Published:Updated:

`தனி நபரால் செய்திருக்க முடியாது' - சாமி சிலை உடைப்பு விவகாரத்தில் கொதிக்கும் பாஜக!

சிறுவாச்சூர் கோயிலில் மீண்டும் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதால், பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலின் துணைக் கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்திருக்கின்றன.

சாமி சிலைகள் உடைப்பு
சாமி சிலைகள் உடைப்பு

இங்கு சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட சாமி பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் 5-க்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், பக்தர்கள் ஆவேசமடைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிலைகள்
சிலைகள்

இந்த நிலையில், மீண்டும் 8-ம் தேதி செங்கமலையார் கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 16 அடி உயரமுள்ள செங்கமலையார் சாமி சிலை, 5 அடி உயரமுள்ள சித்தர்கள் சிலை, 5 அடி உயரமுள்ள கொரப்புலியான் சிலை, குதிரை, காளை, வேட்டை நாய் உட்பட 10-க்கும் மேற்பட்ட சுடுமண்ணால் ஆன சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டன. இது குறித்து பெரம்பலூர் டி.எஸ்.பி சஞ்சீவிகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

சிலைகள்
சிலைகள்
சென்னை: கோயிலில் உண்டியல் உடைப்பு; தடுக்கப் போராடிய காவலாளி கொலை! - சிக்கிய சிறுவர்கள்

அதேபோல், கடந்த 8-ம் தேதி சிறுவாச்சூரில் முருகன் கோயிலில் சிலைகளை உடைக்க முயன்ற நாதன் என்ற நபரைப் பிடித்து அந்தப் பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், 5-ம் தேதி பெரியசாமி கோயிலில் சிலைகளை உடைத்ததும், 8-ம் தேதி சிறுவாச்சூர் பெரியாண்டவர் கோயில் சிலைகளை உடைத்ததும் நாதன்தான் என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில், நான்கு நாள்களுக்கு முன்பு நாதன் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்றைய தினம் மீண்டும் சிறுவாச்சூர் கோயிலில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, சிலை உடைப்பு விவகாரத்தில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நாதன் மீண்டும் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் தேடிவருகின்றனர். தொடர்ந்து சாமி சிலைகளை உடைக்கும் கும்பலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதாக போலீஸாரைக் கண்டித்து, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்து முன்னணியினரும் பாஜக-வினரும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சுடுமண் சிலைகள்
சுடுமண் சிலைகள்

இது குறித்து பெரம்பலூர் பாஜக மாவட்டத் தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ``பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாமி சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். கடந்த முறை சாமி சிலைகளை உடைத்ததாக நாதன் என்பவரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சந்திரசேகரன்
பெரம்பலூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சந்திரசேகரன்

அவர், `எனக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை’ என்று சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்படிப்பட்டவர் எப்படி மீண்டும் சிலைகளை உடைக்க முடியும்? மீண்டும் அவர்தான் சிலையை உடைத்திருப்பார் என்று யூகம் செய்து, அவர்மீது வழக்கு பதிவு செய்து இந்தப் பிரச்னையை மூடி மறைக்கலாம் என்று போலீஸார் நினைக்கிறார்கள்.

சாமி சிலைகள் உடைப்பு
சாமி சிலைகள் உடைப்பு

இவ்வளவு பெரிய சாமி சிலைகளை தனிநபரால் உடைக்க முடியாது. ஒரு குழுவாகச் சேர்ந்துதான் உடைத்திருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யும் வரை விடப்போவதில்லை" என்றார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு