Published:Updated:

`வடியாத மழைநீர்.. தீராத சோகம்..!’ - போராட்டத்தில் குதித்த தஞ்சை கிராம மக்கள்

தேங்கிய மழைநீரை வடிய வைக்க, தாங்களே ஒன்று சேர்ந்து, வாய்க்காலை வெட்டியபோதும் கூட, தண்ணீர் வடியவில்லை. இதனால் வீடுகளுக்குள் வசிக்க முடியவில்லை.

போராட்டத்தில் மக்கள்
போராட்டத்தில் மக்கள்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மாங்குடியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தண்ணீர் வடியாததால், பெரும் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். மழைநீரை வடிய வைக்க, அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

போராட்டத்தில் மக்கள்
போராட்டத்தில் மக்கள்

மாங்குடியில் உள்ள இந்திரா நகரில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாமலே உள்ளது. இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக, கனமழை பெய்து வருவதால் தங்களது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மளிகைப் பொருள்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து உடமைகளும் சேதமடைந்துவிட்டதாக சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள். தேங்கிய மழைநீரை வடிய வைக்க, தாங்களே ஒன்று சேர்ந்து வாய்க்காலை வெட்டியபோதும் கூட தண்ணீர் வடியவில்லை. இதனால் வீடுகளுக்குள் வசிக்க முடியவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களிடம் கண்ணீர் மல்க முறையிட்டும் கூட, இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கொந்தளித்த மக்கள், கும்பகோணம்- சுவாமிமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது, "மழைநீரை வடிய வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே, போராட்டத்தைக் கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றார்கள்.