Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: ஒழுகும் கூரை... குளமாகும் பிரசவ வார்டு! - பந்தலுார் அரசு மருத்துவமனை அவலம்

பந்தலுார் அரசு மருத்துவமனை
பந்தலுார் அரசு மருத்துவமனை

கூரையில் ஒழுகும் நீரை பாத்திரங்கள் மூலம் சேகரித்து வெளியில் கொட்டுகின்றனர். கர்ப்பிணிகளும், பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்களும்‌ கடும்‌ சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

நாட்டின் விளிம்புநிலை மக்களுக்கான மருத்துவ சேவையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக பெருமை பேசப்பட்டாலும் பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வாழக்கூடிய மலைப்பிரதேசங்களில் அரசின் மருத்துவ சேவைகள் மிகவும் பின்தங்கியே இருப்பதாக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

பந்தலுார் அரசு மருத்துவமனை
பந்தலுார் அரசு மருத்துவமனை

நீலகிரியைப் பொறுத்தவரை 20 ஆண்டு போராட்டத்தின் பயனாக தற்போதுதான் மருத்துவக்கல்லூரிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரியில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தையேச் சார்ந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததும், போதுமான கட்டமைப்பு வசதிகளும் சரிவர இல்லாததே இதற்கு காரணம் என‌ மக்கள் கூறுகின்றனர்.

பந்தலுார் தாலுக்காவின் தலைமை மருத்துவமனையாக உள்ள பந்தலூர் அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மேற்கூரையால், மழைக்காலங்கள் தோறும் உள் நோயாளிகள் மழையில் நனைந்து அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை பிரசவ வார்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், கட்டில் மற்றும் தரை முழுவதும் நனைந்து, குளமாக காணப்படுகிறது. கூரையில் ஒழுகும் நீரை பாத்திரங்களை மூலம் சேகரித்து வெளியில் கொட்டுகின்றனர். கர்ப்பிணிகளும், பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்களும்‌ கடும்‌ சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

பந்தலுார் அரசு மருத்துவமனை
பந்தலுார் அரசு மருத்துவமனை

இது குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ``இந்த கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில டாக்டருங்க கிடையாது. டிஜிட்டல் எக்ஸ்ரே கிடையாது. ஒழுகும் கூரைய மாத்தச் சொல்லி பல வருஷமா கேட்டுட்டோம். எந்த பயனும் இல்ல. ஹெல்த் ஜே.டி, ``எங்ககிட்ட பணம் இல்ல... மக்கள் எல்லாம் சேர்ந்து பணம் வசூல் செய்து கொடுங்க. நாங்க புதுசா மாத்தி தாரோம்" என பதில் சொல்றாரு. நாங்க யாருகிட்ட போயி கேக்க முடியும் சார்" என வேதனையை கொட்டுகிறார்.

மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமியிடம் பேசினோம், ``மழை கொஞ்சம் அதிகமாக பேஞ்சதால, லேசா ஒழுக ஆரம்பிச்சிருச்சி. என்ஜினியர்ஸ் பாக்க போயிருக்காங்க.. உடனே கூரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு