Published:Updated:

மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம்!

வி.களத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
வி.களத்தூர்

1895-ம் ஆண்டில் ஆரம்பித்தது முதல் பிரச்னை. விளையாடிக் கொண்டிருந்த இரு சமூகத்தையும் சேர்ந்த சிறுவர்களுக்குள் சிறு நெருப்பாய் மூண்ட பிரச்னை பெருங்கலவரத்தில் முடிந்தது.

மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம்!

1895-ம் ஆண்டில் ஆரம்பித்தது முதல் பிரச்னை. விளையாடிக் கொண்டிருந்த இரு சமூகத்தையும் சேர்ந்த சிறுவர்களுக்குள் சிறு நெருப்பாய் மூண்ட பிரச்னை பெருங்கலவரத்தில் முடிந்தது.

Published:Updated:
வி.களத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
வி.களத்தூர்

“மச்சான், நாங்க ரெடி...’’ கம்பீரமாக நின்ற மாரியம்மன் கோயில் தேரின் வடம் பிடித்தவாறு ஜாபர் அலியும், ரஃபீக்கும் உற்சாகக் குரல் கொடுக்க, ‘‘நாங்களும் ரெடி மாப்ள...” என எதிர்த்திசையிலும் குரல் ஏகத்திற்கும் அதிர, மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா, எஸ்.பி மணி இருவரும் மகிழ்ச்சியுடன் சைகை தர, 110 வருடப் பகை தீர்ந்த பெரு மகிழ்ச்சியில் ரதவீதியில் நகரத் தொடங்கியது அந்த தேர். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அச்சாணி வார்த்தைக்கு அர்த்தமாய் இன்று மாறியிருக்கிறது வி.களத்தூர் கிராமம். இவர்கள் பகை துறந்த கதையறிய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் லட்சுமிநாராயண பெருமாள், செல்லியம்மன், ராயப்பா மற்றும் மாரியம்மன் கோயில்களைச் சுற்றி ஊரின் மேற்குப்பகுதியில் இந்துக்களும், சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகே கிழக்குப் பகுதியில் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பியாகவும் மாமன் மச்சனாகவும் உறவு கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

தேர்த்திருவிழா
தேர்த்திருவிழா
மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம்!

1895-ம் ஆண்டில் ஆரம்பித்தது முதல் பிரச்னை. விளையாடிக் கொண்டிருந்த இரு சமூகத்தையும் சேர்ந்த சிறுவர்களுக்குள் சிறு நெருப்பாய் மூண்ட பிரச்னை பெருங்கலவரத்தில் முடிந்தது. நெருப்பு அணைந்தாலும் அதன் புகை போலவே தொடர்ந்துகொண்டிருந்தது அப்பகை. அதுவரை ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் நடக்கும் 3 நாள் கோயில் திருவிழாவில் விருந்துண்டு, அரிச்சந்திர நாடகத்தை அழுதபடி பார்த்து முடித்து, மஞ்சத்தண்ணீர் தெளிக்கும் இறுதி நாளில் மஞ்சள் நிறமாகவே மாறிப்போன இஸ்லாமியர்கள் அடுத்த ஆண்டு முதல் இந்துக்களின் திருவிழா எதிலும் கலந்து கொள்ளவில்லை. அதே போல, இஸ்லாமியர்களின் வாசனை மிகுந்த சந்தனக்கூடு ஊர்வலத்திலும் இந்துக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

1912-ம் ஆண்டு நடந்த திருவிழாவின் போது, ‘‘தேரை இழுத்துக்கிட்டு இனிமே எங்க தெரு வழியா வராதீங்க...’’ என ஜமாத்தார்கள் தடுக்க, ‘‘இது எங்க தேரடி வீதியப்பு...’’ எனக் கூறியபடியே அந்த வழியே தேரை இழுத்துச் சென்றனர். அதன் பின்னர் நடந்த மூன்று கலவரங்கள் ஊரையே ரணகளமாக்கின. வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது.

ராஜவீதி
ராஜவீதி
மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம்!

கடந்த ஆண்டு வரை தொடர்ந்த அந்த டென்ஷனுக்கு நிரந்தர விடை கொடுத்துள்ளனர் பெரம்பலூர் கலெக்டரான வெங்கட பிரியாவும் எஸ்.பி-யான மணியும். கடந்த மே மாதம் நடந்த சந்தனக்கூட்டில் கலந்துகொள்ள இந்து சமூகப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களை வைத்தே திருவிழாவை இனிதே தொடங்கினர் இஸ்லாமியர்கள். இதையடுத்து, இப்போது அம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட காட்சிதான் மேலே சொன்னது.

இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடிய ராமசாமியிடம் பேசினோம். ‘‘இஸ்லாமியர்கள் வசிக்கும் ராஜவீதிக்குள் தேரை இழுத்துச் செல்ல கோர்ட் எங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தாலும், அதெல்லாம் இருக்கட்டும்னுட்டு முழு மனதோடு இரு சமூகமுமே இன்னைக்கி ஒன்னுசேர்ந்திருக்கோம். இதுக்காக கலெக்டரம்மாவும், எஸ்.பி சாரும் ரொம்பவே மெனக்கெட்டாங்க. பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வந்த எங்க தொப்புள் கொடி உறவுகளோட மறுபடியும் கூடிக் கலந்ததுலே எங்களுக்கு ரொம்பவே சந்தோஷங்க” என மனநிறைவோடு பேசினார்.

சுன்னத் ஜமாத்தின் முக்கியஸ்தரான ரபீக்யுதீன், “ஒரு காலத்துலே எங்க வீட்டுப் புள்ளைங்க அங்கேயும், அவுங்க வீட்டுப் புள்ளைங்க எங்க வீடுகள்லயும்தாங்க வளரும். எப்படியோ ஆரம்பிச்ச பிரச்னை இப்ப சுமுகமா முடிஞ்சதுல எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம். பிரிஞ்சி இருந்த தாயும் பிள்ளையும் ஒன்னாச் சேர்ந்தமாதிரி உணர்றோம்” என்றார்.

வெங்கட பிரியா
வெங்கட பிரியா

‘சாதித்தது எப்படி?’ என்று பெரம்பலூர் ஆட்சியர் வெங்கட பிரியாவிடம் கேட்டோம். “நூறாண்டுக்கும் மேற்பட்ட இந்தப் பிரச்னையால் ஒருவரை ஒருவர் இழந்து நிற்கும் வலியும், வேதனையும் அவர்களின் அடிமனதில் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம், வி.களத்தூர் கிராமத்திற்குச் சென்று அவர்களிடம் நேரடியாகப் பேசும்போதுதான் புரிந்தது. இதற்காகப் பல முறை நானும் எஸ்.பி சாரும் அங்கு சென்றிருக்கிறோம். இரு சமூகத்தின் ஒரே மகளாக நான் கூறியதை ஏற்று, இரு தரப்புமே ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்து இன்று, மதமல்ல முக்கியம், மனிதமே பிரதானம் என்பதை உணர்த்தியுள்ளார்கள். வி.களத்தூர் மக்களை நினைத்து ரொம்பவே பெருமைப்படுகிறேன்” என புன்முறுவலோடு சொன்னார்.

75-வது சுதந்திரக் கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறார்கள் வி.களத்தூர் கிராமத்து உறவுகள்.