Published:Updated:

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

ஊரடங்கு
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு

உணவின்றித் தவிக்கும் மக்கள்... தொடரும் கண்ணீர் காட்சிகள்

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

உணவின்றித் தவிக்கும் மக்கள்... தொடரும் கண்ணீர் காட்சிகள்

Published:Updated:
ஊரடங்கு
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு

கொரோனாவைத் தடுக்க அமலான ஊரடங்கு, இங்கே மக்களை இரண்டாகப் பிரித்திருக்கிறது.

வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள், வீட்டில் முடங்கியிருந்தாலும் சம்பளம் பெறுபவர்கள், கை நிறைய சேமிப்பு வைத்திருப்பவர்கள், சும்மா உட்கார்ந்தே வாழ்க்கை நடத்த முடிகிற அளவுக்கு வசதியானவர்கள் ஆகியோர் முதல் வகை. ஊரடங்கு நாள்களில் சாப்பிட்டுச் சாப்பிட்டு தொப்பை பெருத்துவிடுவது, தூங்கித் தூங்கி எழுந்து காலண்டரைப் பார்த்தால் 2021-ம் ஆண்டு வந்திருப்பது போன்ற ஜோக்குகளை இவர்களில் பலர் வெறித்தனமாக ஃபார்வேர்டு செய்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாவது வகை மனிதர்கள், வேறுவிதமான பரிதவிப்பில் இருப்பவர்கள். நோய் குறித்த அச்சமும், அரசும், போலீஸும் அவர்களை வீட்டுக்குள் தள்ளுகிறது. பசி, அவர்களை வெளியில் துரத்துகிறது. எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. இவர்கள் வீதிக்கு வருவதற்கான காரணங்களை முதல் வகை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘விதிகளை மதிக்காமல் வீதியில் திரிந்து, கொரோனாவைப் பரப்பும் சாத்தான்கள்’ என்று இவர்களைத் திட்டுகிறார்கள். பசித்த வயிறு எந்த விதியை மதிக்கும்?

முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு, தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு என எத்தனை எத்தனை ஊரடங்குகள்! ‘எதற்கு அனுமதி, எதற்கு அனுமதி இல்லை, எந்த நேரத்தில் அனுமதி’ என விவரிக்கும் அரசாணையைப் புரிந்துகொள்ள தனி அகராதி தேவைப்படலாம். எளிய மக்களுக்கும் புரியவில்லை, போலீஸாருக்கும் புரியவில்லை. வி.ஐ.பி-க்கள் பயணங்களுக்காகச் சில மணி நேரங்கள் மட்டுமே வீதிகளில் நின்று பழகிய போலீஸார், இப்போது 100 நாள்களைத் தாண்டி நிற்கிறார்கள். அவர்களின் முரட்டு லத்தி, எப்போதும்போல எளியவர்களையே பதம் பார்க்கிறது.

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல்துறை பேராசிரியர் சுனெட்ரா குப்தா, ‘‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விலை உண்டு. ஊரடங்குக்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம். குறிப்பாக, ஏழைகள் கொடுக்கும் விலை. வருமானத்துக்கு வழியில்லாத எவரையும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்குமாறு சொல்ல முடியாது. அது பெரிய வன்முறை. ஊரடங்கு எந்தச் சமூகத்திலும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்’’ என்கிறார்.

விடை தெரியாத முடிவு!

மக்களின் உயிர் காக்கவே ஊரடங்கை அமல் செய்வதாகக் கூறுகிறது அரசு. மக்களுக்கு வெறும் நான்கு மணி நேர அவகாசம் கொடுத்து, மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு பல கட்டங்களாக அது நீட்டிக்கப்பட்டது. 100 நாள்களைத் தாண்டியும் தொடர்கிறது.

இது எப்போது முடிவுக்கு வரும்? யாருக்கும் தெரியாது. ஊரடங்கை அறிவித்த அரசுக்கும் தெரியாது. கொரோனாவை குணப்படுத்த மருந்தோ, நோயே வராமல் தடுக்க தடுப்பூசியோ கண்டுபிடித்தால் அதன் பிறகு ஊரடங்கு தேவையில்லை. ஆனால், எல்லாமே பரிசோதனைக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஒருவேளை கொரோனா வைரஸ் தன் இயல்பை மாற்றிக்கொண்டு வலுவிழந்தால், அதன் பிறகு அச்சம் தேவையில்லை. ஏழு மாதங்களாகியும் அது இன்னமும் அதே வீரியத்துடன் உலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘தமிழகத்தில் ஜூலை இறுதியில் நோய்த்தொற்று உச்சத்தை அடையும்’, ‘செப்டம்பரில் அதிகரிக்கும்’ என்றெல்லாம் கணிப்புகள் சொல்கிறார்கள். ‘நவம்பர் வரை ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் ரேஷனில் வழங்கப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘அடுத்த ஆண்டு ஜூலை வரை ரேஷனில் இலவசப் பொருள்கள் வழங்கப்படும்’ என்று சொல்லிவிட்டார். இந்த அறிவிப்புகள் உணர்த்துவது ஒன்றைத்தான்... கொரோனாவுடன் நாம் நீண்டகாலம் வாழப்போகிறோம்!

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

அந்த வாழ்க்கை ஊரடங்கிலேயே கழிந்தால், நிலைமை என்னவாகும்? முதல்கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், `நேஷனல் பீரோ ஆஃப் எகனாமிக் ரிசர்ச்’ என்ற அமைப்பு ஓர் ஆய்வு செய்தது. ‘ஊரடங்கால் கொரோனா உயிரிழப்புகள் குறைந்தது உண்மை. ஆனால், தினக்கூலி வேலை செய்வோரில் 20 சதவிகிதம் பேர் வருமானத்தை இழந்துவிட்டனர். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதி அளவு அமைப்புசாரா தொழில்கள் மூலம் வருவதுதான். அது சரிந்துவிட்டது. நம் நாட்டில் 38 சதவிகிதக் குடும்பங்களில் முதல் 21 நாள்கள் ஊரடங்கைத் தாங்கும் அளவுக்கே சேமிப்பு இல்லை’ என்கிறது அந்த அறிக்கை.

‘வாழ்வாதாரத்துக்கு வழி செய்யாமல் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவது நல்லதல்ல. அதனால் வேலை இழப்பு, வருமான இழப்பு எனப் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படும்’ என்கிறார் இந்த ஆய்வை வழிநடத்திய சுப்பிரமணியம். இவர் உலக வங்கியின் வறுமை ஒழிப்பு கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர்.

தெருவுக்கு வந்த 15 கோடிப் பேர்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுக்க எத்தனை பேருக்கு வேலை போனது என்பதற்குத் தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. சுமார் 15 கோடிப் பேர் வேலை இழந்திருக்கக்கூடும். சேமிப்பு இல்லாத குடும்பங்கள் தடுமாறுகின்றன. இதை உறுதி செய்யும் காட்சிகள் நம் கண்ணெதிரே தெரிகின்றன. டி.வி-யை ஆன் செய்தால், தனியார் வங்கிகளின் நகைக்கடன் விளம்பரங்கள் நிறைய வருகின்றன. ‘நகையை அடகு வைக்க வேண்டாம். வித்துடுங்க’ என்று சில விளம்பரங்கள் அட்வைஸ் செய்கின்றன. சின்னச் சின்ன நகரங்களில் அடகுக்கடைகளில் கூட்டம் மொய்க்கிறது.

ஹோட்டல் மேனேஜராக இருந்தவர், மீன் விற்கிறார். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர், முறுக்கு சுட்டு வியாபாரம் செய்கிறார். ஒவ்வொரு தெருமுனையிலும் திடீரென முளைத்திருக்கும் காய்கறிக் கடைகளை பலர் பார்த்திருக்க முடியும். இவர்களெல்லாம் இதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்கள்? விசாரித்துப் பாருங்கள்... ஆட்டோவுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல் நொடித்துப் போனவராக அவர் இருக்கக்கூடும். ஏதோ ஒரு தனியார் அலுவலகத்தில் வேலையைவிட்டு அனுப்பப்பட்டவராகவும் இருக்கலாம். இன்னொரு வேதனையான விஷயம்... வீதிகளில் தயக்கத்துடன் கைநீட்டி யாசகம் செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. வேறு கதியற்றவர்கள். ஊரடங்கின் ஆரம்ப நாள்களில் உதவி செய்த தன்னார்வலர்கள் பலர் இப்போது வீடுகளில் முடங்கிவிட்டார்கள். காரணம்? அவர்களுக்கு நன்கொடைகள் வரவில்லை. ஈர மனம் கொண்டவர்களையும் இந்த நிச்சயமற்ற சூழல், மறுதலிக்க வைத்திருக்கிறது.

உணவைக் குறைத்துக்கொண்ட மக்கள்!

இந்தியா முழுக்க ஊரடங்கு ஏற்படுத்திய விளைவுகள் என்னென்ன? பிரதான், கிராமீன் சஹாரா உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஒரு சர்வே எடுத்தன. 12 மாநிலங்களில் 5,162 குடும்பங்களிடம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு இது. இவர்களில் 50 சதவிகிதம் பேர் தாங்கள் சாப்பிடும் உணவைக் குறைத்துக்கொண்டதாகச் சொன்னார்கள். தினம் மூன்று வேளை சாப்பிட்டவர்கள், இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்களில் 84 சதவிகிதக் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைத்தன. என்றாலும், 24 சதவிகிதம் பேர் அரிசி, கோதுமையை அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியிருந்தார்கள். மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களில், அடுத்த நாள் சமைக்க எதுவும் இல்லை. 22 சதவிகிதக் குடும்பங்கள் உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தன. 16 சதவிகிதக் குடும்பங்கள் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் பெற்றிருந்தன. 22 சதவிகிதக் குடும்பங்கள், கால்நடைகளை விற்று குழந்தைகளின் பசியைச் சமாளித்திருந்தன.

ஊரடங்கின் நேரடி நன்மை என்ன? இந்தியாவில் ஊரடங்கு தொடங்கியபோது கொரோனா நோயாளிகள் 564 பேர், மரணங்கள் வெறும் 10. இப்போது உலகில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள டாப் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆறு லட்சம் நோயாளிகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டோம். உயிரிழப்பும் 18,000-ஐ தாண்டியிருக்கிறது. ‘நோய் பரவும் வேகத்தை ஊரடங்கு குறைத்தது’ என்பது உண்மை. ஆனால், அது கொரோனாநோய்ப் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு பதிலாக, இந்தியாவின் பொருளாதாரச் சங்கிலியை உடைத்துவிட்டது.

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

விளைவு... கொரோனா பிரச்னையுடன் `பொருளாதாரப் பிரச்னை’ என்ற இன்னொரு சுமையும் மக்களின் தோள்களில் விழுந்திருக்கிறது. ‘வாழ்க்கை முக்கியமா... வாழ்வாதாரம் முக்கியமா?’ என்று முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனாபோலவே மோசமான ஒரு சுவாசத்தொற்று காசநோய். கொரோனாவைப் போல அல்லாமல், பல மாதங்கள் இதற்குச் சிகிச்சை பெற வேண்டும். உலகின் 27 சதவிகித காசநோயாளிகள் இந்தியாவில் இருக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 4,00,000 பேர் காச நோயால் இறப்பதாக அரசு, புள்ளிவிவரம் தருகிறது. ஆனால், உண்மையான உயிரிழப்பு இதைப்போல மூன்று மடங்கு இருக்கலாம்.

காசநோயுடன் ஒப்பிடும்போது கொரோனா பற்றி மக்கள் பல மடங்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தங்கள் உயிர் காக்கும் அக்கறையுடன் அவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஊரடங்குக்கு மாற்றுவழி தேடுவதே மக்களின் வாழ்வாதாரம் காக்கும்!

ஊரடங்கின் பக்கவிளைவுகள்!

ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வாகனத்துக்கு போன் செய்து சொல்கிறோம். அந்த வாகனம் வரும்வரை அவரவர் கையில் கிடைத்த பாத்திரங்களால் தண்ணீரை ஊற்றி, தீ பரவுவதைத் தடுக்க முற்படுகிறோம். ‘‘ஒரு தொற்றுநோய் பரவும்போது ஊரடங்கை அமல்படுத்துவது இது போன்ற தற்காலிகமான தடுப்பு முயற்சிதான்’’ என்கிறார்கள் வல்லுநர்கள்.

‘‘ஊரடங்கு சில நேரங்களில் தேவை. ஆனால், அதுவே கொரோனாவுக்கான சிறந்த தீர்வு அல்ல. எல்லா நேரங்களிலும் நாம் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க முடியாது’’ என்கிறார் டாக்டர் பிரப்தீப் கவுர். ‘‘ஊரடங்கு என்பது கொசுவைக் கோடாரியால் கொல்வது போன்றது. கொரோனாவின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்த ஆரம்பத்தில் இது தேவைப்பட்டது. மக்கள் புரிந்துகொண்டனர். இனி நாம் வேறு தீர்வுகளைத் தேட வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ராமசுப்பிரமணியன். ‘‘சமூக, பொருளாதாரச் சூழலைப் பார்க்கும்போது, ஊரடங்கை நீட்டிக்கத் தேவையில்லை’’ என்கிறார் டாக்டர் குகானந்தம். இவர்கள் மூவருமே, தமிழக அரசு அமைத்திருக்கும் மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ளவர்கள்.

பாரபட்சம் காட்டும் அரசு!

‘சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பணிக்குச் செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை’ என்பது ஊரடங்கு விதி. ஆட்குறைப்பு செய்யும் ஒரு தனியார் நிறுவனம், பொதுப் போக்குவரத்து மூலம் வந்து வேலை பார்க்கும் ஏழை ஊழியர் ஒருவரைப் பணியிலிருந்து நீக்கிவிடும் வாய்ப்பை இந்த ஊரடங்கு வழங்குகிறது. பொதுப் போக்குவரத்தை நம்பி வாழும் மக்களை இந்த ஊரடங்கில் அரசு கைவிட்டுவிட்டது.

மாவட்டங்கள் சுருங்கிப்போன இந்தக் காலத்தில், ‘மாவட்ட எல்லையைத் தாண்டக் கூடாது’ என்ற விதி பலரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது. மாவட்ட எல்லைக்கோடு என்பது நிர்வாக வசதிக்காக அரசு போட்டுக்கொண்டது. மக்கள் இந்தக் கோடுகளை நம்பி வாழ்வதில்லை. சென்னையின் புறநகர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீள்கின்றன. இங்கு வாழும் பலருக்கு, தாங்கள் இருப்பது எந்த மாவட்டம் என்றே தெரியாது.

விழுப்புரம் மாவட்ட எல்லையில் கண்டாச்சிபுரம் என்ற ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு, திருவண்ணாமலையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோயிலூரும்தான் பக்கம். `மாவட்ட எல்லையைத் தாண்டக் கூடாது’ என்றால் அவர் என்ன செய்வார்? ஆயிரக்கணக்கான மக்கள் இப்படித்தான் சென்று உழைக்கிறார்கள். ஊரடங்கு அவர்களை முடக்கிவிட்டது.

ஊரடங்குக்குத் தீர்வு என்ன?

* பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும். துவைத்து மறுபடியும் பயன்படுத்தும் முகக் கவசங்களை ஏழை மக்களுக்கு அரசே இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா வந்த பிறகு சிகிச்சை தரும் செலவைவிட இதற்குக் குறைந்த செலவே ஆகும்.

* ஆசியாவில், ஜப்பானும் தென் கொரியாவும் கொரோனாவை வெற்றிகரமாகச் சமாளித்தன. பரிசோதனைகளை அதிகரிப்பது, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது, தனிமைப்படுத்துவது ஆகியவற்றை அவை வெற்றிகரமாகச் செய்தன. அதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முதல் வழி. கூடவே, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத தொற்றுடன் வரும் நோயாளிகளுக்காக, தனிமைப்படுத்தும் மையங்களையும் அதிகமாக்க வேண்டும்.

* வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்பு உள்ளவர்களைத் தொடர்ந்து அப்படியே இருக்கச் செய்யுமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். நகர்ப்புற நெரிசலை இது தடுக்கும்.

* சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் `காய்ச்சல் சோதனை மையம்’ என்று ஒவ்வொரு பகுதியிலும் முகாம் நடத்தி, கொரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிகிறார்கள். ஆரம்பநிலையிலேயே கண்டறிவதால், உயிரிழப்பு ஆபத்துகளைக் குறைக்க முடிகிறது. இதைத் தமிழகம் முழுக்கப் பரவலாக்க வேண்டும்.

* உயர் ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகநோய், புற்றுநோய் போன்ற கொரோனாவால் உயிரிழக்கும் பிரச்னையுள்ள நோயாளிகள் மற்றும் முதியோர்கள் கணக்கெடுப்பை தமிழகம் முழுக்க நடத்த வேண்டும். இவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். தேவையற்ற காரணங்களுக்காக இவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டும். வீடுகளிலும் இவர்களைச் சமூக இடைவெளியைப் பின்பற்றும்படி அறிவுறுத்த வேண்டும். சென்னையில் இப்படிச் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத அளவுக்குச் சிறிய வீடுகளில் இருந்த 8,072 பேரை தனிமை முகாம்களில் தங்கவைத்தது அரசு. ‘ரிவர்ஸ் குவாரன்டைன்’ எனப்படும் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* நோய்த் தொற்று இருப்பவர்களை வெளியில் நடமாடவிடாமல் தடுப்பது முக்கியம். இதற்காக ‘ஜியோ ஃபென்சிங்’ என்ற திட்டம் சென்னையில் சில பகுதிகளில் செயல்படுகிறது. அவர்களின் செல்போன் எண்களை வைத்து நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள். வீட்டிலிருந்து 500 மீட்டர் தாண்டி அவர்கள் எங்காவது சென்றால், உடனே எச்சரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைத் தமிழகம் முழுக்கச் செய்யலாம்.

* சிறப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் என்று அதிகாரம் செய்ய நிறைய பேர் தேவையில்லை. களத்தில் பணி செய்வோருக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டளை போட்டு குழப்பமே மிஞ்சும். அதிகாரிகளைக் குறைத்து, களத்தில் பணி செய்வோரை அதிகரிக்க வேண்டும்.