Published:Updated:

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

தாயுடன் பேரறிவாளன்
பிரீமியம் ஸ்டோரி
தாயுடன் பேரறிவாளன்

படங்கள்: சௌ.கணேஷ்குமார்

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

படங்கள்: சௌ.கணேஷ்குமார்

Published:Updated:
தாயுடன் பேரறிவாளன்
பிரீமியம் ஸ்டோரி
தாயுடன் பேரறிவாளன்

``19 வயசுல கைதானப்ப, படிக்கணும், வேலைக்குப் போகணும், நல்லா சம்பாதிக்கணும், வீடு வாங்கணும், அப்பா அம்மாவை நல்லா பார்த்துக்கணும், திருமணம் பண்ணிக்கணும்னு ஒரு இளைஞனுக்கு என்ன மாதிரியான கனவுகள் இருக்குமோ அந்த எல்லாமே எனக்கும் இருந்துச்சு. இன்னிக்கு 31 ஆண்டுக்கால வலியோடு திருப்பிப் பார்க்கறப்ப, அவை சாதாரண கனவுகளாத்தான் தோணுது'' வலிகளை மறைத்த புன்சிரிப்புடன் பேசுகிறார் பேரறிவாளன்.

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

10 மாதம் கருவில் சுமந்த குழந்தை பிறக்கும்போது ஒரு தாய்க்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு மகிழ்ச்சியோடு இருக்கிறார் அற்புதம்மாள். கருவில் சுமந்த தன் மகனை சிறை பறித்துக் கொள்ள, 31 ஆண்டுக்காலம் பாசத்தையும், போராட்டத்தையும் சுமந்து சென்று மகனுக்கு இரண்டாவது முறையாக சுதந்திரக் காற்றைப் பிரசவித்திருக்கிறார். “இந்த 31 ஆண்டுக்காலம் தண்டனை அனுபவித்தது அம்மாதான்... இது அவருக்கான விடுதலை” என்று நெகிழ்கிறார் பேரறிவாளன். கறுப்பும் வெள்ளையுமாக தன் வாழ்க்கையை எதார்த்தமாகப் பிரதிபலிக்கும் தாடி, 31 ஆண்டுக்கால வலி என்று ஏராளமான கவலை ரேகைகள் பேரறிவாளன் கதையை எடுத்துக்காட்டினாலும் அதையெல்லாம் கடந்து தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் சிரித்துப் பேசுகிறார், கிண்டல் அடிக்கிறார், குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறார்.

தொடர் பயணங்கள், சந்திப்புகளுக்கு நடுவே ஆசுவாசமான ஒரு நண்பகல் நேரத்தில் பேரறிவாளனிடம், “எப்படி இருக்கிறது சுதந்திரக் காற்று?” என்று ஆரம்பித்தோம். “நீண்ட, நெடிய போராட்டம். 31 ஆண்டுக்கால தனிமைச் சிறை, சட்டப் போராட்டம். 31 ஆண்டுக்காலம் ஒரு தாயின் வேதனை, கண்ணீர் இதுக்கெல்லாம் நிரந்தரமா ஒரு முடிவு கிடைச்சிருக்கு. குறிப்பா அம்மாவுக்கு பெரிய விடுதலை கிடைச்சிருக்கு. அதுல எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 1991-ல கைதாகி, 26 ஆண்டுகள் கழிச்சு, 2017-லதான் முதன்முதலா பரோல்ல வந்தேன். காவல்துறையோட கட்டுப்பாட்டுக்குள்ளதான் இருக்க வேண்டிய சூழல். என் வீட்டை விட்டே நான் வெளியில் வரமுடியாத நிலை.

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

பரோலுக்கும், விடுதலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பரோல் ரொம்ப தற்காலிகமான விஷயம். எப்பவும் சிறை நினைப்பு இருந்துட்டே இருக்கும். அத்தனை வருஷம் தனிமைச் சிறை வாசத்துல இருந்து, குடும்பத்தோட மகிழ்ச்சியைப் பார்த்துட்டு மீண்டும் சிறைக்குப் போகிறது பெரிய வலியைக் கொடுத்துச்சு. அந்தத் துயரத்தைத் தாங்கவே முடியாது. ஒவ்வொரு முறையும், நான் திரும்பி சிறைக்குப் போகிறப்ப வீட்ல அழுவாங்க. அந்த வலியை நான் அவங்ககிட்ட காட்டிக்க மாட்டேன். தனிமைல ரொம்ப வேதனைப்பட்டிருக்கேன். முதல்முறை பரோல் முடிஞ்சு சிறைக்குப் போறப்ப கண்ணீரெல்லாம் வந்திருச்சு. இதுக்கு எப்பத்தான் நிரந்தர முடிவு கிடைக்கும்னு வருத்தப்படுவோம்.

ஆனாலும் அதை விடுதலைக்கு முக்கியமான ஒரு படிநிலை வளர்ச்சியா பார்க்கத் தொடங்கினேன். கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு அரசு பரோல் கொடுத்தாங்க. ஒவ்வொரு மாசமும் அதை நீட்டிப்பு பண்ணினாங்க. அடுத்தடுத்து பிணை உத்தரவு, விடுதலை உத்தரவு வாங்கறதுக்கு அது பயன்பட்டுச்சு.

நான் முதல்முறை பரோல்ல வந்தப்ப எனக்குத் தெரிந்த ஒரு அண்ணன், ‘நாங்க எல்லா வகைலயும் யோசிச்சுட்டோம் அறிவு. நீ சிறைக்குப் போகிறதுக்குத் தகுதியானவன் கிடையாது’ன்னு சொன்னார். சிறைக் கண்காணிப்பாளரா இருந்து ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி ராமச்சந்திரன், ‘இவன் சிறைல இருக்க வேண்டிய மனிதன் இல்லை’ன்னு அடிக்கடி சொல்வார். நல்லவர்கள் சில நேரம் வீழ்ந்துபோவதுண்டு. அது இப்போது மிக சஜகமாக நடக்கிறது. நல்லவன் நல்லபடியாக வாழ்வதுதான் இயற்கையின் நியதியாக இருக்க முடியும். இயற்கை நியதிக்கு முரணாக என் வாழ்க்கை அமைந்துவிட்டது.

அடிப்படையில் நான் கோழை. பெரிய வீரனெல்லாம் இல்லை. எதையும் தாங்கும் இதயமெல்லாம் இல்லை. பாசத்துக்கு ஏங்குபவன். என் குடும்பமும் அப்படித்தான். அம்மா, அக்கா கண்ணீரில் அது தெரியும். அப்படி ஒரு குடும்பப் பின்னணியில் இருந்து வந்து 31 ஆண்டுச் சிறைவாச வலியை எப்படிக் கடந்து வந்தேன்னு எனக்கு இப்பவும் சொல்லத் தெரியல. அம்மா, அக்கா, தங்கை, என் அக்கா கணவர், தங்கை கணவர்னு மொத்தக் குடும்பமும் என்கூட நின்னுச்சு. இந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் கிடைக்காது.

‘காசு பணத்தை விடு... மனுஷங்களைச் சம்பாதி’ன்னு அப்பா அடிக்கடி சொல்வார். நான் சம்பாதித்த மனிதர்கள்தான் என் பலம். என் பக்கம் உண்மை இருந்தது. அதைத்தான் நானும், அம்மாவும் ஆதாரஸ்ருதியாக நம்பினோம். அந்த உண்மையில் இருந்துதான் இவ்வளவு பெரிய போராட்டத்தைக் கட்டி எழுப்பினோம். ‘எத்தனை மனிதர்கள் எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவைதான். எத்தனை மனிதர்கள் ஆதரித்து நின்றாலும் தவறானவை தவறானவைதான்’ என்பது வில்லியம் பென் சொன்ன வார்த்தைகள். உண்மை தோற்கக் கூடாது. என் உண்மையை ஜெயிக்க வைக்கும் உத்வேகம்தான், எத்தனை முறை வீழ்ந்தாலும் வேகமாக இயங்க வைத்தது.

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

கைது செய்யப்பட்டு 68 நாள்கள் சி.பி.ஐ காவலில் இருந்தேன். அதில் 8 நாள்கள் சட்டவிரோதமான காவல். அந்த 68 நாள்கள்ல நடந்த கொடுமைகளை இப்போது நினைத்தாலும் மனம் ஆறாது. ஒரு பொய் வழக்கைப் போட்டு, மனசாட்சி இல்லாமல் இப்படித் தாக்கியுள்ளார்களே என்ற மன வருத்தம் எப்போதும் இருக்கிறது. அது உடல்ரீதியாக நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிலை இன்னொரு நிரபராதிக்கு வரக்கூடாது. ஒரு தனி அறைக்குள் சிறைவாசம். 1991-ல கைதாகி, நான் தரையில் இறங்கி உலாவ 10 ஆண்டுகள் ஆச்சு. 2001-லதான் நாங்க மண்ணை மிதிச்சோம்.

1999-ல எனக்கு தூக்கு வந்தப்ப, ‘இவ்வளவு துன்பங்களை அனுபவிச்சிருக்கோம். இது வெளியுலகத்துக்குத் தெரியாம நாம செத்துருவமோ’ன்னுதான் நிறைய மனுக்களைப் போட்டேன். அந்த மனுக்கள்தான், ‘தூக்குக் கொட்டடியில் இருந்து முறையீட்டு மடல்’ என்ற பெயரில் புத்தகமா வந்தது. அதைப் படித்துவிட்டு ஒரு இன்ஸ்பெக்டர் சிறைக்கு வந்து என்னிடம், ‘தவறான புரிதலோட பண்ணிட்டேன்’ என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்'' என்ற பேரறிவாளன் அந்த நினைவுகளுக்குள் சென்று மௌனமாகிறார். திரும்பவும் தொடர்கிறார்.

‘‘31 ஆண்டு என்பது இரண்டு தலைமுறைக் காலம். இதில் நான் தவறவிட்டவை ஏராளம். என் அக்கா, தங்கை திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. என்னை வளர்த்த பாட்டி, தாத்தா இறப்பு துக்கத்தில் பங்கேற்க முடியவில்லை. எங்களுக்கு உதவிய பலர், நான் பார்ப்பதற்குள் இறந்துள்ளனர். நீதியரசர் கிருஷ்ணய்யர் என்மீது மிகவும் பாசமாக இருப்பார். ‘பேரறிவாளன் களங்கம் இல்லாத மனிதன். அந்த நிரபராதிக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கடிதம் எழுதியவர். அவரிடம் போனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரை நேரில் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டேன். இப்படி நான் ஆசைப்பட்ட பலரை சந்திக்க முடியவில்லை. என் இழப்புப் பட்டியல் பெரிது. எண்ணற்ற மனிதர்களை இழந்திருக்கிறேன். என் விடுதலையை அவர்களெல்லாம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.

அடிப்படையில் நான் ஒரு பகுத்தறிவுவாதி. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள், அவரிடம் முறையிடலாம். எனக்குப் போக்கிடம் கிடையாது. நிரபராதி என்பதுதான் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. என் பக்கம் இருக்கும் உண்மையை உடைத்து, மீள்வதற்கான வழியைத் தேடத் தொடங்கினேன். இது ஒரு நாளில் நடந்த விஷயமில்லை.

“எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு!” - மனம் திறக்கும் பேரறிவாளன்

மரணம் வந்தால் வரட்டும். அது இயற்கை. அதற்காகக் கலங்கி நிற்கக் கூடாது. அதேநேரத்தில் போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதுதான் 16 ஆண்டுக்கால மரண தண்டனை வலியைக் கடக்க உதவியது. ‘நீ செத்துப்போயிடுவ' என வாழ்க்கையில் மூன்று முறை எனக்குத் தேதி குறித்தார்கள். 1999-ல இரண்டு முறை, கடைசியா செப்டம்பர் 9, 2011-ல தூக்குல போட தேதி குறிச்சுட்டாங்க. மரணத்தின் அருகில் சென்று வந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். தேதி குறித்ததால் நாங்கள் மரணத்தை இன்னும் நெருங்கியிருக்கிறோம். நல்ல எழுத்தாளர்கள் உதவி செய்தால் அந்த வலிகளை அப்படியே பதிவு செய்வேன்.

1999-ல் எங்களுக்குத் தூக்கை உறுதி செய்த மூன்று நீதிபதிகள் அமர்வில், நீதியரசர் கே.டி.தாமஸ்தான் தலைமை நீதிபதி. இப்போது விடுதலையான பிறகு, ‘நான் அறிவுகிட்ட பேசணும். சந்திக்கணும். அவன் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும்’ என விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய நீதி அமைப்பில் எந்தச் சிறைவாசிக்கும் கிடைக்காத பெயர் அது. தண்டனை வழங்கிய நீதிபதியே இப்படிச் சொல்வது என் மீதான குற்றமற்ற தன்மையைக் காட்டுகிறது.

தியாகராஜன் ஐ.பி.எஸ் ஒடிசாவில் இருக்கிறார். அவருக்கும் மனசாட்சி உறுத்தியுள்ளது. பொதுவாக ஓய்வுபெற்ற பிறகு அரசு அதிகாரிகள் எழுதும் புத்தகங்களில், ‘என் மேலதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்போதும் நான் நேர்மையாக இருந்தேன்' என்றுதான் சொல்வார்கள். ஆனால், ‘நான் தவறு செய்துவிட்டேன். பேரறிவாளன் குற்றவாளியாக இருக்க நான்தான் காரணம்’ என்று பேட்டி கொடுத்துவிட்டு அதை உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவும் பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்துவிட்டுத்தான் கோபால் சங்கர நாராயணன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் பணம், பொருள் எதிர்பாராமல் எனக்காக வாதாட முன்வந்தனர். அது நீதியரசர்களின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது.

இன்று என்னை நிரபராதி எனச் சொல்லி விடுதலை செய்யும் வாய்ப்பைக் கொடுக்காமல் இருக்கலாம். விடுதலை என்கிற வாய்ப்பைக் கொடுக்கும் எண்ணத்தை உருவாக்கியது தாமஸ் மற்றும் தியாகராஜன்தான். ‘இந்த விசாரணையில் தவறு இருக்கிறது’ என்று தாமஸும், ‘அவர் வாக்குமூலத்தை நான் தவறாகப் பதிவு செய்துவிட்டேன்’ என்று தியாகராஜனும் கூறியது எனக்கு உதவியாக இருந்தது. நான் நிரபராதி என்பதுதான் இதற்குக் காரணம்’’ என்றவரிடம், “இப்போதும் பேரறிவாளன் நிரபராதி என நீதிமன்றம் சொல்லவில்லையே. நீங்கள் குற்றவாளிதான் என உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்களே” எனக் கேட்டோம்.

“அவர்கள் சொல்வது உண்மைதான். நான் நிரபராதி என்று தீர்ப்பில் இல்லை. தீர்ப்புகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்குமா எனத் தெரியவில்லை. எல்லாருடைய துன்பங்களும் வேதனைக்குரியதுதான். ஒரு மனிதனுடைய இழப்புக்கும் துன்பத்துக்கும் ஒரு நிரபராதியின் உயிரோ, வாழ்க்கையோ ஈடுகட்ட முடியுமா?

இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் ரகோத்தமன். 2005-ல் ஓய்வு பெற்ற பிறகு, ‘ஹ்யூமன் பாம்’ என்று ஒரு ஆவணப்படம் வெளியிட்டார். அவர் பேட்டி, ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளிவந்தது. ‘இந்த வழக்கில் கண்டுபிடிக்கவே முடியாத விஷயம் என்று ஏதாவது உள்ளதா?’ என்ற கேள்விக்கு அவர், ‘இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை யார் செய்தார், எங்கு செய்தார்கள், எங்கு வைத்திருந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று பதில் அளித்தார். 31 ஆண்டுகளாகியும், இப்போதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த வகையில் பார்த்தாலே 41 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமாகிவிடுகிறது. அதைத்தாண்டி இதில் ஒரு ‘சதி’ இருக்கிறது என்பதுதான் மறைபொருளாக இருக்கிறது. தடா நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று, 1999 முதல் சி.பி.ஐ பன்நோக்கு விசாரணை முகமை ராஜீவ் காந்தி கொலை வழக்கை இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுவரை இது நிலுவையில் உள்ளது. உண்மைக் குற்றவாளிகள் யார் என்று தேட வேண்டுமா, இல்லையா? அதை யாரெல்லாம் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் நான்தான் வழக்கு போட்டேன். ‘இந்த வழக்கில் நான் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறேன். வழக்கு விசாரணை எதை நோக்கிச் செல்கிறது, வெடிகுண்டு பற்றிய உண்மைகள் தெரியவந்தால் நான் நிரபராதி என நிரூபிக்க வசதியாக இருக்கும். சீல் செய்யப்பட்ட கவர்களை எல்லாம் பிரிக்க வேண்டும்’ என்று வழக்கு போட்டேன். என் மனு நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்று இதைப்பற்றி ஆய்வு செய்தது நான்.

உண்மையில், இந்த வழக்கால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன். உண்மையில் அந்த வெடிகுண்டைச் செய்தது யார் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றவரிடம், திருமணம் குறித்துக் கேட்டோம்.

“ஏங்க, நான் என்ன சாமியாரா ஆகப்போறேன்னா சொன்னேன். இப்பத்தான வந்திருக்கேன். அற்புதம்மா மனசு வச்சா உடனே ஆகிடும்” என்று அம்மாவைப் பார்த்து ஜாடை செய்தார். “எப்பா.. நான் அன்னிக்கே ஓகே சொல்லிட்டேன். சீக்கிரமே பண்ணிடலாம்” என்று புன்னகைத்தார் அற்புதம்மாள்.

“தமிழக அரசு எனக்குச் செய்தது மகத்தான உதவி. அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எல்லாவற்றையும் கடந்து வெளியே தெரியாத பலர் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். உண்மையை சட்டரீதியாக ஆவணப்படுத்த மிகப்பெரிய டீம் இருந்தது. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். அந்த டீம் சலிப்பே இல்லாமல் இயங்கியது. செல்வராஜ் முருகன், வழக்கறிஞர் சிவக்குமார், டேவிட் பெரியார், ராமு பழனியப்பன், ரமேஷ், தயாளன், பிரபாகரன், சரவணன், தொல்காப்பியன், இளவரசன், ஹரிஹரன் என்று பலர் அதில் உள்ளனர். வழக்கறிஞர்கள் பிரபு, பாரி இந்த வழக்கின் இருபெரும் தூண்கள். இந்தக் கங்கை அணையாமல் பார்த்துக் கொண்டது இவர்கள்தான். இவர்கள் அனைவருமே ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாத தனி மனிதர்கள். அவர்களை ஒன்றிணைத்த பாலம்தான் நான். உண்மை உங்கள் பக்கம் இருந்தால் என்றாவது ஒருநாள் ஜெயிப்பீர்கள் என்பதற்கு என் விடுதலை ஒரு சாட்சி” என்கிறார் அழுத்தமாக.

மகிழ்ச்சியாக வாழுங்கள் அறிவு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் அல்லது இந்த QR code-ஐ ஸ்கேன் செய்யவும் https://bit.ly/3vEihHU