்டு டீமையும் மொத்தமாகச் சுற்றிவளைக்க பிளான் தயாராக உள்ளது. மொத்தத்தில் வெகுவிரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் ஆபரேஷன் டேர் திட்டத்தால், சென்னையில் ஒரு ரெளடியும் தலைதூக்க முடியாதபடி செய்துவிடுவோம்” என்றார்கள்.

ஆபரேஷன் டேர் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது பற்றி சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் கேட்டோம். “ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். அவர் வந்து சென்ற பிறகு இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்” என்றார் சுருக்கமாக!

ஆபரேஷன் டேர்! - ஆபத்தான 39 ரௌடிகளை சுற்றிவளைக்கும் போலீஸ்!

மறுவாழ்வு கேட்கும் ‘கல்வெட்டு’ ரவி!

வடசென்னையைக் கலக்கிய பிரபல ரௌடி ரவிசங்கர் என்கிற ‘கல்வெட்டு’ ரவி, ஜூலை 28-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு, மீடியாக்கள் பார்வையில் படாமல் மின்னல் வேகத்தில் கிளம்பிச் சென்றார். கடந்த பிப்ரவரி மாதம்தான் தனிப்படை போலீஸார் ரவியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த ரவி, போலீஸாரின் அதிரடித் திட்டங்களை அறிந்து, தான் திருந்தி வாழ்வதாகவும், மறுவாழ்வுக்கு உதவி செய்யும்படியும் போலீஸாரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் என்றார்கள் போலீஸார். ரவிக்கு நெருக்கமானவர்களோ, “அண்ணன் பா.ஜ.க-வில் தீவிர அரசியலில் ஈடுபடவிருப்பதாலேயே, போலீஸாரிடம் ரெளடியிசத்திலிருந்து ஒதுங்கிவிடுவதாக மனு கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism