Published:Updated:

நிறம் மாறும் நீர்நிலை... அழிந்துவரும் உயிரினங்கள்... மீண்டும் மூச்சுவிடுமா பள்ளிக்கரணை?

பள்ளிக்கரணை
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கரணை

கடந்த பத்து ஆண்டுகளாக பெருங்குடிக் குப்பைக் கிடங்கைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அதனால் வந்த பிரச்னைகள்தான் இவை யெல்லாம்.

நிறம் மாறும் நீர்நிலை... அழிந்துவரும் உயிரினங்கள்... மீண்டும் மூச்சுவிடுமா பள்ளிக்கரணை?

கடந்த பத்து ஆண்டுகளாக பெருங்குடிக் குப்பைக் கிடங்கைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அதனால் வந்த பிரச்னைகள்தான் இவை யெல்லாம்.

Published:Updated:
பள்ளிக்கரணை
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு ‘ராம்சர்’ அங்கீகாரம் கொடுத்து அங்கீகரித்திருக் கிறது அதைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு. ஆனால், ``பெருங்குடி குப்பைக் கிடங்கின் பாதிப்பால், இந்தச் சிறப்பு அங்கீகாரமே ரத்தாகும் நிலை ஏற்படலாம்’’ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ராம்சர் அங்கீகாரம்

1971-ம் ஆண்டில் இரானிலுள்ள ராம்சர் நகரத்தில், உலகம் முழுவதுமிருக்கும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க சர்வதேச அளவில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்தானது. ராம்சர் உடன்படிக்கையின் கீழ் தமிழ்நாட்டில் ஏற்கெனவே கோடியக்கரை உள்ள நிலையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு ஆகிய சதுப்புநிலங்களுக்கு புதிதாக சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

நிறம் மாறும் நீர்நிலை... அழிந்துவரும் உயிரினங்கள்... மீண்டும் மூச்சுவிடுமா பள்ளிக்கரணை?

இதில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னை யின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புக் கட்டடங்கள், அரசின் அலட்சியம் காரணமாக முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. அதிலும், இந்த சதுப்பு நிலத்தின் மூச்சுக்குழாயை நெரிக்கும் முதல் கை பெருங்குடி குப்பைக் கிடங்கினுடையதே என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பெருங்குடியில் 1988-ம் ஆண்டு உருவான ஒரு சிறிய குப்பைமேடு, இப்போது 228 ஏக்கருக்கு விரிந்து, பெரும் குப்பை மண்டலமாக மாறியிருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 2,400 மெட்ரிக் டன் வரை தரம் பிரிக்காத குப்பைகள் கொட்டப்படுகின்றன. பெருங்குடி குப்பைக் கிடங்கின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், இந்தச் சிறப்பு அங்கீகாரம் முற்றிலும் பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிறம் மாறும் நீர்நிலை... அழிந்துவரும் உயிரினங்கள்... மீண்டும் மூச்சுவிடுமா பள்ளிக்கரணை?

நிறம் மாறும் நீர்நிலை!

சதுப்பு நீர் நிலை இளஞ்சிவப்பு வண்ணத்தில் மாறிவருவது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அண்மையில் ஓர் ஆய்வு நடத்தினர். அதில், “சயானோ பாக்டீரியா (Cyanobacteria) என்ற ஒரு வகை பாசியின் வளர்ச்சியே நீர்நிலை இளஞ்சிவப்பு வண்ணத்தில் மாறக் காரணம்” என்று கண்டறியப்பட்டது. “கடந்த ஏப்ரல் மாதம், 26-ம் தேதி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கரத் தீயை அணைக்கப் பயன்படுத்திய வேதிப்பொருள்கள், குப்பையின் நச்சு ஆகியவை சேர்ந்துதான், நீர் நிலையின் தன்மையை முழுமையாக மாற்றியிருக்கிறது” என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சுந்தரராஜன்
சுந்தரராஜன்

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சீர்செய்ய எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் கேட்டோம். “பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் வாழ்ந்த 50 வகை மீன் இனங்கள், 65 வகை வலசைப் பறவைகள் என 400-க்கும் அதிகமான உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து, அருகிவருகின்றன. இதற்காகப் பல முன்னெடுப்புகளை எடுத்தபோதும், அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ராம்சர் அங்கீகாரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்காகப் போராடும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம், சர்வதேச சூழல் ஆர்வலர்களின் பார்வை பள்ளிக்கரணைமீது விழுவதுடன், அதைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களும், நிதியுதவியும் கிடைக்கும். குறிப்பாக, அதனுள் இருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கின் வளர்ச்சி தடுக்கப்படும். இதைச் செய்தாலே, பள்ளிக்கரணை சதுப்புநிலம் மீண்டும் மூச்சுவிடத் தொடங்கி, மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்யத் தொடங்கிவிடும். அதேநேரத்தில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து குப்பைகளை அகற்றும் வரை பெருங்குடிக் குப்பைக் கிடங்கால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. ஒருவேளை சதுப்பு நிலம் சரியாகப் பாதுகாக்கப்படாமல் இருந்தால், பராமரிக்கப்படாத ஈரநிலங்கள் (Montreux Record) என்ற பதிவின் கீழ் வந்துவிடும். சிறப்பு அங்கீகாரமும் நம் கையைவிட்டு நழுவிவிடும். சர்வதேச அளவில் அப்படியான அவமானம் ஏற்படுவதற்கு முன்பு, சதுப்புநிலத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை வேண்டும்” என்றார்.

மெய்யநாதன்
மெய்யநாதன்

இது குறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கேட்டபோது, “கடந்த பத்து ஆண்டுகளாக பெருங்குடிக் குப்பைக் கிடங்கைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அதனால் வந்த பிரச்னைகள்தான் இவை யெல்லாம். அவற்றைச் சரிசெய்து பெருங்குடி குப்பைக் கிடங்கை, ‘பயோ மைனிங்’ முறையில் சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. நகர்ப்புற வளர்ச்சித் துறையோடு இணைந்து சுற்றுச்சூழல் துறையும் அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றன. ‘பயோ மைனிங்’ முறையில் இதுவரை 53 இடங்கள் சீர்செய்யப் பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் மியாவாக்கி முறையில் அடர் வனங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. விரைவில் மீதமுள்ள 90 இடங்களையும் சீர்செய்து அடர் வனங்களை ஏற்படுத்துவோம். இந்தப் பணிகள் நிறைவடைய இரண்டாண்டு களாகும். இது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தையும் பாதுகாக்கும். குப்பைக் கிடங்கால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த மருத்துவ முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இயற்கை நம்மைக் கைவிடும் முன்பு, ஏதாவது செய்யுங்கள்!