Published:Updated:

பகீர் ‘பாவாடை’க் கொள்ளையன்! - செல்லும் இடமெல்லாம் திருமணம்... பண்ணைத் தோட்டம்... ஊருக்கொரு வீடு...

பாவாடைக் கொள்ளையன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாவாடைக் கொள்ளையன்

பாவாடைக் கொள்ளையன் பல்வேறு ஊர்களில் வாங்கிக் குவித்த சொத்து விவரங்களை நெல்லை எஸ்.பி சரவணன் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது...

சட்டை அணியாத உடல்... அதில் வழுவழுப்பாகத் தேய்க்கப்பட்ட எண்ணெய்... இடுப்பில் பாவாடை. இதுதான் பாவாடைக் கொள்ளையன் பெஞ்சமினின் அடையாளம். மதுரை, விழுப்புரம், திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளையடித்து பல ஊர்களில் வீடுகள், நிலங்கள் வாங்கிப்போட்டு போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக இருந்த கொள்ளையனை வளைத்துப் பிடித்திருக்கிறது நெல்லை மாவட்ட காவல்துறை.

கடந்த புத்தாண்டு இரவு. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடி கிராமத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆம்ஸ்டர் சைலஸ் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் 51 சவரன் நகை, 80,000 ரூபாய் ரொக்கத்தைத் திருடிச் சென்றுவிட்டான். அதோடு நிற்கவில்லை அவன்... அதே ஊரில் அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றிருக்கிறான். அப்போது ஒரு வீட்டிலிருந்த முதியவர் சத்தம் போடவே... ஊரே களேபரமாகி, ஆளாளுக்குக் கொள்ளையனைத் தேடத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் போலீஸும் வந்து தேடியது. அதன் பிறகே சைலஸ் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது. அன்றைய இரவு கொள்ளையன் தப்பிவிட்டாலும், சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் அவனை மடக்கிப் பிடித்திருக்கிறது போலீஸ்.

பகீர் ‘பாவாடை’க் கொள்ளையன்! - செல்லும் இடமெல்லாம் திருமணம்... பண்ணைத் தோட்டம்... ஊருக்கொரு வீடு...

வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் அந்தக் கொள்ளையனின் ‘திருவிளையாடல்கள்’ குறித்துப் பேசினோம்... “இடையன்குடி கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்த சிசிடிவி-யை செக் செய்தபோது, யாரோ ஒருவன் பாவாடை கட்டிக்கொண்டு நைசாக நழுவிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்தக் கிராமம் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் இருப்பதால், உடனடியாக மாவட்ட எல்லையை சீல் வைத்து, சோதனை மேற்கொண்டோம். அப்போது லோடு ஆட்டோ ஒன்று ஊருக்கு வெளியே அநாதையாக நிற்பதாகத் தகவல் வந்தது. அதன் பதிவு எண்ணைச் சோதித்தபோது அது போலி என்பது தெரிந்தது. அந்த ஆட்டோவில் `பெஞ்சமின்’ என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பழைய குற்றவாளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டபோதுதான் மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற திருட்டு வழக்குகள்ல் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது.

அன்றைய தினம், இடையன்குடியில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்லும்போது போலீஸார் சோதனை அதிகம் இருந்ததால், ஆட்டோவை தூரத்திலேயே நிறுத்திவிட்டு, தப்பிவிட்டான். அவனது பழைய கேஸ் ஹிஸ்டரியைப் புரட்டியபோது, அவனுக்குப் பெண்கள் பலரிடமும் நெருக்கமான தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்தத் தொடர்புகளைவைத்து விசாரித்தபோது அவனின் தம்பி ஈசாக் சிக்கினான். அவனிடம் விசாரித்தபோது பாவாடைக் கொள்ளையன் பெஞ்சமின் குமரியில் இருப்பது தெரிந்து, அவனைக் கைதுசெய்தோம்” என்றார்.

சமய் சிங் மீனா, செல்வி, சரவணன்
சமய் சிங் மீனா, செல்வி, சரவணன்

பெஞ்சமினிடம் விசாரணை நடத்திய தனிப்படை இன்ஸ்பெக்டர் செல்வி அவனைப் பற்றிச் சொன்ன தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்! ‘‘பெஞ்சமின் திறந்திருக்கும் வீடுகளில் தைரியமாக நுழைந்து திருடுவான். வீட்டில் பொருள்கள் கிடைக்காவிட்டால், அந்த வெறுப்பில் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடக்க முயல்வான். தன்னை யாராவது பிடித்தால், பிடிபடாமல் வழுக்கிச் செல்வதற்காக உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொள்வான். அதேபோல, இருட்டு நேரத்தில் அவனைப் பார்ப்பவர்களைக் குழப்புவதற்காகவும் பயமுறுத்துவதற்காகவுமே பாவாடை கட்டியிருக்கிறான்.

அவனுடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவன் எந்த ஊருக்கெல்லாம் கொள்ளையடிக்கச் செல்கிறானோ, அங்கேயே சில நாள்கள் தங்கி, கிடைக்கும் வேலைகளைச் செய்பவன், அங்கு சிலரை தற்காலிக மனைவியாக வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறான். இப்படி நான்கைந்து ஊர்களில் நான்கைந்து பேருடன் வாழ்ந்துவந்தவன், இப்போது காளீஸ்வரி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்திருக்கிறான். லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு, தப்பியபோது காளீஸ்வரிதான் டூ-வீலரில் வந்து இவனை பிக்அப் செய்துகொண்டு சென்றிருக்கிறார்.

பெஞ்சமின், ஈசாக், காளீஸ்வரி
பெஞ்சமின், ஈசாக், காளீஸ்வரி

பெஞ்சமினிடமிருந்து இரண்டு கார்கள், ஒரு டிராக்டர், மூன்று பைக்குகள், ஐந்து செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆம்ஸ்டர் சைலஸ் வீட்டில் திருடிய நகையையும் பணத்தையும் மீட்டிருக்கிறோம். இப்படிக் கொள்ளையடித்த பணத்தில் உவரியில் பண்ணைத் தோட்டத்தை வாங்கியிருக்கிறான். கொள்ளையில் காளீஸ்வரியும் ஈசாக்கும் உதவியாக இருந்ததால், மூவரையும் சிறையில் அடைத்துள்ளோம்” என்றார்.

பாவாடைக் கொள்ளையன் பல்வேறு ஊர்களில் வாங்கிக் குவித்த சொத்து விவரங்களை நெல்லை எஸ்.பி சரவணன் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது... ‘‘பெஞ்சமின் மீது மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவை தவிர அவன் பல இடங்களிலும் கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஏனெனில், பெஞ்சமின் தனது பெயரிலும், தன் தம்பி ஈசாக் பெயரிலும் நிறைய சொத்துகளை வாங்கியிருக்கிறான். சென்னை, நெல்லை, தென்காசி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சொந்த வீடுகள், நிலங்களை வாங்கியிருக்கிறான். அவனை கஸ்டடி எடுத்து விசாரித்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்கும்’’ என்றார்.

காளீஸ்வரிக்கு பாவாடைக் கொள்ளையனுடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே இரு குழந்தைகள் இருக்கின்றன. இவனும் முதல் மனைவி விட்டுச் சென்ற குழந்தையைப் பராமரித்துவந்திருக்கிறான். தற்போது இந்த மூன்று குழந்தைகளும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுதான் பரிதாபம். பெஞ்சமின் கொள்ளையடித்து சொத்துகளைச் சேர்த்ததற்கு பதிலாக, குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், சிறப்பான எதிர்காலத்தையும் சேர்த்திருக்கலாம்!