Published:Updated:

விறகு அடுப்பு... அல்வா, பால்கோவா, இடியாப்பம், கொழுக்கட்டை... அத்தனையும் பனங்கிழங்கில்!

 கார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகேயன்

#Utility

னங்கிழங்கில் பலகாரங்கள்... ஆச்சர்யமாக இருக்கிறதுதானே? நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாகக் கொண்டு, விறகு அடுப்பில் அல்வா, பர்ஃபி, பால்கோவா, சாக்லேட் மற்றும் தீபாவளி பலகாரங்களான முறுக்கு, அதிரசம் போன்றவற்றைத் தயாரித்து அசத்துகிறார் தமிழாசிரியர் கார்த்திகேயன்.

“தமிழர்களின் விருந்து உபசரிப்பில் முக்கிய இடம் வகித்தது பனங்கிழங்கு என்பது பலரும் அறியாத ஒன்று. உண்ட உணவை எளிதாகச் செரிக்கவைப்பதில் பனங் கிழங்குக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை நம் முன்னோர்கள் அனுபவத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.

எளிதாக, விலை மலிவாகக் கிடைப் பதாலேயே ஏளனப் பார்வையுடன் நாம் கடக்கும் பனங்கிழங்கு, பல ஆரோக்கிய பலன்களைத் தரவல்லது. நார்ச்சத்து, மாவுச்சத்து உள்ள பனங்கிழங்குடன் வெல்லம், கருப்பட்டி இணையும்போது இரும்புச்சத்தும் கூடுதலாகக் கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்துகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதோடு உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்தெடுத்து வெளியேற்றுகிறது. மேலும், பசியைத் தூண்டுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பது என, இப்படிப் பனங்கிழங்கின் அருமைகளையும் ருசியையும் மக்களுக்கு வெளிப்படுத்தும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருகிறேன். பனங்கிழங்கை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, சுவையான சிற்றுணவாகவும், இனிப்புப் பண்டங்களாகவும் தயாரித்து, விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளுக்கு வழங்குகிறேன்” என்கிறார்.

விறகு அடுப்பு... அல்வா, பால்கோவா, இடியாப்பம், கொழுக்கட்டை... அத்தனையும் பனங்கிழங்கில்!

பனங்கிழங்கைப் பறித்து, சுத்தப்படுத்தி, வேகவைத்து, நன்கு உலரவைத்து, மாவாக்கி அதை மூலப்பொருளாகப் பயன் படுத்துகிறார். அதைக்கொண்டு 10 வகையான பலகாரங்களைத் தயார் செய்கிறார். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கும் வகையில் அமைந்துள்ளன.

``வழக்கமாக, பனைமரங்கள் அதிகமிருக்கும் நாகை மாவட்டத்து ஊர்களில் ஒரு பனங்கிழங்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகத் தயார் செய்யும்போது, ஒரு கிழங்கு சுமார் இரண்டு ரூபாய் எனும் வகையில் இதன் விலை பன்மடங்கு கூடுகிறது'' என்கிற கார்த்திகேயன், தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்றும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“பனங்கிழங்கு மாவோடு நாட்டு வெல்லம் சேர்த்து பர்ஃபி மற்றும் அல்வா தயார் செய்கிறேன். மேலும் பனங்கிழங்கு மாவு, பால், நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்து பால்கோவா செய்கிறேன். இந்த மாவோடு, பால் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து சாக்லேட் செய்கிறேன். கொழுக்கட்டை, இடியாப்பம், தோசை மாவு, முறுக்கு, அதிரசம் போன்ற 10 வகையான உணவுப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்கிறேன். இன்னும் 15 வகையான உணவுப் பொருள்களைத் தயாரித்து கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சியில் இருக்கி றேன்’’ என்கிறவருக்கு வாழ்த்துகள் சொன்னோம்.

கார்த்திகேயனிடம் பனங்கிழங்கு உணவுப் பொருள்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டு கின்றனர். இந்தத் தீபாவளிக்கு 100 கிலோ ஸ்வீட்ஸுக்கு மேல் ஆர்டரை முடித்துக்கொடுத்துள்ள களைப்பில் இருக்கிறார் ஆசிரியர். ‘எங்க வீட்டுல குழந்தைங்களுக்கு இனிப்புகள், பெரியவங்களுக்கு இடியாப்பம், கொழுக்கட்டைன்னு எல்லாருக்கும் பனங்கிழங்கு உணவுகள் பிடிச்சுப்போச்சுங்க’ என்றபடி ஹேப்பி கஸ்டமர்களாக பனங்கிழங்கு பண்டங்களை வாங்கிச் செல்கிறார்கள் மக்கள்.

‘‘எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஐந்து பேரோடு இன்னும் இரண்டு உதவியாளர்களுடன் நடைபெறும் இந்தத் தொழில் மூலம், மாதம் எல்லா செலவுகளும் போக 20,000 ரூபாய் கிடைக்கிறது. ருசியும் ஆரோக்கியமும் ஒருங்கிணைந்து தரும் பனங்கிழங்கு உணவுகளைத் தயார் செய்வதால், லாபத்தைவிட அதிகமாக மனநிறைவு கிடைக்கிறது’’ என்கிறார் கார்த்திகேயன்.

பாரம்பர்ய உணவுகளை மறந்து ஃபாஸ்ட் ஃபுட்டுக்கு மக்கள் அடிமையாகிவரும் இந்தக் காலகட்டத்தில், உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்கும் பனங்கிழங்கின் முக்கியத்துவத்தை மீட்டுத் தரும் கார்த்திகேயனைப் பாராட்டுவோம்.

கார்த்திகேயன் சொல்லும் பனங்கிழங்கு ரெசிப்பிகளில் சில...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விறகு அடுப்பு... அல்வா, பால்கோவா, இடியாப்பம், கொழுக்கட்டை... அத்தனையும் பனங்கிழங்கில்!

பனங்கிழங்கு பர்ஃபி

தேவையானவை:

பனங்கிழங்கு மாவு - 250 கிராம்

பொடித்த

மண்டை வெல்லம் - 300 கிராம்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

நெய் - சிறிதளவு

செய்முறை: மண்டைவெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகுபதம் வரும்வரை காய்ச்சவும். பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், பனங் கிழங்கு மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். மாவும் பாகும் கலந்து மைசூர்பாகு பதம் வரும்போது, நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டி சமப்படுத்தவும். சிறிது நேரம் கழித்து விரும்பிய அளவு, வடிவத்தில் சிறு சிறு துண்டுகளாக்கவும். சுவையான, ஆரோக்கியமான பனங்கிழங்கு பர்ஃபி தயார்.

விறகு அடுப்பு... அல்வா, பால்கோவா, இடியாப்பம், கொழுக்கட்டை... அத்தனையும் பனங்கிழங்கில்!

பனங்கிழங்கு அல்வா

தேவையானவை:

பனங்கிழங்கு மாவு - 200 கிராம்

பொடித்த

மண்டை வெல்லம் - 400 கிராம்

நெய் - 100 கிராம்

கடலை எண்ணெய் - 100 மில்லி

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

ஜாதிக்காய்த்தூள் - சிறிதளவு

முந்திரி - 50 கிராம்

செய்முறை: பனங்கிழங்கு மாவில் அரை லிட்டர் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, வெல்லத்தை நன்கு முறுகலாகப் பாகு காய்ச்சவும். பின்னர் பனங்கிழங்கு மாவுக் கரைசலை மிதமான தீயில் கட்டிவிழாதபடி கைவிடாமல் கிளறவும். களி பதம் வரும்போது அதில் காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்துக் கிளறவும். மிதமான தீயிலேயே கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் அடிப்பிடிக்கும்போது சிறிது சிறிதாக கடலை எண்ணெய்விட்டு கிளறவும். அல்வா பதம் வரும்போது ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், முந்திரி சேர்த்து, சிறிது சிறிதாக நெய்விட்டுக் கிளறவும். பாத்திரத்தின் அடியில் ஒட்டாத அளவுக்கு அல்வா திரண்டு வரும்போது தட்டில் கொட்டி ஆறவிடவும்.