Published:Updated:

72 வயது பாட்டி... 25 வருட போராட்டம்... நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!

நல்லம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
நல்லம்மாள் பாட்டி

சோறு திங்கணும்னா, நெல்லு வெளையணும். அந்த நெல்லு வெளையணும்னா தண்ணி வேணும்.

72 வயது பாட்டி... 25 வருட போராட்டம்... நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!

சோறு திங்கணும்னா, நெல்லு வெளையணும். அந்த நெல்லு வெளையணும்னா தண்ணி வேணும்.

Published:Updated:
நல்லம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
நல்லம்மாள் பாட்டி

ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளங்களை மீட்பதற்காக, 72 வயதிலும் தன்னந்தனியாகப் போராடிவரும் நல்லம்மாள் பாட்டியைத் தெரியாத அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பெரம்பலூரில் இல்லை... ஆனால், நல்லம்மாளின் கோரிக்கையை நிறைவேற்றத்தான் யாரும் தயாராக இல்லை!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லம்மாள் பாட்டி. கணவரோ, பிள்ளைகளோ இல்லாத இவருக்கு, கிராமத்தில் இருக்கும் ஆடு, மாடுகளும், அவை தண்ணீர் குடிக்கும் ஏரியும்தான் ஒரே ஆறுதல். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமித்து வீடுகள் முளைக்கத் தொடங்கவே, தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என்று நடக்க ஆரம்பித்த நல்லம்மாளின் கால்கள், நீதிமன்றப் படிகள் வரை ஓய்வின்றி ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்வதற்காக பெரம்பலூர் வந்த நல்லம்மாள் பாட்டியை, பேருந்து நிலையத்தில் நேரில் சந்தித்தோம். “செத்த எறக்கி வெய்யி கண்ணு…’’ என்ற நல்லம்மாள் பாட்டியின் கையிலும் தலையிலும் வைத்திருந்த சுமைகளை இறக்கிவைத்த நாம் அதிர்ந்துபோனோம். மூட்டை முடிச்சு அத்தனையிலும் கட்டுக்கட்டாய் மனுக்கள்.

72 வயது பாட்டி... 25 வருட போராட்டம்... நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்!

முகத்தைத் துடைத்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார். ‘‘சோறு திங்கணும்னா, நெல்லு வெளையணும். அந்த நெல்லு வெளையணும்னா தண்ணி வேணும். ஆனா, ஏரி, குளத்துக்கு தண்ணி வரக்கூடிய வழியையும்கூட ஆக்கிரமிச்சு வீடு கட்டிட்டா மனுசன் வாழ முடியுமா சொல்லு... பியான் ஏரி, சாம்பன் குளம், நல்ல தண்ணி குளம்னு எங்க நன்னை கிராமமே ஒருகாலத்துல செழிப்பா இருந்தது. இப்ப இதுகளுக்குத் தண்ணி வர்ற வரத்து வாய்க்காலையெல்லாம் ஆக்கிரமிச்சு வீடு கட்டிட்டாங்க. போதாக்குறைக்கு அரசுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நெலத்தையும் ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காங்க. (என்றபடி ‘மேப்’பை விரித்துக் காட்டுகிறார்.) இந்த ஆக்கிரமிப்பைப் பூரா அகற்றி, எங்க ஏரியை மீட்டுத் தாங்கன்னு வி.ஏ.ஓ., தாசில்தாரு, கலெக்டரு, சி.எம்-னு எல்லாருக்கும் மனு போட்டேன். எதுவும் நடக்கலை. ‘பேசாம ஒதுங்கிப்போயிடு’ன்னு சிலர் என்னைய மிரட்டுனாக. அ.தி.மு.க முன்னாள் எம்.பி சந்திரகாசியும், கட்சிக்காரங்க சிலரும் ‘நீ கேக்குற எடத்துலே ஒனக்கு வீடுகட்டி சாவி தாறோம். தனியா ரெண்டு ஏக்கர் நெலமும், பணமும் தாறோம். இந்தப் பிரச்னையை விட்டு விலகிக்கோ பாட்டி’ன்னு சொன்னாக. ‘சல்லிக்காசு எனக்கு வேணாம். ஏரி, குளத்தை முழுசா மீட்டுத் தாங்க சாமி’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறமா, என்னைய கொல்றதுக்கு ரெண்டு மூணு தடவை முயற்சி நடந்துச்சு. பொதுமக்கள்தான் என்னைக் காப்பாத்துனாங்க’’ என்றவர், பெருமூச்சுவிட்டபடியே பேச்சைத் தொடர்ந்தார்.

நல்லம்மாள் பாட்டி
நல்லம்மாள் பாட்டி

‘‘தனி ஆளா நான் போறாடுறதைப் பார்த்துட்டு அப்போ கலெக்டரா இருந்த தாரேஸ் அகமதும், அதுக்கப்புறம் வந்த நந்தகுமாரும் ஆக்கிரமிப்பை எடுக்கிறதுக்கு முயற்சி பண்ணு னாங்க. ஆனா, அவங்களை மாத்திட்டு, தங்களுக்குச் சாதகமான ஒரு கலெக்டரைக் கொண்டு வந்தாங்க அ.தி.மு.க-காரங்க. அவங்க வந்தவுடனேயே, நீர்நிலைப் பகுதிகள்ல உள்ள ஆக்கிர மிப்புகளை உடனே எடுக்கணும்கிற உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர்நிலை புறம்போக்கை, நத்தம் புறம்போக்கா வகைமாற்றம் செஞ்சு, ஆக்கிரமிப்பாளர் களுக்குப் பட்டாவே போட்டுக் குடுத்துட்டாங்க. இந்தப் பிரச்னைக்காக மெட்ராஸ் ஹைகோர்ட்ல வழக்கு தொடுத்தேன். அதில், ‘ஆறே வாரத்துலே ஏரி ஆக்கிரமிப்பையெல்லாம் அகற்றணும்’னு 2013-ம் வருசமே கோர்ட் ஆர்டர் போட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிங்க யாரும் மதிக்கலை.

மறுபடியும், கலெக்டர், சி.எம்-னு பத்து வருஷமா நேரா போயே மனு கொடுத்துட்டு வந்தேன். இப்போ தி.மு.க கவர்மென்ட்டு வந்த பின்னாடிதான், ‘பிரச்னைக்குரிய அந்த ஏரிப்பகுதியை அளந்து அனுப்புங்க’னு கலெக்டருக்கு உத்தரவு போட்டிருக்காங்க. ஆனா, இப்பவும் ஆக்கிரமிப்பு எடத்தையெல்லாம் விட்டுட்டு, எஞ்சியிருக்கிற ஏரியை மட்டும் அளக்க அதிகாரிங்க முயற்சி பண்றாங்க. 25 வருசத்துக்கு முன்னாடி இருந்த வரைபடத்தின்படிதான் ஏரியை அளக்கணும். அப்பத்தான் எங்க ஏரி எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்குனு தெரியும். அதுக்கப்புறம் எல்லா ஆக்கிரமிப்பையும் அகற்றி, ஏரியை முழுசா மீட்கணும்... அதுக்காகவே சொந்த ஊரைவிட்டு சொந்தக்காரங்க வீட்ல தங்கியிருக்கேன். ஏரியை மீட்ட பிறகுதான் நான் ஊருக்குள்ளேயே போவேன். இது சத்தியம்” என்றபடி ஓங்கித் தரையில் அடித்தார் நல்லம்மாள் பாட்டி.

சந்திரகாசி - தாரேஸ் அகமது - நந்தகுமார் - வெங்கட ப்ரியா
சந்திரகாசி - தாரேஸ் அகமது - நந்தகுமார் - வெங்கட ப்ரியா

அ.தி.மு.க முன்னாள் எம்.பி சந்திரகாசியிடம் நல்லம்மாள் பாட்டியின் புகார் குறித்து விளக்கம் கேட்டோம். ‘‘நல்லம்மாளின் கோரிக்கை நியாயமானது, சரியானது. அதிகாரிகள்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை” என்றார் சுருக்கமாக.

பெரம்பலூர் ஆட்சியர் வெங்கட ப்ரியாவிடம் பேசினோம். ‘‘நல்லம்மாவின் நீண்ட நெடிய போராட்டம் பாராட்டுக்குரியது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து, கண்டிப்பாக நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

பாராட்டெல்லாம் இருக்கட்டும். கடமையைச் செய்யுங்கள் கனவான்களே!