Published:Updated:

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

அம்மாவுடன் பேரறிவாளன்
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன் பேரறிவாளன்

என்னுடைய இந்த விடுதலைக்குப் பல்வேறு காலகட்டங்களில் பலர் உதவியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது.

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

என்னுடைய இந்த விடுதலைக்குப் பல்வேறு காலகட்டங்களில் பலர் உதவியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது.

Published:Updated:
அம்மாவுடன் பேரறிவாளன்
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன் பேரறிவாளன்

``நான் கொஞ்சம் வெளிக்காற்றை சுவாசிக்கணும்... நிதானமாக மூச்சுவிடணும்... நான் என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிறேன்..!’’ ‘31 ஆண்டுக்காலச் சிறைவாசத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இனி, உங்கள் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது?’ எனப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, இப்படியொரு பதிலைச் சொன்னார் பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்துவந்த எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை விடுதலை செய்தது. விடுதலையான நாள் முதலே தமிழ்நாட்டு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, வைகோ உள்ளிட்ட தலைவர்களை வரிசையாகச் சந்தித்துவருகிறார். அவரின் நன்றி தெரிவிக்கும் சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்... நம்பிக்கையான குரல், நெகிழ்ச்சியான சொற்கள், நிதானமான கருத்துகளில் ஒலித்தன அவர் பதில்கள்!

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

``விடுதலை என்கிற அறிவிப்பு வந்த கணம் உங்களுக்கு எப்படியிருந்தது?’’

``மிகவும் மனநிறைவாக இருந்தது. மிக நீண்டதொரு சட்டப் போராட்டம். யாருக்கும் ஒரு சலிப்பைக் கொடுத்துவிடக்கூடிய ஒரு சட்டப் போராட்டம். இந்தப் பயணத்தில் நிறைய முறை விழுந்து, எழுந்திருக்கிறேன். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது; மனம் நிறைவாக இருக்கிறது. அனைத்தையும்விட, அம்மாவின் மகிழ்ச்சி, எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நிறைய துன்பங்களைச் சுமந்தது அம்மாதான். உண்மையைச் சொல்லப்போனால் 31 வருட என்னுடைய தண்டனையை அனுபவித்தது அம்மாதான்!’’

``பல்வேறு பின்னடைவுகள் இருந்தபோதும், தொடர்ந்து உங்களை முன்னோக்கி நகரச் செய்தது எது?’’

``மிகவும் ஆழமாக என்னுடைய மனதுக்குள் ஓர் ஆதங்கமும் வருத்தமும் இருந்துகொண்டே இருந்தன. நிரபராதியாக இருந்து இது போன்ற ஒரு சட்டச் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டது தீராத வலியைக் கொடுத்தது. நாம் நிரபராதி, நம் பக்கம் உண்மை இருக்கிறது என்கிற எண்ணம்தான் என்னை ஒரு வைராக்கியத்தோடு நகர்த்திக்கொண்டேயிருந்தது. அதற்கும் அப்பால், இந்த நீதி அமைப்புக்குள் சட்டப் போராட்டத்தின் மூலம் நீதியைப் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது.’’

“அந்த நம்பிக்கை எப்போது, எப்படி உருவானது?’’

``நான் ரொம்ப ரொம்ப எளிய மனிதன். நான் சிறைக்குச் சென்ற காலத்தில், எனக்கு எந்தவிதச் சட்ட அறிவும் புரிதலும் கிடையாது. ஆனால், அடிப்படையில் நான் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்ததால், எந்தவொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என ஆராய்ச்சி செய்யும் இயல்பு இருந்தது. இந்த வழக்கிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக, சட்டம் குறித்து வாசிக்கத் தொடங்கினேன். ஒருகட்டத்தில் கதைப் புத்தகங்களைச் சிலர் விருப்பப்பட்டு வாசிப்பதைப்போல, தீர்ப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு தீர்ப்பையே ஐம்பது முறையெல்லாம் வாசித்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு நான் என்னை Equip செய்துகொண்டேன். ஒரு கட்டத்தில் குறிப்பாக, 2008, 2009-க்குப் பிறகு இந்த வழக்கை நானே எடுத்துச் செய்ய முடியும் என்கிற முழுமையான நம்பிக்கை வந்தது. அதற்குக் காரணம் என்னுடைய வாசிப்புதான்.’’

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

``தீர்ப்புகளைத் தாண்டி, சட்டம் சம்பந்தமாக வேறு ஏதேனும் வாசித்தீர்களா?’’

``ஆமாம். நிறைய கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். என்னுடைய அறையில் எல்லாச் சட்டப் புத்தகங்களும் இருக்கும். குறிப்புகளுடன்கூடிய அரசியலமைப்புச் சட்டத்தை அடிக்கடி எடுத்து வாசிப்பேன். ‘Pardoning Powers’ குறித்து 52 பக்கங்களில் ஆய்வே என்னிடம் தனியாக இருக்கிறது. சட்டத்தை எல்லோரும் படிக்கலாம். ஆனால், சரியான கோணத்தில், சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். சட்டரீதியாக எனக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் நான் பார்க்க மாட்டேன். எனக்கு எதிரான விஷயங்கள் குறித்துத்தான் முதலில் பார்ப்பேன். அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து என்னுடைய வழக்கறிஞர்களுடன் விவாதிப்பேன். ஒரு கட்டத்தில் இந்த வேலைகளை நான் மிகவும் நேசித்துச் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்ததாக, தகவலறியும் உரிமைச் சட்டம் வந்தது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மரண தண்டனைகள் குறித்துப் பல்வேறு ஆவணங்களை நான் அரசிடமிருந்து பெறுவதற்கு அதுதான் உதவியாக இருந்தது. குறிப்பாக, 2018-ல் எங்கள் மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்துவிட்டார் என்கிற தகவல் பரப்பப்பட்டது. ஆனால், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்க, `இல்லை எங்களுக்கு வரவேயில்லை, நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை’ என ஜனாதிபதி மாளிகையே மறுத்தது. அது, சட்டரீதியாகவும் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. குறிப்பாக சஞ்சய் தத் வழக்கு தொடர்பான விஷயங்களைச் சொல்லலாம். அந்தவகையில் இந்தச் சட்டப் போராட்டத்தில் பல்முனை முயற்சியின் காரணமாகவே வெற்றி கிடைத்திருக்கிறது.’’

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

``வாசிப்பில் ஆர்வம் மிக்கவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தோராயமாகச் சிறைக்குள் எத்தனை புத்தகங்கள் வாசித்திருப்பீர்கள்?’’

``கணக்காக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. தீவிரப் படிப்பாளியெல்லாம் இல்லை. ஆனால், சிறை வாழ்க்கையைத் துணிவாக எதிர் கொள்வதற்கு என் வாசிப்புப் பழக்கம் மிகவும் உதவியாக இருந்தது. இல்லையென்றால், என் வாழ்க்கையையே தொலைத்திருப்பேன். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு புத்தகத்தை வாசித்திருக்கிறேன். பல நேரங்களில், வள்ளுவன்தான் என் வழிகாட்டி. ‘திருக்குறள்’தான் எனக்குப் பல நேரங்களில் ஆறுதலாக இருந்தது. அந்தந்தக் காலகட்டத் துன்பங்களுக்கு ஏற்ற மாதிரி, ஓர் அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பேன். மரண தண்டனை விதிக்கப்பட்ட காலகட்டங்களிலெல்லாம் ‘நிலையாமை’ என்கிற அதிகாரத்தை அதிகம் படித்திருக்கிறேன்.’’

``உங்களின் விடுதலை என்பதைத் தாண்டி... நீங்கள் தொடுத்த வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான, மாநில அரசுக்கான அதிகாரங்கள் என அரசியல்ரீதியான விவாதங்களையும் உருவாக்கியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அரசியல் சார்ந்த விஷயமாக நான் இதைப் பார்க்கவில்லை. சட்டரீதியான விஷயமாகவே பார்க்கிறேன். நீதியரசர்கள் சொல்கிற மாதிரி இங்கு யாரும் பெரியவர்கள் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம்தான் பெரியது. நீங்கள், நான் என நம் அனைவரையுமே அரசியலமைப்புச் சட்டம்தான் ஆள்கிறது. அரசியலமைப்பில் இருக்கிற விஷயங்கள் இந்த வழக்கின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. என் வழக்கு மூலமாக இது நடந்திருப்பது, மிகப்பெரிய மனநிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எதிர்காலத்தில் மரண தண்டனை, தண்டனைக் குறைப்பு வழக்குகளில், A.G.பேரறிவாளன் Vs என மேற்கோள் காட்டப்படப்போவது, மிகப்பெரிய சுயதிருப்தியை எனக்குக் கொடுத்திருக்கிறது. இத்தனை காலம் நான் நடத்திய சட்டப் போராட்டத்துக்கும், உட்கார்ந்து படித்ததற்கும் கிடைத்த மிகப்பெரிய பலனாக அமைந்திருக்கிறது. எனக்கு 31 ஆண்டுகள் ஆனது, என்னுடைய முன்னுதாரணத்தின் மூலம் மூன்று மாதங்களில் இன்னொருவருக்கு விடுதலை கிடைத்தால், அதுவே போதும்.’’

``அதேபோல 142-வது பிரிவைப் பயன்படுத்தி, விடுதலை செய்யப்பட்டிருப்பதும் கவனத்துக்குள்ளாகி யிருக்கிறதே..?’’

``உச்ச நீதிமன்றத்தின் உச்சபட்ச அதிகாரம் இது. மிகவும் அரிதாகத்தான் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரிவைப் பயன்படுத்தும். இந்த வழக்கில் நிறைய அநீதி நடந்திருக்கிறது என உச்ச நீதிமன்றம் கருதியதால்தான், இந்தப் பிரிவின் கீழ் விடுதலை செய்திருக்கிறது.’’

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்
“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

``சட்டம் சார்ந்து மிகவும் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்... உங்களின் அடுத்தகட்டம் அந்தப் பாதையில் இருக்குமா?’’

``ஆமாம். முறையாகச் சட்டம் படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கான வாய்ப்புகள் இருந்தால், அடுத்த ஆண்டிலேயே சேர்ந்துவிடுவேன். மக்களுக்குப் பயனுள்ள வகையில் உண்மையைச் சொல்லக்கூடிய, உதவி செய்யக்கூடிய ஒரு வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம்.’’

``தமிழக அரசின் செயல்பாடுகள், ஒத்துழைப்பு எப்படியிருந்தன?’’

``இந்த வழக்கைப் பொறுத்தவரை, தங்களுடைய அரசமைப்பு அதிகாரத்தை நிலைநாட்டுகிற வகையில், உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் ஃபைல் செய்தார்கள். இதில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதியை அமர்த்தி மிகவும் திறம்பட வாதம் செய்தார்கள்.’’

``முதல்வர் சந்திப்பின்போது என்ன பேசிக்கொண்டீர்கள்?’’

``தமிழக அரசின் முயற்சிகளுக்கு நன்றி சொன்னேன். முதல்வர் என்னுடைய விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். தவிர்த்து, என்னுடைய அக்கா, தங்கை குடும்பத்தைப் பற்றித்தான் மிகவும் அக்கறையோடு விசாரித்தார். அப்படிப் பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம்.’’

``ஜாமீன் கிடைத்தபோதே முதலில் செங்கொடியின் நினைவிடத்துக்குத்தான் சென்றீர்கள். இப்போதும் அறிவிப்பு வந்தவுடனேயே வீட்டுக்கு வெளியே அவரின் புகைப்படத்துக்கு மரியாதை செய்தீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

``என் உயிரோடு கலந்த உணர்வு சார்ந்த விஷயமாகத்தான் செங்கொடியை நான் பார்க்கிறேன். செங்கொடியின் மரணம் அப்போதே எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்தது. நாங்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக இன்னோர் உயிர் போவது நியாயமில்லை. நான் வாழும் காலம்வரைக்கும் தீராதவலியைக் கொடுக்கக்கூடிய விஷயம் அது. செங்கொடி என்னைச் சிறையில் சந்திக்க, பெயர் கொடுத்திருந்தார்கள். ஆனால், அப்போதுள்ள சூழலில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. மரண தண்டனைக் காலத்திலும்கூட, நான் என்னைச் சந்திக்க வரும் அனைவரையும், `இதெல்லாம் ஒன்றுமில்லை பார்த்துக்கலாம்’ என நம்பிக்கையாகப் பேசி அனுப்பிவைப்பேன். ஒருவேளை அன்று நான் சந்தித்திருந்தால், அந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார் என்கிற ஆதங்கம், வலி எனக்கு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். வெளியிலிருந்து யாரும் அந்த நம்பிக்கையை ஊட்டவில்லையே என்கிற வருத்தம் உண்டு.’’

``உங்களுக்கு ஆறுதல் சொல்ல வருபவர்களுக்கு நம்பிக்கை தந்து பேசுமளவுக்கான மனத்துணிவைச் சிறைக்குள் எப்படிப் பெற்றீர்கள்?’’

``சிறைக்குள் நண்பர்கள், தம்பிகள் என்னை ‘பூஸ்டர்’ என்றுதான் கூப்பிடுவார்கள். வாலிபாலில் நெட்டுக்குப் பக்கத்தில் மற்றவர்கள் அடிப்பதற்கு செட் செய்துதரும் செட்டர்களுக்கு `பூஸ்டர்’ என்ற பெயரும் இருக்கிறது. நான் எப்போதாவது கொஞ்சம் சோர்ந்து பேசினால்கூட, ‘என்ன அண்ணா நீங்களே இப்படிப் பேசுறீங்க?’ என்பார்கள். அப்போதுதான் என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது எனக்குப் புரிந்தது. குறைந்தபட்சம் அந்த நம்பிக்கையை ஊட்டுகிற மனிதராகவாவது இருக்க வேண்டும் என்பதால்தான், பல நேரங்களில் என் துன்பத்தைக்கூட யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தேன். ஒருகட்டத்தில் அது என் லைஃப் ஸ்டைலாகவே மாறிவிட்டது.”

“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்
“31 வருட தண்டனையை அனுபவித்தது என் அம்மாதான்!” - உருகும் பேரறிவாளன்

``உங்கள் விடுதலை, பல்வேறு தரப்பினராலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``மிகப்பெரிய கொடுப்பினை அது. என்னுடைய இந்த விடுதலைக்குப் பல்வேறு காலகட்டங்களில் பலர் உதவியிருக்கிறார்கள். அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது. அனைவரையும் சந்தித்து என்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதேவேளையில் பலர் இப்போது இல்லை. கிருஷ்ணய்யர் சமாதிக்குப் போய் வணக்கம் செலுத்த வேண்டும். மாணவர் நகலகம் அருணாச்சலம் ஐயா என்னுடைய குடும்பத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்பாக மறைந்த என் தம்பி ஹரி வரையில் பலரை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மறைந்த அண்ணன் சாகுல் ஹமீது... நீதிபதி எஸ்.சுரேஷ், பியூசிஎல் கே.ஜி.கண்ணபிரான், கேரளாவைச் சேர்ந்த முகுந்தன் சி.மேனன், ஓவியர் வீரசந்தனம் அண்ணன், கவிஞர் இன்குலாப் ஐயா, கி.த.ப ஐயா, நாத்திகம் ராமசாமி இப்படியான பல மனிதர்கள் எனக்காகப் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள்.’’

“தமிழ்நாட்டில் சிறை சார்ந்த செயல்பாடுகள் (Activism) எந்த அளவுக்கு இருக்கின்றன என நினைக்கிறீர்கள்?’’

``சிறையைப் பற்றி வெளியுலகத்தில் உண்மையான புரிதல் இல்லை. சிறைச் சீர்திருத்தங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு அது மிகவும் அவசியமாகவும் அவசரமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு அதைச் செய்யும் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் முதல்வரிடம் அது குறித்துப் பேச வேண்டும் எனவும் நினைக்கிறேன்.’’

“உங்கள் விடுதலையின் மூலம், மற்ற ஆறு பேரின் விடுதலையும் எளிதாகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே..?’’

``நிச்சயமாக. அவர்கள் ஆறு பேருக்கும் விடுதலையாகக்கூடிய அனைத்து உரிமைகளும், தகுதியும் இருக்கின்றன. கட்டாயம் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.’’