Published:Updated:

‘சமத்துவமின்மை சாகடிக்கிறது!’ - அதிரவைக்கும் ஆக்ஸ்பாம் அறிக்கை...

சமத்துவமின்மை சாகடிக்கிறது
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவமின்மை சாகடிக்கிறது

‘கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்ததால், இந்தியாவில் 84 சதவிகிதக் குடும்பங்களின் வருவாய் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது

‘சமத்துவமின்மை சாகடிக்கிறது!’ - அதிரவைக்கும் ஆக்ஸ்பாம் அறிக்கை...

‘கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்ததால், இந்தியாவில் 84 சதவிகிதக் குடும்பங்களின் வருவாய் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது

Published:Updated:
சமத்துவமின்மை சாகடிக்கிறது
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவமின்மை சாகடிக்கிறது

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் இழந்து, அன்றாட உணவுக்கே அல்லாடிப்போனார்கள் பல கோடி சாமானியர்கள். கொரோனாவுக்குப் போட்டியாக வறுமை வாரிச்சுருட்டிய உயிர்கள் ஏராளம். ஆனால், இதே காலகட்டத்தில் நாட்டில் ‘சூப்பர் ரிச்’, ‘டாலர் பில்லியனர்’ எனப்படும் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததுதான் நகைமுரண்!

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்திய மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம், ஜனவரி 16-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஸ்காட்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு தொடங்கிய அதே நாளில், ‘சமத்துவமின்மை சாகடிக்கிறது’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.

‘சமத்துவமின்மை சாகடிக்கிறது!’ - அதிரவைக்கும் ஆக்ஸ்பாம் அறிக்கை...

‘கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்ததால், இந்தியாவில் 84 சதவிகிதக் குடும்பங்களின் வருவாய் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 4 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை, உலக அளவில் உருவாகியிருக்கும் புதிய ஏழைகளின் எண்ணிக்கையில் சரிபாதி’ என்கிறது அறிக்கை. அதேநேரத்தில், இதற்கு முற்றிலும் மாறான ஒரு காட்சியைப் புள்ளிவிவரங்களுடன் படம்பிடித்துக்காட்டுகிறது அறிக்கை. ‘இந்தியாவில் 102-ஆக இருந்த பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, கொரோனா காலத்தில் 142-ஆக அதிகரித்துள்ளது. 23.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2020, மார்ச் முதல் 2021 நவம்பர் வரையிலான காலகட்டத்தில், 53.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது’’ என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அறிக்கை.

‘‘இந்தியாவில் 45 சதவிகித சொத்துகள் 10 பெரும் கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ளன. 50 சதவிகித இந்தியர்களிடம் வெறும் 6 சதவிகித சொத்துகளே உள்ளன. 98 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 55.5 கோடி மக்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்புக்கு இணையானது. மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பைவிட, இது 41 சதவிகிதம் அதிகம்’’ என்று சொல்லும் அறிக்கை, ‘‘இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்தால்கூட, அவர்களின் சொத்து முழுவதையும் செலவழித்து முடிப்பதற்கு 84 ஆண்டுகள் தேவைப்படும்’’ என்று அதிரவைக்கிறது.

``மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே இந்த முரண்பாட்டுக்குக் காரணம்’’ என்று சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம், ‘‘பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்திருக்கும் ‘சூப்பர் ரிச்’ பணக்காரர்களுக்கான சொத்து வரியை மத்திய அரசு ஒழித்துக்கட்டிவிட்டது. கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இதனால், பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்காமல், குறையவா செய்யும்? இன்னொருபுறம், மாதம் 2,000 ரூபாய் வருமானம்கூட இல்லாமல் 24 சதவிகிதக் குடும்பங்கள் இந்தியாவில் வாடுகின்றன. பணக்காரர்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்ததால், மத்திய அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பைச் சரிசெய்ய மறைமுக வரிகளை அதிகமாக விதித்து நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு. 98 பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒரு சதவிகிதம் வரி விதித்தாலே, மத்திய அரசின் கல்வித்துறைக்கு ஓராண்டுக்குத் தேவையான நிதி கிடைத்துவிடும். நான்கு சதவிகிதம் வரி விதித்தால், 17 ஆண்டுகளுக்கு மதிய உணவுத் திட்டத்துக்கான நிதி கிடைத்துவிடும். ஆனால், இதைச் செய்வதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை’’ என்றார் கொந்தளிப்புடன்!

ஆனால், ``ஆக்ஸ்பாம் அறிக்கையே உண்மைக்கு மாறானது’’ என்கிறார் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்... ‘‘வறுமை அதிகரித்துள்ளது என்ற பொய்யான கருத்துருவாக்கத்தை ஆக்ஸ்பாம் போன்ற அமைப்புகள் பல காலமாகச் செய்துவருகின்றன. கொரோனா காலத்தில், கிராமப்புறங்களில் வறுமை அதிகரிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏழைகளுக்குப் பல மாதங்கள் தொடர்ச்சியாக நிவாரண நிதியையும் உணவுப்பொருளையும் மத்திய அரசு வழங்கியது. நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. பருவமழை தவறாமல் பெய்ததால், விவசாயம் நன்றாக இருந்தது.

‘சமத்துவமின்மை சாகடிக்கிறது!’ - அதிரவைக்கும் ஆக்ஸ்பாம் அறிக்கை...
கனகராஜ்
ஷியாம் சேகர்
ஷியாம் சேகர்

பெருந்தொற்று பாதிப்புகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக, பணப்புழக்கத்தை அரசு அதிகரித்தது. இதனால், பலரது சேமிப்பு அதிகரித்து, அவர்கள் பல வகைகளில் முதலீடு செய்தனர். அதன் மூலமாக நிறுவன சொத்துகளுக்கு கிராக்கி அதிகரித்து, நிறுவன சொத்துகளின் மதிப்பும் அதிகரித்தது. பணப்புழக்கம் குறையும்போது, நிறுவன சொத்துகளின் மதிப்பு இயல்புநிலைக்கு வரும். எனவே, பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துவிட்டது என்று சொல்வது ஏற்கக்கூடியது அல்ல. அமெரிக்காவில் கார்ப்பரேட் வரியை 17 சதவிகிதமாகக் குறைத்துவிட்ட பிறகு, இங்கும் கார்ப்பரேட் வரியைக் குறைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது” என்றார்!

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது... இவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தால்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism