கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

பந்தல் காதலன் சிவா!

பந்தல் சிவா
பிரீமியம் ஸ்டோரி
News
பந்தல் சிவா

தொழில்

மிழக அரசியல் களத்தில், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் துருவங்களாக இருந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரே நேரத்தில் செல்லக்குழந்தையாக ஒருவர் இருந்தாரென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அவர்களுக்கு மட்டுமல்ல... தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், சீமான் எனத் தமிழக அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடன் சிரித்துப் பேசி, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு வரக்கூடிய அளவுக்கு ஒருவர் செல்வாக்கோடு வலம்வருகிறார் என்பதை உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா?

பந்தல் காதலன் சிவா!

ஆனால், அப்படி ஒருவர் இருக்கிறார்.

‘கவியரசர்’ என்றால் கண்ணதாசனும், `நடிகர் திலகம்’ என்றால் சிவாஜி கணேசனும் நினைவுக்கு வருவதுபோல, இன்று தமிழகத்தில் ‘பந்தல்’ என்றால் அரசியல் கட்சியினரின் வாய் உடனடியாக உச்சரிக்கும் பெயரான, `பந்தல் சிவா’தான் அது. அரசியல் கட்சிகள் மாநாடு முதல் வி.வி.ஐ.பி-க்களின் வீட்டுத் திருமணங்கள் வரை பந்தல் அமைக்கும் பணியில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, இந்தத் தொழிலில் `தனி ஒருவனாக’த் திகழ்ந்துவருகிறார் அவர்.

தமிழகம் மட்டுமல்லாமல் இன்று நான்கு மாநிலங்களில் தன் தொழிலை விரிவுபடுத்தி, `திரையில் பிரமாண்டம் என்றால் எப்படி இயக்குநர் ஷங்கரோ, அதேபோல தரையில் பிரமாண்டமான விழா மேடைகள் என்றால் அது பந்தல் சிவாதான்’ எனப் பெயரெடுத்திருக்கிறார்.

ஒரு மழைநாளில் தஞ்சையில் அவரைச் சந்தித்தோம். தன்னுடைய பயணம் குறித்துப் பேசத் தொடங்கிய அவரின் குரலில் தெரிந்தது...கனிவு, எளிமை, இனிமை!

பந்தல் காதலன் சிவா!

‘`திருவாரூர் மாவட்டத்துல இருக்குற வடுவூர்தான் என்னோட சொந்த ஊரு. தாத்தா காலத்துல எங்க குடும்பம் உப்பு வணிகம்தான் செஞ்சிக்கிட்டு இருந்துச்சு. எங்க அப்பா ராமசாமி கண்டியர்தான் இந்தப் பந்தல் தொழிலுக்கு முதன்முறையா வந்தாரு. எங்க ஊருல நடக்குற திருமணங்கள், சின்னச் சின்ன அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கெல்லாம் எங்க அப்பாதான் பந்தல் போடுவாங்க. ஸ்கூல்ல படிக்கும்போது, அவர்கூட நானும் போவேன். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது பெரும்பாலும் சொந்தக்காரங்களாத்தான் இருப்பாங்க, அவங்க முருக்கு, சீடை, அதிரசம்னு எடுத்துக் கொடுப்பாங்க. ரொம்ப செல்லமா நலம் விசாரிப்பாங்க. அந்தச் சூழலும், அப்பாகூட சைக்கிள்ல போறதும் என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதனாலேயே, இந்தத் தொழில் மேல ஒரு காதல் வந்துடுச்சு. எங்க வீட்டுல என்கூடப் பிறந்தவங்க ரெண்டு பேரும் பெண்கள். நான் மட்டும்தான் ஆண். அதனால, பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.ஏ படிப்பு முடிஞ்சதும், நானும் எங்க அப்பாகூட சேர்ந்து தொழிலுக்கு வந்துட்டேன். ஆனா ஆரம்பத்துல, இந்தத் தொழில் ரொம்ப சாதாரணமாத்தான் தெரிஞ்சுது.

பிரதமர், முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களை, தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரமாண்டமான மேடைகள் அமைச்சு நடத்த ஆரம்பிச்ச அப்புறம்தான் இது பிரமாண்டமான தொழிலா மாறிச்சு. இந்த கலாசாரம் தமிழகத்துலதான் முதல்ல ஆரம்பிச்சுது. அந்த நேரத்துல, கிராமங்கள்ல வேலைகள் செஞ்சது மூலமா, எல்.கணேசன், கோ.சி.மணி, எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற மூத்த அரசியல்வாதிகளோட பழக்கம் எங்களுக்கு இருந்தது. அதன் மூலம், 1983-ம் வருஷம் வேதாரண்யத்துல நடந்த உப்புச் சத்தியாகிரக போராட்ட நினைவு விழாவுக்காக, அப்போதைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் வருகைக்கான வேலை எங்களுக்குக் கிடைச்சுது. அப்போ எங்க வேலையைப் பார்த்து பிரமிச்சுப்போன அரசு அதிகாரிகள், தொடர்ச்சியா அரசாங்க வேலைகள் எல்லாத்தையும் எங்களுக்கே கொடுக்க ஆரம்பிச்சாங்க.’’

பந்தல் காதலன் சிவா!

அரசியல் கட்சிகளுடனான பயணம் எப்போது ஆரம்பித்தது?

``அரசியல் கட்சிகளோடு சின்னச் சின்னக் கூட்டங்களுக்கு பந்தல் போட்டுட்டு இருந்த எங்களுக்கு, தி.மு.க-வுல இளைஞரணி மாநாடுகளுக்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி அன்பில் மூலமா எங்களுக்குக் கிடைச்சுது. அதற்குப் பிறகு, திருச்சியில் நடந்த தி.மு.க-வின் எல்லா மாநாடுகளுக்கும், தஞ்சாவூரில் நடந்த மண்டல மாநாடு, திருநெல்வேலியில் நடந்த இளைஞரணி மாநாடு, முரசொலி பவளவிழா மாநாடுனு எல்லாத்துக்கும் நான்தான் பந்தல் அமைச்சேன்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, 1992-ல திருநெல்வேலியில நடந்த அ.தி.மு.க-வோட வெற்றிவிழா மாநாட்டுக்குப் பந்தல் போடுற வாய்ப்பு கிடைச்சுது. அந்த மாநாட்டுல எங்க வேலையைப் பார்த்துட்டு அம்மா அசந்து போயிட்டாங்க. தமிழகம் முழுவதும் அவங்க சுற்றுப்பயணம் போனாங்க. அந்த மொத்த கான்ட்ராக்ட்டும் எங்களுக்குத்தான் கிடைச்சுது. அது மட்டுமில்லை... த.மா.கா., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சினு தமிழகத்துல பல கட்சிகளுக்குத் தொடக்க விழா மாநாடுக்குப் பந்தல் போட்டது நாங்கதான்.

பந்தல் காதலன் சிவா!

அரசாங்க வேலைகளைப் பொறுத்தவரை பிரதமர், குடியரசுத் தலைவர்கள் வருகைகள் முதல் கடைசியாக ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழா மாநாட்டு வேலைகள்கூட நாங்கதான் செஞ்சோம். கொடிசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டு வேலைகளையும் நாங்கதான் செஞ்சோம். அந்த அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. ஆந்திரா தலைநகர் அமராவதி தொடக்க விழா, அகில இந்திய அணு விஞ்ஞானிகள் மாநாட்டுக்கும் நாங்கதான் பந்தல் அமைச்சோம். அந்தப் பெருமை தமிழகத்துலேயே எங்களுக்குத்தான் கிடைச்சுது.

அரசியல் கட்சி மாநாடுகள், அரசு விழாக்கள் மட்டுமல்ல, திருமண விழாக்களுக்கும் வேலைகள் செஞ்சிருக்கோம். சின்னம்மா குடும்பத்துல மட்டும் இதுவரைக்கும் பத்து திருமணங்களுக்கு நான்தான் பந்தல் போட்டிருக்கேன். வைகோ மகன் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களின் வீட்டுத் திருமணங்களுக்கும் என்னைத்தான் கூப்பிடுவாங்க.’’

தலைவர்களுடனான அனுபவம் குறித்து..?

``பெரிய தலைவர்களோட எனக்குக் கிடைச்ச பழக்கத்துல, தலைவர் கலைஞர்கூட ஏற்பட்ட பழக்கம்தான் இந்தத் தொழில்மேல எனக்கு ஈர்ப்பை அதிகமாக்கிச்சு. அவரை நான் `அப்பா...’னுதான் கூப்பிடுவேன். திருவாரூர்ல இருந்து படிச்ச பையன் ஒருத்தன் இந்தத் தொழில் செய்யறான்னு என்மேல எப்போதும் அவருக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதுதான் என்னை இவ்வளவு தூரம் அழைச்சிக்கிட்டு வந்திருக்கு. அவரிடம் எனக்கு மிகவும் பிடிச்ச விஷயம், மாநாட்டுப் பந்தலில் ஒருமுறையாவது என் பெயரை உச்சரிச்சிடுவாரு. ஒரு கலைஞன் எதிர்பார்க்குறது அங்கீகாரம்தானே... இதுவரைக்கும் எனக்கு அவர் கையால நூறு பவுனுக்கு மேல நகை போட்டிருப்பாரு. ஆனாலும் மாநாட்டுப் பந்தலில் என் பெயரைச் சொல்லி நன்றி சொல்லும்போது வர்ற சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை.

பந்தல் காதலன் சிவா!

அதேமாதிரிதான் ஜெயலலிதா அம்மாவும். 1995-ல எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூர்ல நடந்தது. அந்த விழாவுக்கு நான்தான் பந்தல் போட்டேன். விழாவுக்கு வந்த அம்மா என்னைக் கூப்பிட்டு, ‘என்ன சிவா... உங்க ஊருன்னா மட்டும் ஸ்பெஷலா’னு சொல்லிச் சிரிச்சாங்க. பாராட்டிப் பேசினாங்க. அந்த மாநாட்டு வேலைக்குப் பிறகுதான், எங்க பிராண்ட் பிரபலமாக ஆரம்பிச்சுது.

வைகோ மகன் திருமணத்துக்கு கலிங்கப்பட்டியில் அவரின் தாத்தா காலத்து வீட்டை `செட்’ போட்டோம். வெளிநாட்டில் இருந்துவந்த வைகோவின் நண்பர் வீட்டுக்குப் போறதுக்கு பதிலா, திருமண மேடைக்குள் இறங்கிட்டாரு. வைகோ மேடையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமா இருந்தது.

மோடியின் தலைமையில் நடந்த இளந்தாமரை மாநாட்டு வேலைகளை ஏழு நாளில் யாராலும் செய்ய முடியாதுனு எல்லாரும் ஒதுங்கிக்கிட்டாங்க. ஆனா, நான் அந்த வேலையை ஒப்புக்கொண்டு செஞ்சு முடிச்சேன். அதுக்கு ராஜ்நாத் சிங், தன் கையால் பத்து பவுன் சங்கிலி போட்டார். மோடி எனக்குப் பொன்னாடை போத்தினார். அந்த அனுபவத்தையும் என்னால மறக்க முடியாது.

எல்லாவற்றையும்விட என் மகள் திருமணத்துக்கு வந்த தளபதி மு.க.ஸ்டாலின், `பந்தல் சிவா என் குடும்பத்தில் ஒருவர்’ என்று சொன்னதுதான் என் வாழ்வில் என்னால் மறக்க முடியாத பாராட்டு.’’

எல்லா தலைவர்களுடனும் இணக்கம்... எப்படிச் சாத்தியம்?

``நான் ஒருத்தர்கிட்ட பேசுறதை மத்தவங்ககிட்ட பேச மாட்டேன். அதேபோல, `கலைஞரைத் தெரியும்... அம்மாவைத் தெரியும்’னு யார்கிட்டயும் போய் நிக்க மாட்டேன். அதனாலதான் எல்லாருடைய விருப்பத்துக்குரியவனா நான் இருக்கேன்னு நினைக்கிறேன்.’’

நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

``கொஞ்சம் மேல வர வர, நான் பல பிரச்னைகளையும் சந்திச்சிருக்கேன். பொதுவா, என் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டு, அமைச்சர்களும் அதிகாரிகளும் எனக்கு எப்பவுமே பந்தல் அமைக்குறதுல நல்ல ஒத்துழைப்பு கொடுப்பாங்க. அதை நான் அதிகாரம் செய்வதாக சிலர் தவறா எழுதுவாங்க. ஆனா, தலைவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்கிறதால அதைக் கண்டுக்க மாட்டாங்க. அந்த மாதிரியான நேரங்கள்ல, எனக்குப் பக்கபலமா இருந்தது எங்க வீட்டுப் பெண்கள்தான். தவிர என் அக்கா பையன் சந்திரசேகர் ஆரம்பம் முதலே முப்பது வருடங்களாக எனக்கு உதவியாக இருக்கிறார்.’’

உங்கள் வெற்றி ரகசியம் என்ன?

``ஒவ்வொரு பந்தலையும் என் காதலியாகவே நினைக்கிறேன். நூறு சதவிகித ஈடுபாட்டோடு, என் சொந்த வீட்டைக் கட்டுவதைப்போல பார்த்துப் பார்த்துச் செதுக்கும் கலைஞனாகவே என்னை நான் உணர்கிறேன். தி.மு.க மாநாடு என்றால் ஒருமாத காலம் தி.மு.க-காரனாகவே மாறிவிடுவேன். அ.தி.மு.க மாநாடு என்றால் அ.தி.மு.க-காரனாகவே மாறிவிடுவேன். பெரிய குடும்பத்தில் பிறந்ததால் சகிப்புத்தன்மை அதிகம். காலத்துக்கு ஏற்றவாறு என்னை உடனடியாக அப்டேட் செய்துகொள்வேன். வேலையில்தான் வியப்பைக்காட்ட நினைப்பேன்; பணத்தை முன்னிறுத்த மாட்டேன். கலைநயங்களிலே அதிக கவனம் செலுத்துவேன். `இந்தத் தொழிலில் சிவாதான்’ என்று சொல்ல வேண்டும் என நினைத்தேன். சாதித்துவிட்டேன். தவிர, பல வருஷமா இந்தத் தொழில்ல இருக்கிற அனுபவத்தாலயும், என்கிட்ட இருக்கிற தொழிலாளர்களாலயும், தொழில்நுட்பக் கருவிகளாலயும் என்னால சாதிக்க முடியுது.’’