Published:Updated:

“பனையால் இணைவோம்!”

குடும்பத்துடன் பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் பாண்டியன்

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கரிஷ்மாவும் பாண்டியனும் பனந்தோப்புக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்குப் பத்துமரம் ஏறி, பாளையைச் சீவிவிட்டு, சேர்ந்த பதநீரை இறக்குகிறார்கள்.

“பனையால் இணைவோம்!”

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கரிஷ்மாவும் பாண்டியனும் பனந்தோப்புக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்குப் பத்துமரம் ஏறி, பாளையைச் சீவிவிட்டு, சேர்ந்த பதநீரை இறக்குகிறார்கள்.

Published:Updated:
குடும்பத்துடன் பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் பாண்டியன்

“அதுவரைக்கும் பாக்காத வறட்சி தோழர் அது. வயக்காடெல்லாம் காஞ்சுபோச்சு. போட்ட பயிரு மாடுங்களுக்குத் தீவனமாக்கூட தேறலே. நாளைக்கு என்ன செய்யலாம்னு திகைச்சு நின்னப்போ என் மனைவிதான் சொன்னா, ‘150 பனைமரங்க இருக்கே... அதைவெச்சுப் பிழைக்க முடியாதா'ன்னு. அந்த வார்த்தைகளைப் புடிச்சுக்கிட்டு, ‘நீதான் தாயே எங்களைக் காப்பாத்தணும்'னு பனையோட காலடியில போய் நின்னேன்... இன்னைக்கு வரைக்கும் வயிறு காயாமக் காப்பாத்திக்கிட்டிருக்கு...’’ பனையை சினேகமாகப் பற்றியபடி புன்னகைக்கிறார் பாண்டியன்.

‘பாண்டியன் பனையேறி' என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர், பனைப் பொருள்களை முழுமையாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறார். சிதறிக்கிடந்த பனையேறிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகவும் முன்னிற்கிறார்.

பாண்டியன், விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரைச் சேர்ந்தவர். பனையேறுதல் மரபுத்தொழில் என்றாலும் 38 வயதுவரை பனையின் நிழலில்கூட ஒதுங்காமல் வாழ்ந்தவர். காலம் இறுதியில் அவரை பனைக்காகக் களமாட வைத்திருக்கிறது.

‘‘எங்க ஊரைச்சுத்தி அம்பதாயிரத்துக்கும் மேல பனை மரங்கள் இருக்கு. அந்தக்காலத்துல 200 குடும்பங்களுக்கும் அதுதான் வாழ்க்கை. இடையில எல்லாம் மாறிப்போச்சு. பல பேரு ஊரைக் காலி பண்ணிட்டு சேலம் பக்கம் கிளம்பிட்டாங்க. இப்போ காலம் திரும்பவும் எல்லாரையும் இங்கே கூட்டிட்டு வந்திருக்கு. 80 பேரு பனைத்தொழில் செய்றோம். சாயங்காலமானா இந்தப் பனங்காடெல்லாம் மனிதத் தலைகளா தெரியும்...’’ உற்சாகமாகச் சொல்கிறார் பாண்டியன்.

“பனையால் இணைவோம்!”

பாண்டியனை நரசிங்கனூரின் எல்லையை ஒட்டியிருக்கும் பனங்காட்டில் சந்தித்தோம். பனஞ்சப்பைகளைப் பொருத்திப் பனையோலைகள் போர்த்திய ஒரு குடிசை... அதையொட்டி விசாலமான வெளி... அவ்வளவு வெயிலுக்கும் இதமாக இருந்தது அந்த இடம். சுற்றிலும் பதநீர் இறக்கும் பானைகள், வெல்லம் காய்ச்சும் உபகரணங்கள், பனையோலைக் கலைப்பொருள்கள், பனம்பழங்கள், பனங்கிழங்குப் பதியங்கள். பாண்டியன் மட்டுமல்ல... அவரின் 13 வயது மகள் கரிஷ்மாவும் 11 வயது மருமகன் செர்லினும் பனையேறிகள்தான்.

முள் முருங்கைக் கட்டையில் வெள்ளைக்கல் தூளைத் தூவி, பாளைக்கத்தியை அழுந்தத்் தீட்டிக்கொண்டே பேசுகிறார் பாண்டியன்.

‘‘இந்தக் கத்தியை மூணு வேளையும் தீட்டணும். தீட்டத்தீட்ட பாலீஷ் ஆயிடும். பாளையில அரிவாளை வச்சா பூப்போல சீவணும். அப்படிச்சீவுனாதான் சொட்டு தெளிவா வடியும். கைக்கத்தின்னு ஒண்ணு இருக்கு. மட்டை வெட்ட, ஓலை கழிக்க அதுதான். பனை மரத்துல எல்லாப்பக்கமும் ஈட்டி மாதிரி கருக்கு இருக்கும். துளி கவனம் பெசகினாலும் வெட்டித்தள்ளிரும். பாம்பு, தேள், பூரானும் இருக்கும். பதநிக்கு மலைத்தேனீ தேடிவரும். கதண்டுகளும் இருக்கும். இதெல்லாம் கொத்தினா உயிருக்கே ஆபத்து’’ - ஆபத்துகளை விளக்குகிறார் பாண்டியன்.

“பனையால் இணைவோம்!”

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கரிஷ்மாவும் பாண்டியனும் பனந்தோப்புக்கு வந்துவிடுகிறார்கள். ஆளுக்குப் பத்துமரம் ஏறி, பாளையைச் சீவிவிட்டு, சேர்ந்த பதநீரை இறக்குகிறார்கள். அதை வாங்க பாட்டில்களோடு வந்து காத்திருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்குக் கொடுத்து மிஞ்சியது அதிகமிருந்தால் அப்போதே பாத்திரத்தில் ஊற்றி வெல்லமாக்கிவிடுகிறார்கள். இந்தப் பனை வெல்லத்தை வாங்க மாவட்டம் விட்டு மாவட்டமெல்லாம் வருகிறார்கள்.

‘‘பதநீ, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, வெல்லம், கல்கண்டுன்னு காலம் முழுவதும் பனையில இருந்து வருமானம் இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் அடிப்படையா இருந்தது கள்ளுதான். கள் தடை செய்யப்பட்ட பிறகு, பனையேறிகள் எல்லாருமே பயந்து பயந்து வாழ வேண்டியதாப்போச்சு. எங்க தாத்தா கம்பீரமா இருப்பாரு. ஊர்ல நல்லது கெட்டதுலலெல்லாம் அவர்தான் முன்னாடி நிப்பார். அந்த மனுஷன் ஒரு சின்ன வயசு போலீஸ்காரர் கால்ல விழுந்து கெஞ்சுறதைப் பாத்து, இந்தத் தொழில் மேல வெறுப்பு வந்திருச்சு. லேப் டெக்னீஷியன் படிச்சுட்டு ஒரு ஆஸ்பத்திரியில வேலை பாத்தேன். ஆனாலும் அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிற வாழ்க்கை அலுத்துப்போச்சு. ஏதாவது செய்யணும்னு யோசிக்கும்போதே திருமணம் செஞ்சுவச்சுட்டாங்க. கல்யாணம் என் கனவுகளுக்கும் தேடல்களுக்கும் பெரும் தொடக்கமா அமைஞ்சுச்சு.

“பனையால் இணைவோம்!”

என் மனைவிதான், ‘எதுவானாலும் பரவாயில்லை... வேலையை விட்டுட்டு வாங்க... நீங்க ஆசைப்படுற மாதிரி ஏதாவது செய்யலாம்'னு கூண்டைத் திறந்து விட்டா. இத்தனைக்கும் அவ நகரத்துல வளர்ந்தவ. விவசாயம் செய்யப்போறேன்னு சொன்னப்போ, ‘இருக்கிற வயல்ல உங்க அப்பா விவசாயம் செய்யாதேங்கிறார். இந்தாங்க நகை... வித்துட்டு சொந்தமா நிலம் வாங்கிப்பண்ணுங்க'ன்னு கொடுத்தா. நம்மாழ்வார் அய்யா வழிகாட்டுதல்ல இயற்கை விவசாயம் செஞ்சேன். ஒரு கட்டத்துல திடீர்னு அடிச்ச பெருமழையும் அதோட சேர்ந்து வந்த வறட்சியும் விவசாயத்தை இல்லாமப் பண்ணிடுச்சு. அப்போதான் பனை இருக்கு... பாத்துக்கலாம்னா என் மனைவி’’ - ஏணியை எடுத்தபடி பதநீர்ப் பானை கட்டிய பனைகளை நோக்கி நடக்கிறார் பாண்டியன்.

“பனையேறுறது எங்க மரபுத்தொழில். சங்க இலக்கியத்திலயே எங்களைப் பத்தி பாடியிருக்காங்க. ஆனா குற்றவாளி மாதிரி எங்க அடையாளத்தை மாத்திட்டாங்க. முதல் வேலையா பனையேறிகள்கிட்ட இருந்து அச்சத்தைப் போக்கினேன். ‘இது நம்ம பாரம்பர்ய தொழில்... எதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு செய்யணும். நேர்மையா செய்வோம். வழக்குப் போட்டா எதிர்கொள்வோம்’ன்னு முடிவு பண்ணி இப்போ 80 பேர் பனையேறிக்கிட்டிருக்கோம்’’ - நுரை ததும்பப் பதநீரை வடிகட்டியபடியே பேசுகிறார் பாண்டியன்.

“பனையால் இணைவோம்!”

கரிஷ்மா 12 வயதிலிருந்தே பனை ஏறுகிறார். பாளை வெட்டி பதநீர் எடுக்கும் வரை எல்லா நுட்பமும் கற்று வைத்திருக்கிறார். அவர் வடகயிற்றை ஏற்றி இறக்கித் தொங்கி ஏறுவதைப் பார்க்க நமக்குப் பதற்றமாக இருக்கிறது.

‘‘அவளுக்கு இந்தத்தொழில் மேல அவ்வளவு ஈடுபாடு தோழர். இவளை மாதிரி இன்னைக்கு நிறைய குழந்தைகள் ஆர்வமா இருக்காங்க. சொம்புல சோப்பு நுரையைப் போட்டு சின்ன மரங்கள்ல கட்டி பதநீர் இறக்கி விளையாடுறாங்க. பனைத்தொழிலோட ஜீவாதாரமே கள்ளுதான் தோழர். அதை இல்லாமச் செஞ்சுட்டு `பனையைக் காப்பாத்துறோம், பனைவிதை தர்றோம்’னு சொல்றதால ஒரு பயனும் இல்லை” - மகள் பனையேறி இறங்குவதைப் பார்த்துக்கொண்டே ஆதங்கமாகக் கேள்வி எழுப்புகிறார் பாண்டியன்.

“பனையால் இணைவோம்!”

‘‘பனையை நம்பி தைரியமா வாழலாம். அதோட ஒவ்வொரு அங்கமும் நமக்கு வாழ்வாதாரம். ஆனா அந்த பந்தத்தைத் திட்டமிட்டு அழித்தொழிக்கப் பாக்குறாங்க. நாங்க விடுறதாயில்லை. இப்போ யாரும் போலீஸுக்கு லஞ்சம் கொடுக்கக்கூடாதுன்னு முடிவு செஞ்சுட்டோம். வழக்குப் போடணும்னா எது சரியான பிரிவோ அதுல போட்டுக்கோங்கன்னு சொல்லிட்டோம். பனை ஏறுவதையே போராட்ட வடிவமா மாத்தியிருக்கோம். நிச்சயம் இந்த அரசு எங்களை முழுமையா அங்கீகரிக்கும். சுதந்திரமா நாங்க தொழில் செய்வோம்...’’

நம்பிக்கையோடு சொல்லிவிட்டு, பதநீர் கொதிக்கும் அடுப்பைத் தூண்டி எரிய வைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism