Published:Updated:

பேருந்து நிலைய இடமாற்றம் - மக்களுக்காகவா... ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காகவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேரணாம்பட்டு பேருந்துநிலையம்
பேரணாம்பட்டு பேருந்துநிலையம்

சர்ச்சையில் அமைச்சர் வீரமணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி. ஏற்கெனவே, நில அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றம் வரை இவர் பெயர் அடிபட்டது. தற்போது `பேரணாம்பட்டில் சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆதாயமடையும் வகையில், அங்கு புதிய பேருந்துநிலையம் அமைக்கும் வேலைகளைச் செய்துவருகிறார் வீரமணி’ எனப் புகார் கிளம்பியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நகராட்சி பேருந்துநிலையம். இங்கிருந்து சென்னை, கிருஷ்ணகிரி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்துக்கு அருகில் காவல்நிலையம், தினசரி காய்கறிச் சந்தை ஆகியவை உள்ளன. இந்த நிலையில், நகருக்கு வெளியில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பங்களாமேடு பகுதிக்கு பேருந்துநிலையத்தை மாற்ற ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதைத் தொடர்ந்துதான் அமைச்சர்மீது புகார் கிளம்பியுள்ளது.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

இந்த விவகாரம்குறித்துப் பேசிய பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுரேஷ்குமார், “நகரின் மையப் பகுதியில் பேருந்துநிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். தற்போது பேருந்து அமையவிருக்கும் இடம், நகரின் ஒதுக்குப்புறம். அந்த இடத்தில் சில ரியல் எஸ்டேட் அதிபர்கள், வீட்டுமனைகளைப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள். அந்த மனைகள் விற்பனையாகவில்லை. இதனால் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பேருந்துநிலையம் அங்கு வர வேண்டும் என்று ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 400 மீட்டர் தூரம் உள்ளடங்கி மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மனைப்பிரிவுகளைத் தாண்டி கடைசிப் பகுதியில் பேருந்துநிலையத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீட்டுமனைகளைத் தாண்டித்தான் பேருந்துநிலையம் செல்ல முடியும். ‘பேருந்துநிலையம் வந்தால் அந்த இடம் வளர்ச்சி பெறும். அதன்மூலம் மனைகளை அதிக விலைக்கு விற்க முடியும்’ என்பதுதான் ரியல் எஸ்டேட் அதிபர்களின் திட்டம். இதற்கு அமைச்சரும் உடந்தையாக இருக்கிறார் என்பதுதான் வேதனை. நகர மக்கள், நகர்ப்புறத்தைச் சுற்றியிருக்கும் வணிகர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சரும் அதிகாரிகளும் பேருந்துநிலையம் அமைப்பதில் முனைப்பாக இருக்கின்றனர்.

பேரணாம்பட்டு பேருந்துநிலையம்
பேரணாம்பட்டு பேருந்துநிலையம்

பேருந்துநிலைய இடமாற்றத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ‘பேருந்து நிலைய மீட்புக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்தக் குழுவில் பா.ம.க மற்றும் பா.ஜ.க பிரமுகர்களும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதுவரை 19 முறை போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும், விடாப்பிடியாக திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறார் வீரமணி” என்றார் சுரேஷ்குமார்.

குடியாத்தம் சட்டசபைத் தொகுதிக்குள் தான் பேரணாம்பட்டு வருகிறது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான காத்தவராயனிடம் பேசியபோது, “பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்று சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தேன். நான் தி.மு.க-வைச் சார்ந்தவன் என்பதால், அதிகாரிகள் நான் சொல்வதை வழக்கம்போல் கேட்பதில்லை” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேருந்துநிலைய மீட்புக்குழுவினர் சிலரிடம் பேசியபோது, “இப்போதுள்ள பேருந்து நிலையத்தால் நகருக்குள் பெரியளவில் போக்குவரத்து நெரிசல் கிடையாது. தேவையே இல்லாமல் இடமாற்றம் செய்கிறார்கள். மேலும் தற்போதைய பேருந்துநிலையம் அருகே 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காவல்நிலைய கட்டடம் உள்ளது. அருகில் உள்ள ஒன்றரை ஏக்கர் அரசு நிலத்தில் புதிய காவல் நிலையத்தைக் கட்டி, பழைய கட்டடத்தை இடித்துவிட்டால், பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்துவிடலாம். அது சாத்தியமில்லை என்றாலும், நகருக்குள்ளேயே வேறு பல இடங்கள் உள்ளன. அங்குகூட பேருந்து நிலையத்தை அமைக்கலாம். ஆனால், ரியல் எஸ்டேட் அதிபர்களின் சுயலாபங்களுக்காகவே பேருந்து நிலையத்தை வெகுதூரத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவிருக் கிறோம்” என்றனர்.

சுரேஷ்குமார் - காத்தவராயன்
சுரேஷ்குமார் - காத்தவராயன்

அமைச்சர் வீரமணியிடம் இதுகுறித்துக் கேட்டோம். “காவல்நிலையத்தை இடித்துப் பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்வது சாத்தியமில்லாதது. பேருந்துநிலையத்துக் காக சிலர் தானமாக நிலத்தைக் கொடுத்திருக்கின்றனர். அந்த இடமும் நகராட்சி எல்லைக்குள்தான் இருக்கிறது. அந்த இடத்தில் பேருந்துநிலையம் அமைந்தால், அந்தப் பகுதி வளர்ச்சி பெறும். புதிய பேருந்துநிலையம் அமைந்தாலும் இப்போதைய பேருந்துநிலையம் தொடர்ந்து செயல்படும். பேருந்துகள் வழக்கம்போல் இங்கும் நின்று செல்லும். என்மீது சொல்லும் குற்றச்சாட்டுகளில் துளியளவும் உண்மையில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு