Published:Updated:

சென்னையில் மீண்டும் ஊரடங்கு... ஊரைக் காலி செய்யும் மக்கள்... தலைநகரில் குறையுமா கொரோனா?

சென்னையில் வாகன சோதனை
News
சென்னையில் வாகன சோதனை ( படம்: சொ.பாலசுப்பிரமணியன் )

ஊரடங்கு நாளை (ஜூன் 19) அமலுக்கு வரப்போகிறது என்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக சென்னையைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னையில் மீண்டும் ஊரடங்கு... ஊரைக் காலி செய்யும் மக்கள்... தலைநகரில் குறையுமா கொரோனா?

ஊரடங்கு நாளை (ஜூன் 19) அமலுக்கு வரப்போகிறது என்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக சென்னையைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் வாகன சோதனை
News
சென்னையில் வாகன சோதனை ( படம்: சொ.பாலசுப்பிரமணியன் )

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துவிட்டது. கொரோனாவால் தலைநகர் சென்னை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பேர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசுப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களால் நிரம்பிவழிகின்றன. புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள், வீடுகளிலேயே தனிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன.

கடந்த பல நாள்களாக, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படவிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவிக்கொண்டிருந்தது. அது சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தகைய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, இது குறித்து அரசுத் தலைமை வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் ஜூன் 11-ம் தேதி சில கேள்விகளை எழுப்பியது. ``சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் உள்ளதா, தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் எதுவும் கொண்டுவரத் திட்டம் உள்ளதா'' என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எதையும் எடுக்கவில்லை என்றும், தமிழ்நாட்டின் குடிமக்கள் என்ற முறையிலும் பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டும் இந்தக் கேள்விகளை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் மறுநாள் (ஜூன் 12) பதிலளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், சென்னையில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படுவதில்லையா என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.

இ-பாஸ் சோதனை
இ-பாஸ் சோதனை
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

ஜூன் 12-ம் தேதி, டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அன்றைய தினம், ஊரடங்கு குறித்து விளக்கம் அளித்த முதல்வர், ``தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற தகவல் வெறும் வதந்திதான். தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆனாலும், முதல்வர் மறுப்பு தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு, தமிழக அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன்19 முதல் 30 வரை பொது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ஜூன் 15-ம் தேதி தமிழக முதல்வர் வெளியிட்டார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனை அடிப்படையிலும் ஊரடங்கு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள்களில் பயணம்
மோட்டார் சைக்கிள்களில் பயணம்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

அதற்கு முன்பாகவே, சென்னையில் நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதாலும், சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்போகிறார்கள் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல் பரவியதாலும் ஏராளமானோர் சென்னையைக் காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்தனர். ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னையைக் காலிசெய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. தொழில்கள் பாதித்ததாலும் வர்த்தகம் முடங்கிய காரணத்தாலும் சென்னையில் பெரும்பாலோர் வாழ்வாதாரங்களை இழந்தனர். பலர், வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் தவித்தனர். வாடகை வீட்டுக்கு கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையைக் கழித்துவிட்டு, வீட்டை காலிசெய்துவிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட முடிவுசெய்தனர். வாடகை வேன்களைப் பிடித்து வீட்டுச் சாமான்களை ஏற்றிக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஊரைக் காலிசெய்துவிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் காட்சியை கடந்த சில நாள்களாக அதிகளவில் பார்க்க முடிகிறது.

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போய்ச் சேர பல பிரச்னைகளை மக்கள் சந்திக்கிறார்கள். இ-பாஸ் வாங்கினால்தான் சென்னை மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல முடியும். சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக மேற்கு மாவட்டங்களுக்கும், பெருங்களத்தூர் வழியாக வட, மத்திய, தென் மாவட்டங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வேண்டும். அந்த இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் அந்த இடத்தைக் கடந்துசெல்ல போலீஸார் அனுமதிக்கிறார்கள்.

மோட்டார் சைக்கிள்களில் பயணம்
மோட்டார் சைக்கிள்களில் பயணம்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

கடந்த மார்ச் முதலே மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குச் செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் பெற வேண்டும். திருமண நிகழ்ச்சி, அவசரமான மருத்துவ சிகிச்சைகள், நெருங்கிய உறவினர்களின் மரணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பிக்க முடியும். சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தினமும் சுமார் 5,000 பேர் இ-பாஸ் விண்ணப்பிக்கிறார்கள் என்றும், அவர்களில் 1,600 முதல் 1,800 பேருக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மற்ற மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன. இ-பாஸ் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ஒரு நாளைக்கு 1,000 விண்ணப்பங்கள் வருகின்றன என்றும், அவற்றில் 90 சதவிகிதம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இ-பாஸ் கிடைக்காதவர்களில் பலர் மோட்டார் சைக்கிள்களில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். நெருக்கடியாக இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் ஃப்ரீ பாஸ் ஏற்பாடு செய்து தருவதாகக்கூறி, அதிகமாகப் பணம் வசூலித்து வெளியூர் செல்ல விரும்புவோரை வெளிமாவட்டங்களுக்கு அழைத்துச்செல்வதாகவும் செய்திகள் வருகின்றன. இ-பாஸ் கிடைக்காதவர்கள் போலீஸ் சோதனையைத் தவிர்ப்பதற்காக, மாற்றுப்பாதைகளில் சிரமப்பட்டு செல்கிறார்கள். இ-பாஸ் நிராகரிக்கப்பட்ட சிலர் நள்ளிரவில் கார்களில் கிளம்பிச் செல்கிறார்கள்.

பரனூர் சுங்கச்சாவடி
பரனூர் சுங்கச்சாவடி
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

கார்களிலும், வேன்களிலும், மோட்டார் சைக்கிளிலும் மக்கள் வருகிறார்கள். வண்டலூரிலிருந்து கணக்கிடும்போது, ஒரு நிமிடத்துக்கு 400 முதல் 750 வாகனங்கள் கடந்துசெல்கிறது என்றும், எல்லா வாகனங்களையும் சோதிப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும் போலீஸார் கூறுகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் சென்னையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு 5,000-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், மதுரைக்கு 6,000-க்கும் மேற்பட்ட கார்களும் சென்றிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் தவிர, வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள் ஆறு லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட வேண்டுமென்று நூற்றுக்கணக்கான புலம்பெயர்த் தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் சென்றுகொண்டிருக்கிறார்கள். சென்னையைவிட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், சென்னையில் மக்கள் நெரிசல் ஓரளவுக்கு குறைந்துவருகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் குறைய வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் மக்களை சென்னையைவிட்டு செல்வதற்கு அனுமதித்தால் சென்னையில் மக்கள்தொகை குறையும் என்றும், அதனால் கொரோனா பரவல் குறையும் என்றும் நம்பப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு ஏராளமானோர் செல்வதால், அவர்கள் செல்லும் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுங்கச்சாவடியில் சோதனை
சுங்கச்சாவடியில் சோதனை
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

சென்னைக்குச் சென்றால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வரக்கூடிய இன்ஜினீயரிங் பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை யாரையுமே சென்னை மாநகரம் ஏமாற்றியதாக சரித்திரம் இல்லை. கொரோனாவைச் சபித்துக்கொண்டு சென்னையைவிட்டு செல்லும் மக்கள், விரைவில் சென்னைக்கு நிச்சயம் திரும்பி வருவோம் என்ற மனதுடனே சொந்த ஊர்களுக்குச் செல்கிறார்கள்.