Published:Updated:

நெல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்! - நோய் பரவும் அச்சத்தில் மக்கள்

மருத்துவக் கழிவுகள்
மருத்துவக் கழிவுகள்

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து தமிழகத்தின் நீர் நிலைகள் மற்றும் கிராமப் பகுதிகளில் ஆள் இல்லாத இடத்தில் கொட்டிச் செல்வதை சில லாரி டிரைவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுமதி இல்லாமல் பொருள்களைக் கொண்டு செல்வதையும் அங்கிருந்து பொருள்களைக் கொண்டு வருவதையும் கண்காணிப்பதற்காக இரு மாநில எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்
சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் அதிகாரிகள்

ஆனால், சோதனைச் சாவடிகளை எல்லாம் மீறி கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுப் பொருள்கள் தமிழக எல்லைக்குள் கொண்டுவரப்படுவது வழக்கமாகிவிட்டது. சில லாரி டிரைவர்களின் பண ஆசை காரணமாகக் கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைக்குள் தங்கு தடையின்றி கொண்டுவரப்பட்டு நீர் நிலைகளிலும் தனியார் நிலங்களிலும் கொட்டப்படுகின்றன.

`குப்பைத் தொட்டியா நெல்லை?' - இறைச்சிக் கழிவுகளுடன் கேரள லாரியைப் பிடித்த மக்கள்

சோதனைச் சாவடியில் இருக்கும் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டு தமிழக எல்லைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பெட்டைக்குளம் கிராமத்தில் தனியார் நிலத்தில் மருத்துவக் கழிவுகள் மூட்டைகளில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

புகார் அளித்த அரசு மருத்துவர் கண்ணன்
புகார் அளித்த அரசு மருத்துவர் கண்ணன்

அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் அதைக் கவனித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். சாக்கு மூட்டையில் டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்தவை நோய்த் தொற்றை உருவாக்கக் கூடியவை என்பதால் அரசு மருத்துவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மருத்துவக் கழிவுகள் அனுமதியினறி வைத்திருந்ததாக நிலத்தின் உரிமையாளரான கோபால் என்பவர் மீது போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். எந்த லாரியில் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவக் கழிவுகள்
லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவக் கழிவுகள்

இதனிடையே சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை வருவாய்த் துறையினர் கைப்பற்றிப் பாதுகாப்பான முறையில் அவற்றை அழிப்பதற்காக எடுத்துச் சென்றார்கள். அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு