அலசல்
சமூகம்
Published:Updated:

உணவில் பினாயில் ஊற்றினாரா கமிஷனர்?

சொரியங்கிணத்துபாளையம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொரியங்கிணத்துபாளையம்

‘உங்க காலனியை கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியா அறிவிச்சிடுவேன். கரன்ட், தண்ணியை கட் பண்ணிடுவேன்’

உலகையே உயிர் அச்சம் சூழ்ந்த நிலையிலும் நம் சமூகத்தில் சாதிய ஆதிக்கம் ஒழிந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் நகராட்சிக்கு உட்பட்ட சொரியங்கிணத்துபாளையம் அருந்ததியர் குடியிருப்பில் அருந்ததி சமூகத்தினர் மாட்டுக்கறி சமைத்தார்கள் என்று கூறி, அவர்கள் வைத்திருந்த உணவில் பினாயில் ஊற்றியதாக நகராட்சி கமிஷனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொரியங்கிணத்துபாளையம் அருந்ததியர் குடியிருப்பில் வசிக்கும் மக்களில் கணிசமானோர், வெள்ளகோயில் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணிபுரிகிறார்கள். நடந்த சம்பவம்குறித்து அந்தக் காலனியைச் சேர்ந்த சேமலையப்பன் என்பவர் கூறுகையில், “இங்க இருந்த ஒரு மாடு சாக்கடையில விழுந்து கால் உடைஞ்சுப்போச்சு. அதைப் பராமரிக்க முடியாதுன்னு சொல்லி, அதை கறி போட்டு 30 குடும்பமும் பகிர்ந்துகிட்டோம். அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு யாரோ திபுதிபுன்னு வந்து வீட்டுக்கதவைத் தட்டினாங்க. திறந்தா நகராட்சி கமிஷனர் கூட்டத்தோடு நிக்கிறாங்க. ‘ஒரு நாளைக்கு கறி திங்கலைன்னா செத்தா போயிடுவீங்க’ன்னு திட்டினாங்க. அதுமட்டுமில்லாம, சமைச்சு வெச்சிருந்த சாப்பாட்டுல பினாயில ஊத்திட்டாங்க” என்றார்.

சேமலையப்பன் - கருப்பையா
சேமலையப்பன் - கருப்பையா

இந்த விவகாரம்குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.கருப்பையா கூறுகையில், “சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு அந்தப் பகுதிக்கு நலத்திட்ட உதவிகளைக் கொடுப்பதற்காக நகராட்சி கமிஷனர் போயிருக்காங்க. அப்பவும் இதுபற்றி மக்கள் கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு...

‘உங்க காலனியை கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியா அறிவிச்சிடுவேன். கரன்ட், தண்ணியை கட் பண்ணிடுவேன்’னு மிரட்டியிருக்காங்க.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, ஊரடங்குக்குப் பிறகு வெள்ளகோயில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.

வெள்ளகோயில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் பேசினோம். “வெள்ளகோயில் நகராட்சியில் இப்போது ஆடு, கோழி மட்டுமே வெட்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதை மீறி மாட்டுக்கறி வெட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். வெள்ளகோயிலில் கொரோனா வரக்கூடாது என்பது மட்டுமே எங்கள் லட்சியம். சம்பவம் நடந்தபோது காவல்துறையினரும் உடன் இருந்தார்கள். இதில் சாதிரீதியாக நாங்கள் ஒடுக்கினோம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. சிலர் பிரச்னையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்” என்றார்.

சொரியங்கிணத்துபாளையம்
சொரியங்கிணத்துபாளையம்

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம். “இரண்டு தரப்பினரையும் விசாரிக்கச் சொல்லி, தாராபுரம் சப் கலெக்டர் பவன் குமாருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்திருந்தால், அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.