Published:Updated:

மழைத்துயரங்கள்... ஈரம் வற்றிவிடும்... ஈர நெஞ்சங்கள் வற்றலாமா?

நான் பொறந்ததிலிருந்து 36 வருஷமா சென்னையிலதான் இருக்கேன். இடி, மழை, புயல், வெள்ளம் எல்லாத்தையும் பார்த்துட்டோம்.

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தில் மழை வெள்ளம் சூழும்போதெல்லாம் மேம்பாலத் தாழ்வாரங்களிலும், நடைபாதை ஓரங்களிலும் தஞ்சமடையும் விளிம்புநிலை மக்களின் துயரம் சொல்லி மாளாது. தார்ப்பாய்க்குள்ளும், கிழிந்த பேனர்களின் அடியிலும் ஈரத்துணிகளுடன் நடுங்கியபடியே ஒடுங்கியிருக்கும் இவர்களின் துயரத்தை நிரந்தரமாகத் துடைக்கும் அரசு இதுவரை வாய்க்காதது பெரும் சோகம். அப்படி மழைத்துயரத்தில் சிக்கியிருந்தவர்களின் நிலையை அறிய, களமிறங்கியது ஜூ.வி டீம்.

அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம்

சென்னை: “கட்சிக்காரங்க எங்களை விடலை!”

சென்னையின் துறைமுகம் தொகுதி, வால்டாக்ஸ் ரோட்டில் சுமை ஏற்றும் டிராலி வண்டிகளை ஒன்று சேர்த்து, தார்ப்பாயைப் போர்த்தி குழந்தைகளை பத்திரப்படுத்தியிருந்தது கூலித் தொழிலாளியான பிரேம்குமாரின் குடும்பம். “நான் பொறந்ததிலிருந்து 36 வருஷமா சென்னையிலதான் இருக்கேன். இடி, மழை, புயல், வெள்ளம் எல்லாத்தையும் பார்த்துட்டோம். எங்க காலம் இப்படியே போயிடுச்சு. குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சாத்தான் பயமா இருக்கு. குடியிருக்க ஒரு வீடு இல்லாததால, மழைல உக்காந்து சோறாக்கக்கூட முடியலை. மழையால வேலை இல்லை, கையில காசும் இல்லை. நிவாரணமா கொடுக்குற சாப்பாடு, பிஸ்கட்டைவெச்சுதான் வயித்தைக் கழுவுறோம்” என்றார் பிரேம்குமார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அருகே பறக்கும் ரயில் மேம்பாலத்தின்கீழ் வாடிய முகத்துடன் மழையில் நடுங்கிக்கொண்டிருந்தன சில குடும்பங்கள்... அடுப்பில் ஈர விறகுகள் புகைந்துகொண்டிருக்க நம்மிடம் பேசிய சிவசக்தி, “எங்க பொண்ணுங்க பத்தாவது, பன்னிரண்டாவது படிக்குறாங்க. மழை வெள்ளத்துல அவங்க புஸ்தகம், உடுப்பு எல்லாம் அடிச்சுக்கிட்டு போயிருச்சு. ஒவ்வொரு தடவையும் வெள்ளம் வர்றப்பல்லாம் `எங்களுக்கு வீடு கட்டித்தாங்க’னு எம்.எல்.ஏ ஆபீஸ், குடிசை மாற்று வாரியம்னு எல்லா இடத்துலயும் மனு கொடுக்குறோம். எதுவுமே நடக்கலை” என்று அவர் பேசி முடிப்பதற்குள், அருகிலிருந்த பள்ளி மாணவி ஒருவர், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி மழை நிவாரணப் பொருள்கள் தர்றதுக்காக லாக் நகருக்கு எம்.எல்.ஏ உதயநிதி வந்தாரு. அவர்கிட்ட நிவாரணம் வாங்க எங்களை அனுமதிக்கலை. அவர்கிட்ட நேரடியாக மனு கொடுத்தாவாச்சும் எங்களுக்கு வீடு கிடைக்கும்னு முயற்சி பண்ணினோம். ஆனா, கட்சிக்காரங்க எங்களை நெருங்கவே விடலை” என்றார் பரிதாபமாக.

பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையோரம் உடைந்த சிமென்ட் ஷீட்களைப் போட்டு அதன்மீது கிழிந்த பேனர்கள், அட்டைகளைப் போர்த்தி தஞ்சமடைந்திருந்தது ஒரு குடும்பம். அங்கிருந்த பிரியங்கா கென்னடி நம்மிடம், “எங்களுக்கு மூணு குழந்தைங்க இருக்காங்க. அப்பா காலத்துல மெரினா பீச் ஓரத்துல இருந்தோம். கடற்கரையை அழகு பண்றோம்னு எங்களை அங்கிருந்து விரட்டிட்டாங்க. வேலையில்லை, வீடும் இல்லைங்கறதால ரோட்டோரத்துல இருக்குறோம். மசூதி வாசலுக்குப் போனா சாப்பாடு தருவாங்க. இப்ப வெள்ளம் வந்துட்டதால எங்கேயும் நகர முடியலை. சாப்பாட்டுக்கும் வழியில்லை. ஸ்டாலின் ஐயாதான் எங்களை மாதிரி பிளாட்பாரத்துல வசிக்குறவங்களுக்கு வீடு தரணும்” என்றார் கண்ணீருடன்!

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான்... சாலையோரத்தில் வசிக்கும் இந்த மக்களுக்காக சில சமயங்களில் அரசு, நிலமும் ஒதுக்குகிறது. ஆனால், சிலர் இவர்களின் இடங்களை ஆக்கிரமித்துக்கொள்வதால், மீண்டும் சாலையோரத்துக்கே வந்துவிடும் அவலம் தொடர்கிறது.

தஞ்சை: ஆக்கிரமிப்பில் பழங்குடிகளின் நிலம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், பசுபதிகோவில் அருகேயுள்ள பட்டித்தோப்பு பகுதியில் சாலையோரத்தில் சுமார் 30 பழங்குடிக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் குடிசைகளுக்கு மழைநீர் புகுந்துவிட போக்கிடம் இல்லாமல் தவிக்கிறார்கள். தேங்கி நிற்கும் மழை நீருக்குள் முடங்கியிருந்த ராஜேந்திரன் என்பவர், “நாங்க 40 வருஷத்துக்கு மேல இங்கதான் வசிக்குறோம். சின்ன மழை பெய்ஞ்சாலே குடிசைக்குள்ளாற தண்ணி வந்துடும். 2009-ல் அரசாங்கம் எங்களோட 16 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்தது. வீடு கட்டி தர்றதாவும் சொன்னாங்க. எதுவுமே நடக்கலைங்க. எங்களுக்குக் கொடுத்த இடத்தையும் சிலர் ஆக்கிரமிச்சுட்டாங்க. ஆக்கிரமிப்பை அகற்றி, வீடு கட்டிக் கொடுக்கச் சொல்லி பல முறை போராட்டம் நடத்துனோம். ஒண்ணும் பிரயோஜனமில்லைங்க” என்றார் ஆற்றாமையுடன்!

மழை ஒருபக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பாம்பு உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லையால் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகப் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த கனி, “எங்க பகுதி குடிசைகள்ல நூத்துக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் வசிக்குது. மழைநீர் பயத்தைவிட பாம்பு, பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்துடுறதுதான் பெரிய பிரச்னையா இருக்கு. வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் பிரச்னை தீர்ந்துடும். ஆனா, அதை அதிகாரிகள் செய்யறதில்லை. மழைக் காலத்துல மட்டும் பேருக்கு வந்து பார்த்துட்டுப் போயிடறாங்க” என்று நொந்துகொண்டார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
மழைத்துயரங்கள்... ஈரம் வற்றிவிடும்... ஈர நெஞ்சங்கள் வற்றலாமா?

தூத்துக்குடி: “மழை வேணாம்னு வேண்டுறோம்!”

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள மேலபாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்களின் நிலைமை இன்னும் மோசம்... “எங்க கிராமத்துல 53 வீடுகள் இருக்கு. எங்களுக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே எங்க கிராமத்துக்கு ரோடு கிடையாது. மெயின் ரோட்டுக்குப் போகணும்னா நாலு கிலோமீட்டர் நடந்துதான் போகணும். எங்க கிராமத்துக்கும், கீழப்பாறைப்பட்டி கிராமத்துக்கும் இடையில இரட்டை ரயில் பாதைக்காக நாலு வருஷத்துக்கு முன்னால ஒரு சுரங்கப்பாலம் அமைச்சாங்க. சின்ன மழை பெய்ஞ்சாக்கூட 10 அடிக்குத் தண்ணி தேங்கிடும். தொடர்ந்து ரெண்டு நாள் மழை பெய்ஞ்சுதுன்னா 22 அடி உயரத்துக்கு தண்ணிகட்டி பாலமே மூழ்கிடும். ஊருல இருந்து ஒருத்தர்கூட வெளியே போக முடியாது. பள்ளிக்கூடம் போகுற பிள்ளைகளை, வயசானவங்களை பக்கத்து ஊர்கள்ல இருக்குற சொந்தக்காரங்க வீட்டுல விட்டுருவோம்.

போன வருஷம் மழை நேரத்துல இறந்துபோன ஒருத்தரோட உடலை அடக்கம் செய்ய முடியாம படாதபாடு பட்டுட்டோம். யாருக்காச்சும் நோய், நொடின்னாலும் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகவும் முடியலை. 500 மீட்டர் தூரத்துல இருக்குற கண்மாய்க்கு இந்தத் தண்ணியைத் திருப்பிவிடணும். எங்களுக்கு வேறொரு மாற்றுப் பாதையை அமைச்சுத் தரணும். இந்தக் கோரிக்கையை பலமுறை சொல்லியும் அதிகாரிங்க கண்டுக்கிறது இல்லை. எல்லாரும் மழை வரணும்னு வேண்டுவாங்க. ஆனா, நாங்க மழை வேண்டாம்னு வேண்டுறோம். இந்த தடவையும் நடவடிக்கை எடுக்கலைன்னா, ஊர் மக்கள் சேர்ந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையை கலெக்டர்கிட்ட ஒப்படைக்கிற முடிவுல இருக்கோம்” என்றார் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்.

பசுபதிகோவில்
பசுபதிகோவில்
முத்துக்குமார்
முத்துக்குமார்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்

கடலூர்: “வீடெல்லாம் சேறு!”

கடலூர் நகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர், நவநீதம் நகரைச் சேர்ந்த கலைச்செல்வி, “இங்க நூறு குடும்பங்கள் வசிக்குறோம். ஒவ்வொரு மழைக்கும் எங்க வீட்டுக்குள்ள தண்ணி புகுந்து பொருளெல்லாம் நாசமாகிடுது. அந்தத் தண்ணி வடியறதுக்கு ஒரு மாசம் ஆகிடும். அதுக்கப்புறம் வந்து பார்த்தா ஊரு முழுக்க இருக்குற சேறெல்லாம் எங்க வீட்டுக்குள்ளதான் இருக்கும். அந்த நாத்தம் போக இன்னும் ஒரு மாசம் ஆகிடும். எங்க பகுதிக்கு பக்கத்துல இருக்கற குடியிருப்புகள்ல மழைநீர் வெளியேற வாய்க்கால்கள் இல்லாததால ஜே.சி.பி வெச்சு மழைத் தண்ணியைத் திருப்பி விட்டுடுவாங்க. அந்தத் தண்ணி அப்படியே எங்க வீட்டுக்குள்ள வந்துடும். ஆக்கிரமிப்புகளை அகற்றி இங்க இருக்குற ரெண்டு குட்டைகளைச் சரி செஞ்சாலே எங்களுக்கு பாதிப்பு குறையும். அரசாங்கத்துகிட்ட வருஷக்கணக்கா சொல்லிக்கிட்டு வர்றோம்... எதுவும் நடக்கலை. ஒவ்வொரு மழைக்கும் எங்களை மண்டபத்துல தங்கவெச்சுட்டா மட்டும் போதுமா? எங்க பொழப்பே நாறிப்போறது பத்தி யாருக்குமே கவலை இல்லை...” என்றார் கண்ணீருடன்!

வெயில் அடித்தவுடன் ஈரம் வற்றிவிடும்... ஈர நெஞ்சங்கள் வற்றலாமா? அரசு இவர்களின் அவலத்தைப் போக்கி, பாதுகாப்பான இடத்தை அரசு அமைத்துத் தர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு