Published:Updated:

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

ஆக்சிஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சிஜன்

டெல்லி மட்டுமல்ல, வட மாநிலங்கள் பலவற்றின் கதி இதுதான். சிலிண்டர்களில் நிரப்ப ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகளை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள் மக்கள்.

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

டெல்லி மட்டுமல்ல, வட மாநிலங்கள் பலவற்றின் கதி இதுதான். சிலிண்டர்களில் நிரப்ப ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகளை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள் மக்கள்.

Published:Updated:
ஆக்சிஜன்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சிஜன்

*`இன்னும் இரண்டு மணி நேரத்திற்கான ஆக்சிஜன்தான் எங்களிடம் இருக்கிறது. எங்களுக்கு உதவுங்கள்' #SOSDelhi

* `ஆக்சிஜன் இல்லாததால், இங்கிருக்கும் 110 நோயாளிகளை வெளியேற்ற வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.'

* `யாரிடமாவது ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கிறதா? என் அப்பா மூச்சுத்திணறலுடன் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார்.'

இப்படியான ட்வீட்டுகள் கடந்த சில நாள்களாகப் பரவிக்கிடக்கின்றன. டெல்லியின் எல்லா மருத்துவமனைகளும் ஆக்சிஜனுக்காக மத்திய அமைச்சர்களையும், மாநில அரசையும் கையேந்தி நிற்கின்றன. மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் எல்லாவற்றிலும் கேட்டுவிட்டு, தற்போது தொழிற்சாலைகளிடம் உதவி கேட்டு நிற்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ``ஆக்சிஜனும் ஒரு டாங்கரும் உங்களிடம் இருக்குமானால், எங்களுக்கு உதவுங்கள். டெல்லிக்கு மத்திய தொகுப்பாயத்திலிருந்து தினமும் 378 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அதைத் தற்போது 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால், டெல்லியின் ஒருநாள் தேவை 700 மெட்ரிக் டன்'' என்கிறார் கெஜ்ரி. ஆனால், இது மேலும் அதிகரிக்கும் என்பதுதான் அவலம்.

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

டெல்லி மட்டுமல்ல, வட மாநிலங்கள் பலவற்றின் கதி இதுதான். சிலிண்டர்களில் நிரப்ப ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகளை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள் மக்கள். மருத்துவமனைகளோ, தங்களிடம் அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகளை `ஆக்சிஜன் இல்லை' என வீட்டுக்கு அனுப்பப் பார்க்கின்றன. ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் ஏற்றித் தொலைதூர நகரங்களுக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால், அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு.

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

உத்தரப்பிரதேசத்தின் நிலைதான் இருப்பதிலேயே பரிதாபம். `ஆக்சிஜன் குறைவாக இருப்பதாக யாரேனும் வதந்தி பரப்பினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆனால், அவர் அறிவித்த அதே தினத்தில், உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருக்கும் மேதாந்தா மருத்துவமனைக்கு 16 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல். மாநிலப் பேரிடர் நிவாரண நிதி மூலம் 39 மருத்துவமனைகளிலும், 855 சுகாதார நிலையங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவவிருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் நிறுவப்படும் வரைகூட யாரும் ஆக்சிஜன் குறித்துக் கேள்வி எழுப்பக்கூடாது என யோகி உத்தரவிடுவது அவரின் சர்வாதிகார மனநிலையையே காட்டுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முதல் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்தது. Air Liquide, Linde plc ஆகிய இரண்டு நிறுவனங்கள்தாம் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மருத்துவ ஆக்சிஜனை சப்ளை செய்கின்றன. அவர்கள் உடனடியாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் கட்டமைப்புகளை ஏற்படுத்தினார்கள்.நமக்கும் இப்படிச் செய்வதற்கு நிறைய அவகாசம் இருந்தது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருந்ததன் விளைவு, இப்போது மக்களின் மரணத்தில் முடிந்திருக்கிறது.

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

கடந்த அக்டோபர் மாதம் கொரோனா முதல் அலையின்போது, 162 PSA (pressure swing adsorption) ஆக்சிஜன் நிலையங்களுக்கு டெண்டர் அளித்தது மத்திய அரசு. காற்றை உறிஞ்சி, அதைச் செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனாக மாற்றும் தன்மை கொண்டவை இத்தகைய நிலையங்கள். மருத்துவமனைகளில் இவற்றை நிறுவினால், ஒரு மருத்துவமனையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். டெண்டர் விடப்பட்ட 162 நிலையங்களில், இன்றுவரை 33 நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இந்த ஏப்ரல், மே மாதங்களில் எஞ்சியுள்ள ஆக்சிஜன் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் 551 PSA ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் பிஎம் கேர்ஸ் நிதியில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. மாவட்டத் தலைநகரங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இவை நிறுவப்படும்.

மத்திய அரசு இப்போது 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஒரே நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைத் தீர்த்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்தியா ஒரு நாளில் 7,127 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனில் உள்ளது. ஆனால், 8,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் மருத்து வமனைகளின் தேவை என்பது இதைவிட அதிகமாக உள்ளது என்பதே பிரச்னை.

தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் என்பது வேறு, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வேறு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய சுகாதார அமைச்சகம். `தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்தினர் யாராவது மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க முன்வந்தால், அவர்களுக்கு 24 மணி நேரத்துக்குள் லைசென்ஸ் வழங்க வேண்டும்' என எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. அதை மாநில அரசுகளும் அலட்சியம் செய்தன, மத்திய அரசும் அதன்பின் என்ன நடந்தது எனக் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல புதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கவும் அந்த நேரத்தில் மத்திய அரசு ஏற்பாடுகள் செய்தது. கொரோனாத் தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தபோது இதை மறந்தேவிட்டார்கள். இப்போது புதிதாக 1,27,000 சிலிண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.

மருத்துவ ஆக்சிஜனைத் தயாரிப்பதும், அதைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருப்பதும், இந்தியா முழுக்க விநியோகிப்பதும் பெரிய சவால். க்ரையோஜெனிக் டேங்கர்களில் ஏற்றி அனுப்பி, அதை சிலிண்டர்களில் நிரப்பி விநியோகிக்க வேண்டும். டேங்கர்கள், சிலிண்டர்கள் என எல்லாவற்றுக்குமே தட்டுப்பாடு.

ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!
ஆக்சிஜன் வேண்டும்... ஏங்கித் தவிக்கும் இந்திய நுரையீரல்!

புதுமையான யோசனைகள் மட்டுமே இப்போது பிரச்னைகளைத் தீர்க்கும். உதாரணமாக மகாராஷ்டிர மாநிலம் பெரும் பற்றாக்குறையில் தவிக்கிறது. அங்கு ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் கிடைக்கிறது. டேங்கர் தட்டுப்பாட்டால், அதை அங்கிருந்து எடுத்துவருவது பெரும் சவாலாக இருக்கிறது. வேறுவழியின்றி அந்த ஸ்டீல் தொழிற்சாலை அருகிலேயே தற்காலிக மருத்துவமனை அமைக்கவுள்ளது மகாராஷ்டிர அரசு.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதே உண்மை. தமிழ்நாட்டின் ஒருநாள் உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன். தமிழ்நாட்டின் ஒருநாள் தேவை என்பது 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. அது இப்போது 310 டன்னாக உயர்ந்துள்ளது. போதுமான அளவு சேமித்து வைக்க வசதியும் மாநிலம் முழுக்க இருக்கிறது. தேவை அதிகமானால், கேரளா மற்றும் புதுச்சேரியிலிருந்து வாங்கிக்கொள்ள முடியும்.

இந்தியாவில் இப்போது தினமும் மூன்றரை லட்சம் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். அநேகமாக மே மாத மத்தியில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரக்கூடும் என்பது அச்சத்துக்குரிய கணிப்பு. அப்போது ஆக்சிஜன் தேவை இப்போது இருப்பது போல மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும். அதை சமாளிக்க நாம் தயாராக வேண்டும் என்பதே மருத்துவர்களின் எதிர்பார்ப்பு.

அதற்கான ஆயத்தப்பணிகளை இப்போதே மத்திய, மாநில அரசுகள் தொடங்கவேண்டும்.

இந்தியா செய்திருப்பவை!

திரவ ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாட்டைத் தவிர பிற பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடுவதை மத்திய அரசு தடை செய்திருக்கிறது.

 ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளை உடனடியாக ஆக்சிஜன் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்ல `ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.

 இந்தியா முழுக்க 1,172 க்ரையோஜெனிக் டேங்கர்கள் மட்டுமே உள்ளன. அதனால் நைட்ரஜன் மற்றும் ஆர்கன் டேங்கர் உள்ளிட்ட இதர டேங்கர்களையும் ஆக்சிஜன் கொண்டு செல்ல ஏற்றதாக மாற்றிவருகிறது அரசு. இதனால் 600 டேங்கர்கள் புதிதாகக் கிடைக்கும்.

 வெளிநாடுகளிலிருந்து க்ரையோஜெனிக் டேங்கர்களை இந்திய விமானப்படை விமானங்கள் கொண்டுவருகின்றன.

 தெற்கு டெல்லியில் இருக்கும் இந்தோ- திபெத்திய மருத்துவமனையை மீண்டும் திறந்திருக்கிறார்கள். இதன்மூலம் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 500 படுக்கைகள் டெல்லிக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.

விலை எகிறிய கான்சென்ட்ரேட்டர்!

ஆக்சிஜன் சிலிண்டர்களைப் போலவே இப்போது ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரைவிட சற்றே பெரிதாக இருக்கும் இது, காற்றிலிருந்து ஆக்சிஜனைத் தனியே பிரித்தெடுத்து சுவாசிக்கக் கொடுக்கும். வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கைகொடுக்கும். ஐ.சி.யு போகவேண்டிய சூழலில் இல்லாத எல்லோருக்கும் சிலிண்டருக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம். சிலிண்டர்களைப் போல இவற்றைத் தூக்கிக்கொண்டு திரிய வேண்டியதில்லை என்பதால், பலரின் விருப்பத் தேர்வாக இது இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இதன் விலை ரூ.50,000 இருந்தது. இப்போது 90,000. நிறைய பேர் இதை மாத வாடகைக்கு எடுப்பார்கள். முன்பு ரூ. 5,000-ஆக இருந்த மாத வாடகை இப்போது ரூ.20,000. நான்கு கான்சென்ட்ரேட்டர்களை வாடகைக்கு விடுவது வட இந்தியாவில் கொள்ளை பிசினஸ் ஆகிவிட்டது.

வெளிநாடுகளிலிருந்தே இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் தேவை அதிகரித்துள்ளதால், இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.