Published:Updated:

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

மதுரையில் தொடங்கிய இந்த அமைப்பு, நண்பர்களின் சங்கிலிப் பின்னலால் சென்னையிலும் செயல்படுகிறது.

பிரீமியம் ஸ்டோரி

நிகழ்வு-1

“முதியோர் காப்பகத்தில் உள்ள சிலருக்கு ஹியரிங் எய்டு வாங்கிக்கொடுக்க வேண்டும். இதற்கான உதவிகளை நண்பர்கள் அளிக்கலாம்’’ என்று நட்பு வட்டத்திலுள்ள வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குழுக்களில் பதிவிடுகிறார்கள்.

சில நாள்களில், ‘எல்லோருக்கும் ஹியரிங் எய்டு வழங்கி சந்தோஷமா இருக்காங்க. உதவியவர்களுக்கு நன்றி’ என்று, தாத்தா - பாட்டிகளின் படங்களுடன் வரவு செலவுக் கணக்குகளைப் பதிவிடுகிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

நிகழ்வு - 2

`சக்கிமங்கலத்தில் பூம் பூம் மாட்டுக்காரர் உள்ளிட்டவர்கள், ஊரடங்கு காரணமாக உணவில்லாமல், மாடுகளுக்குத் தீவனம்கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்’ எனப் பதிவு போட்ட சில நாள்களில், ‘உங்கள் உதவியால் 365 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைத் தொகுப்பும் அரிசியும், மாடுகளுக்குத் தீவனமும் வழங்கினோம்’ என்று பயனாளிகளின் பட்டியலும், உதவி செய்தவர்களின் பட்டியலும் செலவு விவரமும் பகிரப்படுகிறது.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

நிகழ்வு -3

`பெற்றோர் இல்லாத மாணவி, கல்லூரிக் கட்டணம் செலுத்தக் கோரியுள்ளார். விசாரித்ததில் கோரிக்கை உண்மையானது என உறுதி செய்யப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் அவருக்கான கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.’

இப்படிப் பல நிகழ்வுகள்... ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பதிவுகள்... இப்படித்தான் செயல்பட்டு உதவிக்கொண்டிருக்கிறார்கள் மதுரையிலுள்ள ‘படிக்கட்டுகள்’ குழுவினர்.

ஒரு பேராசிரியர், சில மாணவர்கள், பல தன்னார்வலர்களுடன் மதுரையில் தொடங்கி, தற்போது தமிழகம் முழுவதும் சேவை செய்துவருகிறது ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்தாலும், உதவி என்று இவர்களிடம் யாராவது கோரிக்கை வைத்துவிட்டால், உடனே உதவி தேவைப்படுபவர்கள் குறித்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வுசெய்து, உதவியும் போய்ச்சேர்ந்துவிடுகிறது.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

மதுரையில் தொடங்கிய இந்த அமைப்பு, நண்பர்களின் சங்கிலிப் பின்னலால் சென்னையிலும் செயல்படுகிறது. படிக்கட்டுகளின் முதன்மை நிர்வாகியும், தனியார் பொறியியற்கல்லூரிப் பேராசிரியருமான மலைச்சாமியிடம் பேசினேன், “மறைந்துவிட்ட என் அம்மாவின் நினைவாக தனிப்பட்ட முறையில் சின்னச் சின்ன உதவிகளைச் செய்துகொண்டிருந்தேன். என் மாணவர் கிஷோர்குமாரும் நண்பர்களுடன் உதவிகள் செய்து கொண்டிருந்தார்.

2012-ல் அவர் படிப்பு முடித்து வெளியில் செல்லும் நேரத்தில், கலந்துபேசி உதவிகளை இணைந்து செய்ய முடிவெடுத்தோம். மதுரையிலுள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் எம்.சி பள்ளியில் ஒருங்கிணைத்துக் கலந்துரையாடினோம். அவரவர் படிப்பு கெடாத வகையில், பார்க்கும் வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல், கிடைக்கும் நேரத்தில் எளிய மக்களுக்கு உதவ எங்களுடன் தன்னார்வலர்களாக வரலாம் என்று கேட்டுக்கொண்டோம். அப்படி ஆரம்பித்த படிக்கட்டுகளில் 350 தன்னார்வலர்களுடன் பயணம் நிற்காமல் தொடர்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

ஒரு சிலர் ஐ.டி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். சிலர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலோர் கல்லூரி மாணவ, மாணவிகள்தாம். என் வீட்டில் ஓர் அறையை அலுவலகமாகப் பயன்படுத்திவருகிறோம். நான்கு பேர் வேலைகளைப் பிரித்துக்கொள்கிறோம். கிஷோர்குமார் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் உதவி கேட்பவர்கள் பற்றிய விவரத்தைக் கூறி நண்பர்களிடம் நிதி உதவி கேட்பார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் மாரிக்குமார், அன்றாடம் வரும் கல்வி மற்றும் மருத்துவ உதவிக் கோரிக்கைகளை ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவிட்டு அதை நிர்வாகம் செய்வார். செல்வா என்பவர், எங்களுக்கு வரும் உதவிக் கோரிக்கைகளை நேரில் சென்று விசாரித்து அது உண்மையானதா என்று உறுதி செய்வார். நான் படிக்கட்டுகளின் பில், ஃபைல்களைப் பராமரிப்பது, உதவி கேட்டு வரும் கோரிக்கைகளைப் பதிவு செய்து விசாரிக்கச் சொல்வது, வரவு செலவு அறிக்கை தயாரிக்கும் வேலைகளைப் பார்க்கிறேன்.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!
அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

எங்களுக்கு உறுதுணையாக ஷான் ராஜ், சக்தி விவேகானந்தன், விக்னேஷ் கார்த்திக், கயல்விழி, சுப்பிரமணியன் ராமசாமி, சந்தோஷ், சிலம்பரசன் ஆகியோரும் ஆக்டிவான 350 தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். எங்கள் மூலம் ஆதரவற்ற 60 பேர் கல்வி கற்றுவருகிறார்கள். மாணவர்களின் படிப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு ஐயாயிரம் முதல் ஒரு லட்சம் வரை சிலருக்குக் கட்டணம் செலுத்துகிறோம். இல்லாமையை இல்லாமை ஆக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்” என்றார்.

படிக்கட்டுகளின் மற்றொரு நிர்வாகி, கிஷோர்குமார், “2012-ல காலேஜ் ஃபைனல் இயர் படிச்சிட்டிருக்கும்போது, ஒரு நிகழ்ச்சியில சீனியர் பேட்ச் மாணவர்கள் ஒரு அறிவுரை சொன்னாங்க. இனிமேல் நண்பர்கள் சந்திப்பை ஹோட்டல் போன்ற இடங்களில் வைத்துப் பணத்தை விரயம் செய்யாமல், ஆதரவற்றோருக்கு உதவுங்கள் என்றனர். அது மனசுக்குள்ள ஒரு தூண்டுதலை உண்டாக்கியது. குழுவா சேர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உதவ முடிவெடுத்தோம். அப்பதான் காலேஜ்லேருந்து வெளியே வந்த நேரம்; கையில் காசு இல்லை. அதனால, செலவில்லாமல் செய்யக்கூடிய உதவிகளாக, எளிய மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது என்று ஆரம்பித்தோம்.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

அந்தச் செயல்பாட்டால் எளிய மக்கள் எங்களிடம் உதவி கேட்க ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களிடம் உதவிகள் கேட்க ஆரம்பித்தோம். இந்த நிலையில்தான் இதேபோல் உதவிக்கொண்டிருந்த என் கல்லூரிப் பேராசிரியர் மலைச்சாமி சாருடன் இணைந்தோம். எங்கள் சேவையும், வரவு செலவில் நாங்கள் காட்டும் வெளிப் படைத்தன்மையும் பல புதிய நண்பர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கு. ஏற்கெனவே சென்னையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரின்போதும், கேரளா வெள்ளத்தின்போதும் நேரில் சென்று மக்களுக்கு உதவிகள் வழங்கினோம்.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!
அடித்தட்டு மக்களுக்கு உதவும் ‘படிக்கட்டுகள்’!

கைவிடப்பட்ட முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், ஹெச்.ஐ.வி பாதித்தவர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை மக்கள் இவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து உதவுகிறோம். குப்பைகளில் பொருட்கள் சேகரித்து வாழ்ந்துகொண்டிருந்த 100 குடும்பத்தினருக்கு கொரோனாவின்போது எந்த வருமானமும் இல்லை. அரசு உதவியும் போய்ச் சேரவில்லை. அவர்களுக்கு ஒரு மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினோம். வெளிநாடு சென்று விண்வெளிக் கல்வி கற்க வசதியில்லாத தேனி மாணவிக்கு நிதி வசூல் செய்து 1,50,000 ரூபாய் வழங்கினோம். கோவிட் காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு மாதத்தில் 6,500 உணவுப் பொட்டலங்களை விநியோகித்தோம். கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்ட 100 பார்வையற்ற குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைக்க ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தோம். மாவட்டத்தில் உள்ள தொழுநோயாளிகளைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தேவையான போர்வை, ஸ்வெட்டர் கொடுத்தோம்” - பரபரவென்று பட்டியலிடுகிறார்.

பொருத்தமாகத்தான் தன் அமைப்புக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் என்று உணர முடிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு