Published:Updated:

`அதிகாலை தூக்கம்... நொடியில் நிகழ்ந்த விபத்து... முடங்கிய வாழ்க்கை!' - முத்தமிழின் கண்ணீர் கதை

முத்தமிழ்ச்செல்வன்

அந்தச் சில நிமிட தூக்கமே, முத்தமிழ்ச்செல்வனின் வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிப்போட்டிருக்கிறது.

`அதிகாலை தூக்கம்... நொடியில் நிகழ்ந்த விபத்து... முடங்கிய வாழ்க்கை!' - முத்தமிழின் கண்ணீர் கதை

அந்தச் சில நிமிட தூக்கமே, முத்தமிழ்ச்செல்வனின் வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிப்போட்டிருக்கிறது.

Published:Updated:
முத்தமிழ்ச்செல்வன்
மறக்க முடியாத மகிழ்ச்சியான நினைவுகளைத் தருவதில் ரயில் பயணம் எப்போதுமே தனித்துவமானது. அத்தகைய ரயில் பயணம்தான், முத்தமிழ்ச்செல்வன் என்ற இளைஞருக்கு எஞ்சிய வாழ்நாளுக்கான வலிமிகுந்த சுவடுகளை உண்டாக்கியிருக்கிறது. ஓர் அதிகாலைப் பொழுது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த அந்த விபத்து, இந்த இளைஞனின் கனவுகள் அனைத்தையும் வேருடன் அசைத்துப் பார்க்கும் விடியலாக அமைந்துவிட்டது.
முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன். துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்த இந்த இளைஞன், இன்று சிறிய வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். வீல்சேரில் கனத்த அமைதியுடன் உட்கார்ந்திருக்கும் முத்தமிழ்ச்செல்வனின் முகத்தில் சோகம் இழையோடுகிறது. இவரின் இரண்டு கால்களையும் பறித்த அந்த ரயில் பயணத்தில் என்னதான் நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஏழ்மையான குடும்பம். அப்பா சுவர் ஓவியம் வரையும் தொழிலாளி. நான் பிறந்தப்போ வேலைக்காக வெளிநாடு போனவர், அங்கேயே நிரந்தரமா தங்கிட்டார். 10 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்தவர், மறுபடியும் கொஞ்சநாள்லயே வெளிநாடு போயிட்டார். பிறகு எங்களைப் பார்க்க வராதவர், சில மாசத்துக்கு முன்புதான் காலமானார். அம்மாதான் வீட்டு நிர்வாகத்தை முழுசா கவனிச்சுகிட்டாங்க. சித்தாள் வேலைக்குப் போன அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. எனக்கு ரெண்டு அண்ணன், ரெண்டு அக்கா. நாலு பேருமே ஸ்கூல் படிப்பைக்கூட முடிக்கலை.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

அண்ணனுங்க ரெண்டு பேரும் சுவர் ஓவியம் வரையும் தொழில்தான் செய்றாங்க. நானாவது படிச்சு குடும்பத்தைக் காப்பாத்தணும்னு என்னைப் படிக்க வைக்க அண்ணனுங்க ரொம்பவே சிரமப்பட்டாங்க. மொத்தக் குடும்பமும் என்னை ரொம்பவே நம்பியிருந்துச்சு. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, ஸ்ரீபெரும்புதூர்ல ஒரு கார் கம்பெனியில 2018-ல் வேலைக்குச் சேர்ந்தேன். அதே வருஷம் டிசம்பர் மாசம் ஒரு எக்ஸாம் எழுத நாமக்கல் போனேன். ராத்திரி டிரெயின்ல போனேன். அடுத்த நாள் எக்ஸாம் எழுதிட்டு நைட்டே சென்னை நோக்கி வந்துகிட்டிருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ரயில் அரக்கோணத்துக்குப் பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துல மட்டும்தான் நிற்கும். அப்போ திருவள்ளூர்ல தங்கியிருந்தேன். அதனால, அரக்கோணத்துல இறங்கினாதான் லோக்கல் டிரெயின் பிடிச்சு திருவள்ளூர் போக முடியும். அப்போதான் காலையில சரியான நேரத்துக்கு வேலைக்குப் போக முடியும். போக வர ரெண்டு முறையும் அன்-ரிசர்வேஷன் கோச்ல நின்னுட்டேதான் டிராவல் செஞ்சேன். அதனால, ரொம்பவே களைப்பா இருந்துச்சு. நள்ளிரவில் எனக்கு உட்கார சீட் கிடைக்கவே அசந்துபோய் தூங்கிட்டேன்” - உரையாடலுக்கு இடைவெளிவிடும் முத்தமிழ்ச்செல்வனுக்கு, அந்தச் சில நிமிட தூக்கமே அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்ட விபத்துக்கு காரணமாகியிருக்கிறது.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

``திடீர்னு கண் முழிச்சுப் பார்த்தப்போ, ரயில் அரக்கோணத்தைத் தாண்டி போயிட்டிருந்துச்சு. பதறிப்போய் படிக்கட்டுக்கு வந்தேன். அதிகாலை 3 மணி. திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் வரவே, ரயில் நிற்கிற மாதிரி வேகம் குறைஞ்சது. அந்த ஸ்டேஷன்ல ரயில் நின்னுச்சுன்னா, ரூமுக்குப் போக எனக்குச் சுலபமா இருக்கும்னு நினைச்சேன். பின்னாடி இருந்த சிலர், `ரயில் இங்க நிற்கப்போகுது. நாங்களும் இறங்கணும். சீக்கிரம் இறங்கு’ன்னு என்னைப் பின்னாடி இருந்து தள்ளினாங்க. வழக்கத்துக்கு மாறா அந்த ஸ்டேஷன்ல ரயில் நிற்குதுனு நம்பி இறங்க ஆயத்தமானேன். திடீர்னு அதிர்வுடன் ரயில் வேகமெடுத்துடுச்சு. என் பின்னாடி இருந்தவங்க சுதாரிச்சுகிட்டதால யாரும் இறங்காம தப்பிச்சுட்டாங்க. ஆனா, பேலன்ஸ் கிடைக்காம தடுமாறி, பயணிச்ச ரயில்ல ரெண்டு பெட்டிகளுக்கு இடைப்பட்ட பகுதியில விழுந்துட்டேன்.

என் கால்கள் மட்டும் தண்டவாளத்துக்கு உள்ளே மாட்டிகிச்சு. நான் பயணிச்சது ரயிலின் தொடக்கத்துல இருக்கும் அன்-ரிசர்வேஷன் கோச். அதன் பின்னால இருந்த எல்லாப் பெட்டிகளின் சக்கரங்களும் என் ரெண்டு கால்கள் மேலயும் ஏறிடுச்சு. கால்கள் சிதைஞ்ச நிலையில், வலியில கதறினேன். சுயநினைவு நல்லாவே இருந்துச்சு. எதிர்புறத்தில் இருந்து ஒருத்தர் நகருனு கத்தினார். திரும்பிக்கூட பார்க்காம மெதுவா கால்களை நகர்த்தி அப்படியே சரியவே, அதே டிராக்ல இன்னொரு ரயில் என்னை உரசியபடியே போச்சு. முகம் தெரியாத அந்த நபர் குரல் கொடுக்காம இருந்திருந்தா, என் உடல்நிலை இன்னும் மோசமா பாதிக்கப்பட்டிருக்கும்.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

ரயில்வே போலீஸார் என்னை மீட்டு திருவள்ளூர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. அங்க முதலுதவி முடிஞ்சு, உடனே சென்னை ஸ்டான்லி கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். அதுக்குள் கால்கள்ல இருந்த செல்கள் இறந்துடுச்சாம். உடனடியா கால்களை நீக்கியாகணும்னு டாக்டர்கள் முடிவெத்தாங்க. அதுக்குள் என்னைப் பார்க்க வந்த குடும்பத்தினர் கதறினாங்க. அதுக்குப் பிறகு...” - கண்ணீர் ததும்ப விவரிக்கும் முத்தமிழ், மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியாகிறார். இரண்டு கால்களும் நீக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்தவர், சில தினங்களுக்குப் பிறகு கண் விழித்திருக்கிறார்.

``ரெண்டு மாசம் வரை அங்கேயே சிகிச்சையில் இருந்தேன். பிறகு டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன். இதுக்கிடைப்பட்ட நாள்கள்ல, இனி கால்கள் இல்லாம வாழ்றதுதான் யதார்த்தம்னு மனசளவில் ஏத்துகிட்டேன். பாத்ரூம் போறதுல இருந்து குளிக்க வைக்கிற வரை எனக்கான எல்லாத் தேவைகளையும் அம்மாதான் செய்துவிடுவாங்க. ஒரு வருஷத்துக்குப் பிறகு வீல்சேர் பயன்படுத்த ஆரம்பிச்சேன். பென்சில் ஆர்ட் கத்துகிட்டு இப்ப ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதா மாத்திக்கிறேன்.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

முன்பு அதிக எடையுடைய செயற்கை கால்களைக் கொஞ்சகாலம் பயன்படுத்தினேன். அதைப் பயன்படுத்தி படி ஏறவும் நடக்கவும் சிரமமா இருந்துச்சு. அதனால இப்ப செயற்கை கால்கள் பயன்படுத்தறதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்குது. அது வீட்டு வாடகைக்கு ஓரளவுக்கு உதவுது. ரெண்டாவது அண்ணன், அம்மா, நானும் ஒரே வீட்டில் வசிக்கறோம். அண்ணனோட வருமானம் போதலை. நான் வேலைக்குப் போக வேண்டிய சூழல். ஆனா, வீல்சேரில் இருந்தபடியே தனியார் வேலைக்குப் போறது சிரமம்.

எடை குறைவான ஹை டெக் செயற்கை கால்கள் பொருத்தினா, என்னால இயல்பா வெளி வேலைகளுக்குப் போக முடியும். அதுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். குடும்ப நிலைக்கு அவ்வளவு பணத்தை எங்களால் திரட்ட முடியாது. எனவே, தரமான செயற்கைக் கால்கள் பொறுத்த மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்கறேன். அப்படி நடந்தா, வேலைக்குப் போய் குடும்பத்துக்கு என்னாலான பங்களிப்பைக் கொடுப்பேன்" என்று உருக்கமாகக் கூறி முடிக்கிறார் முத்தமிழ்ச்செல்வன்.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

Note:

போராட்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் முத்தமிழ்ச்செல்வனுக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். முத்தமிழ்ச்செல்வன் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை முத்தமிழ்ச்செல்வனுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism