Published:Updated:

நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

எடப்பாடி கொடுக்கும் இரண்டு சாய்ஸ்... தொடரும் ஊரடங்கு... முடங்கும் மக்கள்

நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?

எடப்பாடி கொடுக்கும் இரண்டு சாய்ஸ்... தொடரும் ஊரடங்கு... முடங்கும் மக்கள்

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு மறைமுகமாக இரண்டு வாய்ப்புகளை மட்டுமே அரசு அளித்திருக்கிறது. ஒன்று, ‘கொரோனா நோய் தாக்கி செத்துப் போகிறாயா? இரண்டு, ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கி செத்துப் போகிறாயா?’ என்பவையே அவை! கொரோனா தாக்கினால்கூட உயிர் பிழைப்பதற்கு 98 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியவர்களுக்கு, பிழைப்புக்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. ‘ஊரடங்கைவிட கொரோனாவே பரவாயில்லை’ என்று மக்கள் நினைக்கும் இந்தச் சூழலிலும், ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. இதன் மூலம், முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது!

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பநிலையில், பல நாடுகள் தங்களது மருத்துவக் கட்டமைப்பு களைத் தயார்படுத்தவே ஊரடங்கை அமல்படுத்தின. நாமும் அதைச் செய்தோம். நான்கு மாதங்களையும் தாண்டிய நிலையில், இன்னமுமா தயாரிப்புகள் முடியவில்லை? எனில், நாம் எப்போதுதான் தயாராவோம்? கொரோனா தொற்று இன்னமும் பல மாதங்கள் நம்மிடையேதான் இருக்கும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவும் சில மாதங்கள் ஆகும். அதுவரை எல்லோரையும் வீடுகளில் முடக்கிவைப்பது சாத்தியமா?

நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?

‘ஊரடங்கு என்பது கொரோனாவை குணப்படுத்தாது. நோய் பரவும் தீவிரத்தைத் தள்ளிப்போட மட்டுமே அது உதவும்’ என்று உலக அளவில் மதிக்கப்படும் தொற்றுநோய் வல்லுநர்கள் அனைவருமே கூறுகிறார்கள். அதாவது, ஒரு நோயாளியிடமிருந்து பலருக்கு வைரஸ் பரவும் ஆபத்தை மட்டுமே அது தடுக்கும். எனவே, கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் மார்ச் மாதம் இந்தியா ஊரடங்கை அமல்படுத்தியபோது அவர்கள் வரவேற்றனர். ஆனால், மறுபடியும் மறுபடியும் தொடரும் ஊரடங்கால் வாழ்வாதாரங்கள் மொத்தமாக முடங்கிய நிலையிலும் இப்போது மீண்டும் தொடரும் ஊரடங்கை ‘அபத்தம்’ என்கிறார்கள் நிபுணர்கள்.

ஊரடங்கு கொரோனாவை ஒழிக்காது!

கொரோனா உருவான வூஹான் பகுதியில், ஊரடங்கை அமல்படுத்தியே சிகிச்சை தந்தது சீனா. 76 நாள்கள் கழித்து ஊரடங்கைத் தளர்த்தியபோது, அங்கு ஒரு புதிய நோயாளிகூட கண்டறியப்படவில்லை. மார்ச் மாதம் ஊரடங்கை அமல் செய்தபோது தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் 100 பேர்கூட இல்லை. 130 நாள்கள் கடந்த நிலையில், ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி நாம் இரண்டரை லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கையைக் கடந்துவிட்டோம். ‘ஊரடங்குதான் தீர்வு’ என்றால், இந்நேரம் கொரோனா ஒழிந்திருக்க வேண்டுமே!

தமிழகத்தில் சிகிச்சையிலிருக்கும் பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 56,000-க்கும் மேல். ‘நாம் பரிசோதனை செய்து கண்டறிந்த நோயாளிகளின் எண்ணிக்கையைப்போல, 11 மடங்கு அதிக நோயாளிகள் உண்மையில் இருக்கக்கூடும்’ என்று ஸ்வீடன் தொற்றுநோய் வல்லுநர் ஆண்டர்ஸ் டெக்னெல் ஒரு கணக்கு சொல்கிறார். அதை அப்படியே நம் அரசு நம்பாவிட்டாலும்கூட, ‘பாசிட்டிவ் நோயாளிகள் பலர் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் சமூகத்தில் இருக்கலாம்’ என்பதையாவது ஒப்புக்கொள்ளும்.

இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உதவுகிறதா? நிச்சயம் இல்லை. உண்மையில் ஊரடங்கு விதிகளால், நோய்த் தொற்றும் வாய்ப்பு அதிகரிக்கவே செய்கிறது. பல அலுவலகங்களில், மாலை 5:00 மணிக்குப் பணி முடிகிறது. ஏழு மணிக்குள் கடைகள் மூடப்படும். இதனாலேயே காலை நேரத்திலும், மாலை 5:00 மணிக்குப் பிறகும் மார்க்கெட் பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. அரசு அலுவலகங்களில்கூட இப்போது ஆறு நாள்களும் வேலை நாள்கள் ஆகிவிட்டன. ஞாயிற்றுக்கிழமையெல்லாம் முழு ஊரடங்கு. கடைவீதிகளில் இதனாலும் கூட்டம் கூடுகிறது. எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரு சேவையை, குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே கிடைப்பதாக மாற்றினால் கூட்டம் சேர்வது இயல்பு. கூட்டம் சேர்ந்தால் நோய் பரவவே செய்யும்.

இ-பாஸ் குளறுபடிகள்

இ-பாஸ் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்படுவதாக நம்புகிறது அரசு. ராணிப்பேட்டையும் வேலூரும், தலா 1,000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். மதுரையும் விருதுநகரும், தலா 2,000-க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். நெல்லையும் தூத்துக்குடியும், தலா 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். ‘ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போகிறவர்களால் கொரோனா பரவிவிடும்’ என அச்சப்படுகிற அளவுக்கான பச்சை மண்டலம் என எதுவுமே இல்லை.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரே மாவட்டத்துக்குள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்பவர்களால்தான் புதிய புதிய இடங்களில் நோய்த்தொற்று ஏற்படும். ஆனால், மாவட்ட எல்லைக்கோட்டைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறது அரசு. ஆயிரக்கணக்கான மக்களின் பிழைப்பையே இது கேள்விக்குறியாக்கிவிட்டது.

முதன்முதலாக ஊரடங்கு அமலானபோது, ‘ஊருக்குப் போய்விட்டு சீக்கிரம் வந்துவிடலாம்’ என்று போட்டது போட்டபடி நகரங்களிலிருந்து கிளம்பிய பலரால் இன்னமும் திரும்ப முடியவில்லை. இடைப்பட்ட நான்கு மாதங்களில் வேலை, வியாபாரம், தொழில் என இழப்புகளைச் சந்தித்த அவர்கள், தங்கள் கிராமங்களில் என்ன செய்வார்கள்? பலருக்கு ரேஷன் கார்டுகூட அந்த கிராமத்தில் கிடையாது.

வீழ்ச்சியடைந்த எட்டு துறைகள்!

ஊரடங்கால் கொரோனாவை நம்மால் ஒழிக்க முடியவில்லை. ஆனால், பொருளாதாரத்தை ஒழித்து பல லட்சம் குடும்பங்களைத் தவிக்கவிட்டிருக்கிறோம். இதோ சில புள்ளிவிவரங்கள்:

 கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கலாம். ஆனால், ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துவிட்டது. மே மாத நிலவரப்படி பிரேசிலில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 12.6 சதவிகிதம். அமெரிக்காவில் இது 13.3 சதவிகிதம். இந்தியாவில் இது 23.5 சதவிகிதமாக எகிறிவிட்டது. நாம் கொரோனாவையும் கட்டுப்படுத்தவில்லை. அதைச் செய்வதாக நினைத்து ஊரடங்கை அமல்படுத்தி, மிகப்பெரிய விலையைக் கொடுத்திருக்கிறோம்.

 `இந்தியாவில் முதன்மையான தொழில் துறைகள்’ என எட்டு துறைகளைக் குறிப்பிடுவார்கள். அதிக உற்பத்தி மற்றும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள் இவை. இரும்பு, சிமென்ட், நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியச் சுத்திகரிப்பு, உரம் ஆகிய இந்த எட்டு துறைகளில் உரத் தயாரிப்பு தவிர மற்ற எல்லாமே வீழ்ச்சியடைந்துவிட்டன.

கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துவிட்டது, மின் தேவையே இல்லாத அளவுக்குப் பல தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. `உற்பத்தி இல்லாததால் சரக்கு வாகனங்கள் சும்மா நிற்கின்றன’ என்பதை உணர்த்தும் அறிகுறி இது. இதன் நேரடி அர்த்தம், ‘இந்தியாவின் முக்கியமான துறைகளில் பல கோடிப் பேர் வேலையையும் வருமானத்தையும் இழந்து வீதியில் நிற்கிறார்கள்’ என்பதே!

 இந்தியாவில் பருத்தி சீஸன் என்பது அக்டோபரில் ஆரம்பித்து, அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடியும். ‘இந்த ஆண்டு செப்டம்பரில் எப்போதும் இல்லாத அளவுக்குச் சுமார் 150 லட்சம் பேல் அளவு பஞ்சு மில்களிலும், வியாபாரிகளின் குடோன்களிலும் தேங்கும்’ என்று கணித்திருக்கிறார்கள். இந்த சீஸனில் சுமார் 100 லட்சம் பேல் பயன்பாடு குறைந்துள்ளது. ‘இதுக்குப் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று நகைச்சுவையாக இதைக் கடந்துவிட முடியாது. ஜவுளித்துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் காணாமல் போய்விட்டதை உணர்த்தும் அறிகுறி இது.

 இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி, இதுவரை நஷ்டம் அடைந்ததில்லை. இந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மாருதியின் நஷ்டம், ரூ.249 கோடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் அது பெற்ற லாபம், ரூ.1,435 கோடி. கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,500 கோடி அள்ளிக்கொடுத்த டாடாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் மிக மோசமாக நஷ்டமடைந்துள்ளது. டிராக்டர்கள் தவிர வேறு எந்த வாகனமும் சரியாக விற்கவில்லை. பணம் வைத்திருப்பவர்கள் கூட வாகனம் வாங்க யோசிக்கிறார்கள். ‘எப்போது ஊரடங்கு முடியும், எப்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருமானம் வரும்’ என்ற நிச்சயமின்மையே இதற்குக் காரணம். இது ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் பேரை நேரடியாகவும் மறைமுகமாகவும் காவு வாங்கியுள்ளது.

 தமிழகத்தில் செய்யப்படும் வாகனப் பதிவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியின் உச்சம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம், இருசக்கர வாகனங்களின் பதிவு 77 சதவிகிதம் குறைந்துவிட்டது. மூன்று சக்கர வாகனங்களின் பதிவு 99 சதவிகிதம் குறைந்துவிட்டது. பயணிகள் வாகனங்களின் பதிவு 86.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. தனியார் பேருந்து தொழிலை நம்பி இங்கு 18 லட்சம் பேர் இருக்கிறார்கள். ‘வருமானம் இல்லாததால் யாருக்கும் சம்பளம் தரவில்லை’ எனப் பேருந்து உரிமையாளர்களே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள்.

நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?

விவசாயம் தவிர எல்லா துறைகளிலும் இப்படி அச்சுறுத்தும் புள்ளிவிவரங்களே கிடைக்கின்றன. அமைப்புசாரா தொழிலை நம்பியிருக்கும் பலரும் வருமானமில்லாமல் தவிக்கின்றனர். பல நிறுவனங்களில் வேலையிழப்புகள் ஏராளம்; வேலையில் இருப்பவர்களுக்கும் சம்பளம் குறைந்திருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்கள் இதைப் புரிந்துகொண்டு ஜூலை முதல் தேதியிலிருந்தே தளர்வுகளை அனுமதித்துவிட்டன. கணிசமான அளவு மீட்சியையும் கண்டுள்ளன. ஆனால், இங்கு ஊரடங்கைத் தொடர்வதால் நோயும் அதிகரிக்கிறது; பொருளாதார இழப்பும் அதிகரிக்கிறது.

ஊரடங்கு மற்றும் பொருளாதார இழப்புகள் காரணமாக பலரின் தூக்கம் பாதிக்கப் பட்டுள்ளதாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 25 மருத்துவமனைகள் இணைந்து நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. ஊரடங்கால் முடங்கிய பலருக்கு மன அழுத்தம் அதிகரித் துள்ளது. இந்த இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும். இது வலுவாக இருந்தால் மட்டுமே கொரோனாவுடன் போரிட முடியும்.

ஊரடங்கு போட்டு, மாநிலத்தையே முடக்கிக் கண்காணிப்பதில் செலவிடும் ஆற்றலையும் பணத்தையும், நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை தருவதில் மட்டும் செலவிடலாம். ஊரடங்கைத் தளர்த்துவது ஒருவகையில் அரசுக்கே நன்மை தரும்.

என்ன செய்ய வேண்டும்?

 நிறைய மருத்துவமனைகளும், சிறந்த கட்டமைப்புகளும் கொண்ட சென்னை நகரிலேயே கொரோனாவின் சீற்றத்தைச் சமாளிக்க சிரமப்பட வேண்டியிருந்தது. இப்போது சின்னச் சின்ன நகரங்களிலும் கிராமங்களிலும் தொற்று பரவிவருகிறது. வரும் நாள்களில் இது அதிகமாகும். சிறு நகரங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா வார்டுகளை இப்போதே உருவாக்க வேண்டும். தனிமைப்படுத்தல் மையங்களும் அமைக்க வேண்டும்.

 கொரோனா தடுப்புப் பணியில் இதுவரை மக்கள் பங்களிப்பை அரசு அலட்சியம் செய்தே வந்திருக்கிறது. சென்னையில் குடியிருப்போர் சங்கங்கள், சேவை அமைப்புகளை அரசு நாடவில்லை. இதனால் மக்களுக்கும் அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. நோய்த் தொற்றையும் தடுக்க முடியாமல் போனது. கிராமப்புறங்களில் உள்ளூர் மக்கள் பங்கேற்கும் குழுக்களை உருவாக்க வேண்டும். கொரோனா தடுப்புப் பணிகளை அந்தக் குழுவின் கண்காணிப்பில் விட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.

 டெல்லியிலும் மும்பையிலும் செய்ததைப் போன்ற ‘சீரம்’ ஆய்வை சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் செய்ய வேண்டும். நோய்ப் பரவலின் வீரியத்தைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இது உதவும்.

 ‘நான்கு பேருக்கு மேல் கூட்டம் சேரக் கூடாது’ என விதி இருக்கிறது. ஆனால், கொரோனாவிலிருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவை வாழ்த்த ஆயிரம் பேர் கூடுகிறார்கள். திருமணம், மருத்துவச் சிகிச்சை, மரணம் போன்றவை தவிர வேறு காரணங்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. ஆனால், சிலரால் மட்டும் இதை வாங்கிவிட முடிகிறது. பலபேர் மோசடி இ-பாஸ்கூட இல்லாமலே கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுச்சேரி என்று அடிக்கடி சென்று வந்துகொண்டுள்ளனர். “எங்களை யாரும் ஒரு இடத்துலயும் நிறுத்தி எந்த பாஸும் கேட்கலையே’’ என்கிறார்கள் அவர்கள். பிறகு ‘மக்கள் ஒத்துழைக்கவில்லை’ எனப் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், ஜுரப் பரிசோதனை போன்ற அவசியமான கட்டுப்பாடுகள் மட்டுமே போதும். இவற்றை மீறினால் அபராதம் விதிக்கலாம்.

இன்னும் உச்சத்தை எட்டவில்லை!

கொரோனா பரவல் பற்றி அறிந்துகொள்வதற்காக மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் ‘சீரம்’ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பணுக்கள் ரத்தத்தில் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் ஆய்வு இது. இதில் ஆச்சர்யமான சில உண்மைகள் தெரியவந்தன. மும்பையின் குடிசைப் பகுதிகளில் 57 சதவிகிதம் பேர் உடலில் எதிர்ப்பணுக்கள் இருந்தன. அவர்களில் நோயாளிகள் எனக் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் கொஞ்சம் பேர் மட்டுமே! மற்ற பலருக்கும் அவர்களுக்கே தெரியாமல் கொரோனா வந்து போயிருந்தது. அதனால்தான் உடலில் எதிர்ப்பணு உருவாகியிருந்தது.

நடுத்தர வர்க்க மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 சதவிகிதம் பேர் உடலில் மட்டுமே இந்த எதிர்ப்பணு இருந்தது. டெல்லியின் நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களில் 25 சதவிகிதம் பேர் உடலில் எதிர்ப்பணு இருந்தது.

இதைவைத்து, தொற்றுநோய் வல்லுநர்கள் ஒரு கணிப்பு சொல்கிறார்கள். ‘எல்லாப் பகுதிகளிலும் கொரோனா அதிகமாகி, அதன் பிறகே குறையும். இதுவரை பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் இனி அதிக பாதிப்புகள் ஏற்படும். அப்போது நோய்த்தொற்று உச்சத்தை அடையும்’ என்பதே அது. தமிழகத்தில் ஆரம்ப கட்டத்தில் அதிக பாதிப்பு இருந்த வட சென்னைப் பகுதியில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவதையும், புதுப் புது மாவட்டங்களில் அதிகரிப்பதையும் கவனித்தால் இதன் அர்த்தம் புரியும்.