Published:Updated:

நள்ளிரவில் கைக்குழந்தையுடன் பூஜை; கடனாநதி அணைப் பகுதியில் நரபலி சந்தேகம், பரபரப்பு! - நடந்தது என்ன?

நரபலி வதந்தியால் காவல் நிலையம் முன்பு திரண்ட மக்கள்
நரபலி வதந்தியால் காவல் நிலையம் முன்பு திரண்ட மக்கள்

கடனாநதி அணைப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்த சாமியார் ஒருவர் பூஜையில் ஈடுபட்டார். படையலுடன் அவர் பூஜை நடத்துவதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் நரபலி சந்தேகத்தால் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கடனா நதி அணைக்கட்டு இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அத்ரி மகரிஷி கோயில் உள்ளது. இங்கு சித்தர்களின் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்க வடிவில் சிவனுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

சாமியார் வாசுதேவன்
சாமியார் வாசுதேவன்

கடனா அணைப் பகுதியைக் கடந்து, அடர்ந்த வனப்பகுதி வழியாக அத்ரி மகரிஷி கோயிலுக்குச் செல்ல வேண்டும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் அணையும், அதை ஒட்டிய பகுதிகளும் இருக்கின்றன. அது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அனுமதியின்றி யாரும் உள்ளே செல்ல முடியாது.

இந்தநிலையில், நேற்று இரவு நேரத்தில் கடனா அணைப்பகுதிக்கு ஒரு கார் வந்திருக்கிறது. அதில் ஒரு சாமியார், அவருடன் ஒரு ஆண், இரு பெண்களும், பிறந்து 40 நாள்களே ஆன கைக்குழந்தையுடன் சிறுவர் சிறுமியரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியிலுள்ள கேட்டைத் திறந்து காரில் உள்ளே வந்திருக்கிறர்கள்.

தெலங்கானா: `நாகதோஷம் நீங்க நரபலி!' - ஜோதிடர் பேச்சைக் கேட்டு பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்

அணைப் பகுதிக்குள் வந்ததும் அங்கு படையலுக்கான ஏற்பாடுகளைச் செய்த சாமியார், பூஜைகளைத் தொடங்கியிருக்கிறார். வனப்பகுதியை நோக்கி அவர் பூஜை நடத்தத் தொடங்கியதை அந்தப் பகுதி வழியாக விளைநிலங்களுக்குச் சென்று திரும்பிய விவசாயிகள் சிலர் பார்த்திருக்கிறார்கள். கைக்குழந்தையுடன் பூஜையில் பெண் பங்கேற்றதால் அங்கே நரபலி நடக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று பூஜை செய்தவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், நரபலி சந்தேகத்தால் அவர்களை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆவணி மாதம், செவ்வாய்கிழமை, அஷ்டமி சமயத்தில் பூஜை நடத்த வந்திருக்கலாம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணை
ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணை

போலீஸார் நடத்திய விசாரணையில், பூஜை நடத்தியவர் சிவகாசியைச் சேர்ந்த வாசுதேவன் என்ற சாமியார் என்பது தெரியவந்தது. வாசுதேவனுடன் அவரின் மகன், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்தி என சுமார் ஆறு பேர் வந்திருப்பதும், அவர்கள் வனத்துறை ஊழியர்கள் சிலரிடம் பணம் கொடுத்து கேட் சாவியை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்திருப்பதும் தெரியவந்தது.

அத்துமீறி அணைப் பகுதிக்குள் நுழைந்தவர்களை எச்சரித்த போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் அனுப்பி வைத்தனர். நரபலி வதந்தி காரணமாக ஆழவார்குறிச்சி பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

நரபலி வதந்தியால் காவல்நிலையம் முன் திரண்ட மக்கள்
நரபலி வதந்தியால் காவல்நிலையம் முன் திரண்ட மக்கள்

இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``கொரோனா ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் அணைப் பகுதியின் வழியாக பொதுமக்கள் யாரையும் வனப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. நேற்று இரவு நேரத்தில் பூஜை செய்ய வந்தவர்களுக்கு உதவியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

கடனாநதி அணையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு