Published:Updated:

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட்

பிரீமியம் ஸ்டோரி

சிறு வீடு அது. அளவெடுத்ததுபோல் சமையலறை. அந்த இல்லத்தில் இருந்த அறுவரின் முகங்களிலும் அளவில்லா ஆனந்தம். மண்ணெண்ணெய் அடுப்பில், பால் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கூடவே, ஆனந்தக் கண்ணீரும். ஆம், அன்றைய தினம் அந்த அறுவருடைய அம்மாவின் நினைவு நாள். அத்தனை பேரும் சின்னச்சிறு குழந்தைகள். அதில் மாரியப்பன் மட்டுமே பதினெட்டு வயதைக் கடந்த இளைஞர். மாரியப்பனை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கடந்த 11.11.18 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘தந்தை ஓடிப்போனார்... தாய் புற்றுநோயால் மரணம்... நிஜ ஹீரோ!’ என்று தலைப்பிட்டு எழுதியிருந்தோமே. தந்தையும் தாயும் இல்லாமல், இருந்த வீடும் இடிந்து விழ... நடுத்தெருவில் தன் ஐந்து தம்பி, தங்கைகளை ஒற்றைத் தோளில் சுமந்து நின்றாரே... அதே நிஜ ஹீரோதான் இந்த மாரியப்பன்.

ஜூனியர் விகடனில் நாம் எழுதிய அந்தக் கட்டுரையால் மாரியப்பனின் மற்றும் அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையே மாறியிருக்கிறது. ஆம், மாரியப்பனுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கான சாவியை வாங்கிக் கொடுத்த கையுடன், அவர்களின் தாயின் நினைவு நாளிலேயே அந்த வீட்டில் அவர்களைக் குடிபுகவைத்தோம். அந்த நல்நிகழ்வின் அடையாளமாக பால் காய்ச்சினார்கள். அதைத்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளில் நீங்கள் படித்தீர்கள்!

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

மாரியப்பன் மற்றும் அவருடைய தம்பி, தங்கைகளைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம். ஓராண்டுக்கு முன்... பண்ணாரி (18), நாகராஜ் (15), தேவி (13), கார்த்திகாயினி (11), ஆறுமுகம் (9) என ஐந்து உடன்பிறப்புகளை தன் கரங்களால் அரவணைத்தபடி ஒரு திங்கள்கிழமை காலைப் பொழுதில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரிதவித்தபடி நின்றிருந்தார் மாரியப்பன். நமக்கு வித்தியாசமாகப் படவே... “என்ன தம்பி பிரச்னை?” என நாம் ஆறுதலாகக் கேட்க... அந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தது போல பொலபொலவென அந்தக் குழந்தைகளின் கண்களிலிருந்து நீர் ததும்பியது. பதறிப்போய் அவர்களை ஆற்றுப்படுத்தி விஷயத்தைக் கேட்டோம். மாரியப்பன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘எங்க அப்பா, எங்களை விட்டுட்டு ஓடிட்டாரு. அம்மா, புற்றுநோயில செத்துப்போச்சு. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புலதான் நாங்க இருந்தோம். அந்த வீடு பழசாயிட்டதால, புனரமைக்கிறதுக்காக இடிச்சிட்டாங்க. புதுசா அங்கயே வீடு வாங்குறதுக்காக எங்க அம்மா கொஞ்சம் பணம் கட்டியிருந்தது. இப்ப வேற இடத்துல ஒண்டுக்குடித்தனமா இருக்கோம். நாங்க ஆறு பேரு... அதிலேயும் மூணு பெண் குழந்தைகளை வெச்சிக்கிட்டு, தங்க சரியான இடமில்லாம... சாப்பாடு இல்லாம ரொம்ப தவிக்கிறோம். கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சிதான் இத்தனை நாள் காலம் தள்ளினேன். இப்ப ரொம்ப சிரமமாப்போச்சு. ஆறு பேரும் சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு அண்ணே... அதான், கலெக்டர்கிட்ட ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்’’ என்றபோது நமக்கும் நெஞ்சு அடைத்துக் கொண்டது. முதலில் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, கலெக்டரிடம் அவர்களை அறிமுகப்படுத்தி, விஷயத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னோம். இதைப் பற்றித்தான் அப்போது ஜூனியர் விகடன் இதழில் எழுதியிருந்தோம்.

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

ஜூ.வி-யில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ‘மாரியப்பனின் தம்பி, தங்கைகளை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்கவைக்கிறோம்’, ‘நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுக்கிறோம்’ ‘பொருளாதாரரீதியாக உதவி செய்கிறோம்’ என்று பலரிடமிருந்து விகடன் அலுவலகத்துக்கு அழைப்புகள் வந்தன. ஹாஸ்டலுக்கு அனுப்பி சகோதர, சகோதரிகளைப் பிரிய, மாரியப்பனுக்கு மனமில்லை. அத்தகைய உதவிகளை உரிய காரணம் சொல்லித் தவிர்த்துவிட்டார் மாரியப்பன்.

அவர்கள் ஏற்கெனவே குடியிருந்து, புனரமைப்புக்காக இடிக்கப்பட்ட, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் எப்படியாவது வீடு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தோம்.

ஈரோடு கலெக்டர் கதிரவனைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னோம். ‘`குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டதும் உதவி செய்கிறேன்’’ என்றார். தொடர்ந்து நம் கட்டுரையைப் படித்த சன் டி.வி நிர்வாகத்தினர், நம்மை தொடர்புகொண்டு பொருளாதாரரீதியாக மாரியப்பனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள். நடிகர் விஷால் நெறியாளராக இருந்து நடத்திய சன் டி.வி-யின் ‘நாம் ஒருவர்’ நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார் மாரியப்பன். அந்த நிகழ்ச்சி மூலமாகக் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாய் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகை மாரியப்பன் பெயரில் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள்.ஜி.ராஜன், ``எந்த உதவின்னாலும் நான் செய்றேன்’’ என்று 10,000 ரூபாய் மதிப்பில் மாரியப்பன் குடும்பத்தினருக்குப் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். மேலும், வீட்டின் வாடகையை சில மாதங்கள் கவனித்துக் கொள்வதாகவும் கூறினார். ஈரோடு ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பின் பிரதீப், ஒவ்வொரு மாதமும் சுமார் 3,000 ரூபாய்க்கான அரிசி, மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்து ஒத்தாசையாக இருந்துவருகிறார்.

இதற்கிடையே நம்மை தொடர்புகொண்ட மாரியப்பன், “அந்தக் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைக் கட்டி முடிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல மாற்றுவீடு கொடுக்கப் போறாங்களாம்’’ என்றார். மாரியப்பன் மற்றும் அவரின் தம்பி, தங்கைகளுடன் கலெக்டர் கதிரவனைச் சந்தித்தோம். ஏற்கெனவே மாரியப்பனின் தாய் கொஞ்சம் பணத்தைக் கட்டியிருந்த நிலையில், வீட்டுக்குக் கட்டவேண்டிய மீதித் தொகையான 50,000 ரூபாயை ஆட்சியர் நிதியிலிருந்து கொடுத்த கதிரவன், ‘‘வீடு கிடைச்சிடும். கவலைப்படாதீங்க. நீங்க எல்லாரும் நல்லா படிக்கணும்’’ என்று வழி அனுப்பினார்.

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

சொன்னபடியே மாரியப்பனுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடு கிடைத்தது. ஜூலை 6-ம் தேதி வீட்டின் சாவியை வாங்கி மாரியப்பனிடம் கொடுத்தோம். அதற்கு அடுத்த நாள் மாரியப்பனுடைய அம்மா மீனாட்சியின் முதல் நினைவுநாள். மீனாட்சியினுடைய கனவு அவர் இறந்த ஒரே வருடத்துக்குள் சாத்தியமானது. தன் தாயின் முதல் நினைவு நாளிலேயே அந்த வீட்டுக்கு பால் காய்ச்சி மாரியப்பன் தன் தம்பி, தங்கைகளுடன் குடியேறினார்.

மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த மாரியப்பன் நம்மிடம், “விகடன்ல என்னைப் பற்றி செய்தி வராமப்போயிருந்தா, எங்க நிலைமை யாருக்கும் தெரியாமப்போயிருக்கும். விகடனால் வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கை வந்திருக்கு. தம்பி, தங்கச்சிகளை நல்லபடியா படிக்கவெச்சு, நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். ஹவுஸிங் போர்டு வீட்டுக்காக எங்கம்மா கஷ்டப்பட்டு 25,000 ரூபா பணத்தைக் கட்டிடுச்சி. ‘புது வீட்ல நாம சந்தோஷமா இருப்போம்டா’னு சொல்லிக்கிட்டே இருக்கும். ஆனா, அதோட ஆசை நிறைவேறலை. புற்றுநோய் எமனா வந்து எங்கம்மாவைக் கொண்டுபோயிடுச்சு. எங்கம்மாவின் முதல் நினைவு நாளிலேயே அவங்களோட ஆசை நிறைவேறிடுச்சின்னு நினைக்கிறப்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு அண்ணா!’’ என நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

மாரியப்பனுடைய அம்மா மீனாட்சியின் கனவை பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் விகடன் நனவாக்கியிருக்கிறது. ஈரோடு, அன்னை சத்யா நகர், ஹவுஸிங் போர்டில் 465-ம் நம்பர் புது வீட்டில் பால் காய்ச்சி தன்னுடைய தம்பி, தங்கைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் மாரியப்பன்.

அன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465! - இது அன்பின் முகவரி!

ஆதரவற்றுத் தவிப்பவர்களுக்குத் தேவை, பற்றிக்கொள்ள ஒரு கரம்; ஆறுதலான ஒரு வார்த்தை. அது, ‘என்ன தம்பி பிரச்னை?’ என்பதுபோலவும் இருக்கலாம்!

வாழ்த்துகள் மாரியப்பன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு