Published:Updated:

தமிழகத்துக்கு `ஆரஞ்ச் அலர்ட்’ - மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும்!

தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Representation Image
Representation Image

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே மழைப்பொழிவு காணப்படுகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.