Published:Updated:

மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!

மொய் விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மொய் விருந்து

வாழை இலை நிறைய சோறு, கரண்டி நிறைய ஆட்டுக்கறி போட்டு `கமகம’ விருந்து பரிமாறப்பட்டது

மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!

வாழை இலை நிறைய சோறு, கரண்டி நிறைய ஆட்டுக்கறி போட்டு `கமகம’ விருந்து பரிமாறப்பட்டது

Published:Updated:
மொய் விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மொய் விருந்து

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ அசோக்குமார், ‘காதணி விழா’ என்ற பெயரில் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி முடித்திருக்கும் பிரமாண்ட மொய் விருந்துதான் தமிழகத்தின் தற்போதைய பேசுபொருள்.

‘காதணி விழா’ என்ற பெயரில் பேராவூரணியில் தனியார் திருமண மண்டபத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து மொய் விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார் அசோக்குமார் எம்.எல்.ஏ. தி.மு.க நிர்வாகிகள், பேராவூரணி முழுக்க அசோக்குமாரை வாழ்த்தி ஃபிளெக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். நகரம் முழுவதும் தி.மு.க கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்பு வேறு.

மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!
மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!

மொத்தம் 25 டேபிள்கள் போட்டு மொய் வசூல்செய்தனர். மொய் நோட்டு எழுதவும், மொய்ச் சட்டியில் விழும் பணத்தை எண்ணிவைக்கவும் ஒவ்வொரு டேபிளிலும் தலா ஐந்து பேர் வீதம் இருந்தார்கள்.  சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு வேறு. வசூலான பணம் மெஷின் மூலம் எண்ணப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தனியார் செக்யூரிட்டிகளும் துப்பாக்கியோடு சுற்றிக்கொண்டேயிருந்தார்கள்.

வாழை இலை நிறைய சோறு, கரண்டி நிறைய ஆட்டுக்கறி போட்டு `கமகம’ விருந்து பரிமாறப்பட்டது. அசோக்குமாருக்கு நெருக்கமான தி.மு.க-வினர் ஓடியாடி வேலை செய்தனர். சாப்பிட்ட பிறகு அவரவர் வசதிக்கேற்ப ரூ.1,000 தொடங்கி 5 லட்சம் வரை மொய் எழுதினார்கள். பேராவூரணியில் தனிநபர் ஒருவர் நடத்திய மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூலாகியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்று பெருமையாகச் சொல்கிறார்கள் எம்.எல்.ஏ-வின் உறவினர்கள். 2017-ல் அசோக்குமார் மொய் பிடித்தபோது மூன்றரைக் கோடி வசூலானது. இந்த முறை ஆளுங்ட்சி எம்.எல்.ஏ-வாக இருப்பதாலேயே பெரிய அளவில் மொய் விழுந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

எம்.எல்.ஏ அசோக்குமார்
எம்.எல்.ஏ அசோக்குமார்

‘மொய் விருந்து’ கலாசாரம் பற்றிப் பேசும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான கருப்பையன், ‘‘திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட பெரிய அளவில் பணத் தேவை ஏற்படுகிற சமயத்தில் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மொய் வசூல் செய்வதென்பது இங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தினரின் வழக்கம். கஷ்டத்தில் பங்கெடுத்து, உதவும் எண்ணத்தில் விருந்துக்கு வந்த உறவினர்கள் மொய் எழுதுவார்கள். விருந்து நடத்தியவர்கள், அந்த மொய்ப் பணத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். யாரிடமும் வட்டிக்குக் கடன் வாங்காமல் தொழிலில் முதலீடு செய்து முன்னேறுவதற்கும் இது பயன்பட்டது. இப்போது சாதி, சமயங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஒருகாலத்தில் தேவைக்காக நடத்தப்பட்ட இந்த விருந்தை ஒரு கட்டத்துக்குப் பிறகு பெருமைக்கும், கொடுத்த மொய்யைத் திரும்ப எடுக்கவும் ‘மொய் விருந்து’ என்ற பெயரிலேயே நடத்தத் தொடங்கிவிட்டார்கள். மொத்தமாக இப்படி வசூல் செய்த பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக ‘மொய் விருந்து’ நிகழ்ச்சிகளில் திருப்பிச் செலுத்துவதால் சுமை தெரிவதில்லை. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமே நடத்தப்பட்ட மொய் விருந்து கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு அனைத்து மாதங்களிலும் நடத்தப்படுகிறது. மொய் விருந்து நடத்திய ஒருவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் நடத்த வேண்டும்.

மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!
மொய் நோட்டும், ரப்பர் பேண்டும்தான் மிச்சம்!

மொய் எழுதியவர் விருந்து நடத்தும்போது, மொய் பிடித்தவர் ஏற்கெனவே அவர் செலுத்திய பணத்தை செலுத்துவதுடன் ‘புதுநடை’ எனக் கூடுதலாக பணம் எழுதுவார். மொய் நீடிக்கவும், உறவு தொடரவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பேராவூரணியின் அடையாளமாக மாறிய மொய் விருந்து பலர் வாழ்க்கையில் உயர்வதற்கும், வீழ்வதற்கும் காரணமாகியிருக்கிறது’’ என்றார்.

கருப்பையன்
கருப்பையன்

இதையடுத்து எம்.எல்.ஏ அசோக்குமாரிடமே மொய் விருந்தின் அனுபவம் குறித்துப் பேசினோம். ‘‘1982-லிருந்து மொய் போட்டுட்டு வர்றேன். ஏழை, நடுத்தரம், வசதியானவங்க எனப் பல தரப்பட்டவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு மொய் எழுதுவாங்க. அதனால சமத்துவத்தை நிலை நாட்டுற இடமா, உறவுகள் நீடிக்கக்கூடிய இடமா மொய்ப் பந்தல் இருக்குது.பண ரொட்டேஷனுக்காகவே மொய் விருந்து நடத்துற பழக்கம் எங்க பகுதியில தொடருது. இப்ப நான் நடத்துனது, ஒன்பதாவது மொய் விருந்து. ஏன்னா நான், மக்களோடு மக்களா இருக்கேன். சொந்தக்காரங்க மட்டுமில்லாம, தொகுதி மக்கள் எல்லாரும் என் பேரைப் போட்டு பத்திரிகை அடிக்கிறாங்க. நானும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமப் போய், மொய் செஞ்சுட்டு வாரேன். இந்தவாட்டி எனக்கு 10 கோடி ரூபா மொய் விழுந்துது. அந்தப் பணத்தைவெச்சு வாங்கின கடனையெல்லாம் அடைச்சுட்டேன். 10 கோடி மொய் வந்தாலும், இப்ப என்கிட்ட மொய் நோட்டும், ரூபாத் தாள்களைக் கட்டப் பயன்படுத்துன ரப்பர் பேண்டும் மட்டும்தான் மிச்சமிருக்கு’’ என்றார்.

அடேங்கப்பா..!