சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

ஈரோடு தனியார் சரக்கு முனையம்... மக்கள் எதிர்ப்பு... பின்வாங்கிய அதிகாரிகள்!

சென்னிமலை
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னிமலை

ஏற்கெனவே பெருந்துறை சிப்காட்டால் நிலத்தடி நீர் கெடுகிறது; கரித்தூள் காற்றில் பரவுவதால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தனியார் சரக்கு முனையம் அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தச் சென்ற அரசு அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி, திருப்பியனுப்பிய கிராமத்து மக்களின் போராட்டம் ஈரோடு மாவட்டத்தின் பரபர பேசுபொருளாகியிருக்கிறது!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில் நிலையங்களுக்கிடையே, ரயில்வே சார்பில் தனியார் சரக்கு முனையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதையடுத்து, ‘லிகஸி வேர்ஹவுஸ் லெஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனும் தனியார் நிறுவனம், சரக்கு முனையம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.

ஈரோடு தனியார் சரக்கு முனையம்... மக்கள் எதிர்ப்பு... பின்வாங்கிய அதிகாரிகள்!

இந்த நிலையில், சென்னிமலை கிராமத்தில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக வட்டாட்சியர் சிவசங்கரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்றபோது, நிலத்தை அளக்கவிடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள், ‘‘தனியார் மூலமாக அமைக்கவிருக்கும் சரக்கு முனையத்துக்காக நாங்கள் ஏன் நிலம் தர வேண்டும்?’’் என பலத்த எதிர்ப்பு தெரிவிக்கவே, வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கியிருக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் சின்னசாமி, ‘‘சரக்கு முனையம் அமைக்கத் தனியாருக்காக நிலம் கையகப்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம். பக்கத்தில் இருக்கும் வாய்ப்பாடி ஊராட்சியில், ரயில்வேக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் சரக்கு முனையத்தை அமைக்கலாம். அதை விட்டுவிட்டு விவசாய நிலத்தைக் கையகப்படுத்தினால், மக்களின் வாழ்வாதாரமே பறிபோய்விடும். எனவே, நிலத்தைக் கையகப்படுத்த விட மாட்டோம்’’ என்றார் உறுதியுடன்.

பனியம்பள்ளி முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவகுமார், ‘‘ஏற்கெனவே பெருந்துறை சிப்காட்டால் நிலத்தடி நீர் கெடுகிறது; கரித்தூள் காற்றில் பரவுவதால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சரக்கு முனையத்தில் நிலக்கரி இருப்பு வைத்து சப்ளை செய்தால், மேலும் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்’’ என்றார்.

சின்னசாமி - சிவகுமார் - சிவசங்கரன்
சின்னசாமி - சிவகுமார் - சிவசங்கரன்

இதையடுத்து, ‘லிகஸி வேர்ஹவுஸ் லெஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் சேர்மன் முத்துசாமியிடம் பேசினோம். ‘‘இங்கு கட்டப்படும் குடோன்களில் நிலக்கரி இருப்பு வைக்கப்படுமா என்பதை ரயில்வே நிர்வாகம்தான் முடிவுசெய்யும். இங்கு சரக்கு முனையம் அமைந்தால், இந்தப் பகுதியில் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதாரம் மேம்படுவதுடன், அரசுக்கும் வருவாய் கிடைக்கும். அதனால்தான் நிலத்தைக் கையகப்படுத்தித் தர அரசு முன்வந்திருக்கிறது’’ என்றார்.

பெருந்துறை வட்டாட்சியர் சிவசங்கரன், ‘‘நிலத்தை அளவை செய்வதற்காகச் சென்றபோது, வாய்ப்பாடி பகுதியில் ரயில்வேக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலம் இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த இடம் குறித்து ஆய்வுசெய்துவருகிறோம். நிலம் கையகப்படுத்துவது அரசின் கொள்கை முடிவு’’ என்றார் சுருக்கமாக.

மக்களின் குரலுக்கு மதிப்பளியுங்கள்!