Published:Updated:

`6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

`ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே அமைந்துள்ள கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக...’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில், ’தமிழகத்தின் நிரந்த முதல்வர் ஓ.பி.எஸ் ஐயா’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று காலை முதல் அ.தி.மு.க-வில் புயல் வீசுகிறது. சுமார் 11 அமைச்சர்கள் ஓ.பி.எஸ் வீட்டுக்கு நேரில் போனார்கள். அப்போது பேச்சுவார்த்தை நடந்தது. `நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளரா அல்லது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியா... சொல்லுங்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கிறார்... வேறு சிலர் பேசுகிறார்கள்... அப்படியானால் நான் எதற்கு?” என்று ஓ.பி.எஸ் கோபமாகக் கேட்டதாகத் தெரிகிறது.

அவரைக் காணச் சென்ற அமைச்சர்கள் அமைதியாக நிற்க...

``அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை இன்று மாலை 6 மணிக்குள் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மாவட்டப் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும். இல்லையென்றால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். என் வேலைகளை அவரே செய்கிறாரென்றால் நான் ஏன் அந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும்... ராஜினாமா செய்துவிட்டு, தொண்டனாகச் செயல்படுகிறேன்’’ ன்று ஓ.பி.எஸ் சொன்னதாக அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தனர். மேலும், இதே கருத்தை அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் போனில் தெரிவித்ததாகத் தெரிவித்தனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

ஓ.பி.எஸ்ஸுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், ` `முதல்வர் வேட்பாளர் எடப்பாடி’ என்கிற வகையில் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் இருவரையும் பதவியைவிட்டு விலக்க வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்து, `பேசாமல் இருங்கள்...’ என்று கையால் சைகை காட்டினார் ஓ.பி.எஸ்’ என்கிறார்கள்.

அங்கு இறுக்காமன சூழ்நிலை நிலவியதாம். ``நாங்கள் முதல்வரிடம் பேசிவிட்டு வருகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம். அதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் நேராக முதல்வர் எடப்பாடி வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே, அவரிடம் ஓ.பி.எஸ் சொன்ன கருத்துக்களைச் சொன்னார்களாம். அதன் தொடர்ச்சியாக, `விரைவில் முதல்வர் எடப்பாடியிடமிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்’ என்று அ.தி.மு.கழக அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

என்ன நடந்தது..?

2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஆளும் அ.தி.மு.க கட்சியில், `முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்விக்கு அனலாக விவாதம் அ.தி.மு.க -வில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ, ``சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்’’ என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, `எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தித் தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

போஸ்டர்
போஸ்டர்

இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதேபோல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி, எளிமையின் அடையாளமான முதல்வர்; இது, வலிமையான அரசு என்று நிரூபித்திருக்கிறார்’’ என்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு!

இந்த நிலையில் கடந்த 13 -ம் தேதி, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ` சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.

இதனிடையே சுதந்திர தினமான இன்று காலை, தேனி மக்களின் கண்களுக்கு `பளிச்’சென்று போஸ்டர்கள் தென்பட்டன. போடி, தேனி, பெரியகுளம் என... தேனியின் அனைத்துப் பகுதிகளின் முக்கியச் சந்திப்புகளில் அந்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே அமைந்துள்ள, `கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக...’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களில், `அம்மா ஆசி பெற்ற என்றென்றும் மக்கள் முதல்வர் ஓ.பி.எஸ்’ என்றும், மற்றொரு போஸ்டரில், `ஏழை எளியோரின் எளிய முதல்வர் ஓ.பி.எஸ். ஐயா’ என்றும், மற்றொரு போஸ்டரில், `தமிழகத்தின் நிரந்த முதல்வர் ஓ.பி.எஸ். ஐயா’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

பன்னீர் செல்வம் - பழனிசாமி
பன்னீர் செல்வம் - பழனிசாமி

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திவருவது பன்னீர் செல்வம் தரப்பைக் கொதிப்படையச் செய்திருப்பதாகவும், அதன் அடிப்படியில்தான் இந்த போஸ்டர் கலகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, `துணை முதல்வர் தரப்பிலிருந்து மூன்று முறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினார்கள். ஆனாலும், அவர் தொடர்ந்து வெளிப்படையாக, `முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்’ என்று பேசிவருகிறார்.

இது அ.தி.மு.க கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அடுத்ததாக, முக்கிய அமைச்சர்கள் 11 பேர் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல்வரையும் சந்தித்தனர். அடுத்தகட்ட அறிவிப்பு என்ன வரும் என்பதை அறிய அ.தி.மு.கழக வட்டாரம் பதைபதைப்புடன் காத்திருக்கிறது.

'யார் முதல்வர் வேட்பாளர்?' - அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து
அடுத்த கட்டுரைக்கு