"ஒரு புகைப்பட நிருபராக, மனிதநேயத்தை அதன் உயர்விலும், தாழ்விலும் காணும் பாக்கியம் எனக்கு வாய்த்திருக்கிறது. நான் ஒரு கண்ணாடி மட்டுமே. இங்கு நடக்கும் விஷயங்களை அதன் உண்மைத்தன்மையுடன் நான் உங்களுக்குக் காட்சிப்படுத்துகிறேன். நீங்கள் கடந்து போகலாம், அல்லது மாற்றத்துக்குத் துணை நிற்கலாம்.”

புலிட்சர் பரிசு வென்ற டேனிஷ் சித்திக்கி ஒரு நிகழ்ச்சியில் உதிர்த்த வார்த்தைகள் இவை. தான் இறப்பதற்கு இரண்டு தினங்கள் முன்புகூட, “நான் இன்னும் உயிருடன் இருப்பதை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன்” என ட்வீட் செய்திருந்தார். ஆப்கன் அரசு படைகளுக்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்து வருகிறது. ஆப்கன் படைகளுடன் இணைந்து சென்று செய்தி சேகரித்த டேனிஷ், தாலிபன் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சமூக வலைதளங்களில், நாம் கடந்த சில வருடங்களில் நமக்கே தெரியாமல் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருப்போம். சில புகைப்படங்களைக் கடக்க முடியாமல், கனத்த மௌனத்துடன் பார்த்திருப்போம். அத்தகைய புகைப்படங்களின் சொந்தக்காரர் டேனிஷ் சித்திக்கி. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்கள் முன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ராம்பக்த் கோபால்; டெல்லியில் தகன மேடை போதாத சூழலில் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை எரித்த புகைப்படம் என டேனிஷ் பதிவு செய்த புகைப்படங்கள் ஏராளம். கொரோனா முதல் அலையின்போது திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், நாடற்று, வீடற்று, நாதியற்று இந்தியாவுக்குள்ளே புலம்பெயர்ந்தவர்களைக் காட்சிப்படுத்திய நபர்களில் டேனிஷ் முக்கியமானவர். 2020 டெல்லி கலவரங்களின்போது, குண்டர்கள் சிலர் சூழ்ந்து நின்று இஸ்லாமியர் ஒருவரைத் தாக்கிக்கொண்டிருப்பார்கள். அதையும் பதிவு செய்தவர் டேனிஷ் தான்.

2018ம் ஆண்டு, ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படும் துயரங்கள் குறித்து டேனிஷ் எடுத்த ஆவணப்படம்தான் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தது. “இரண்டு வயதுக் குழந்தையின் அப்பாவான என்னால் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண் முன்னரே, மக்கள் நீரில் தத்தளித்து இறந்து போனார்கள். என்னுடைய வேலையை நான் செய்ய வேண்டும். அதே சமயம், எப்போது கேமராவைக் கீழே போட்டுவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்” என்கிறார். இந்த மனிதம்தான் இன்று டேனிஷுக்காக உலகைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது. யுத்தப்பகுதிகளில் பணிபுரிந்து உயிரை இழந்த பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் டேனிஷைப் போல் பலர். அந்த துயரப்பட்டியலில் டேனிஷும் இணைந்திருக்கிறார்.

அமெரிக்க அரசின் துணை செய்தித் தொடர்பாளரான ஜலினா தொடங்கி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், கேப்டன் அம்ரிந்தர் சிங், என இந்தியாவின் பல தலைவர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்கன் தூதரக அதிகாரியான ஃபரித் மமுண்ட்சே, “ஒரு நண்பனின் கொலை” என மனம் உருகியிருக்கிறார். தாலிபன் அமைப்புகூட , “யுத்தப் பகுதியில் ஒரு செய்தியாளர் இருக்கிறார் என்பதை எங்களுக்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும். நாங்கள் கவனமாக இருந்திருப்போம். அவரின் மறைவுக்கு நாங்கள் வருந்துகிறோம்” என செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், பல்வேறு துயரக்காட்சிகளை உலகத்தின் மனசாட்சி முன் கொண்டுவந்த டேனிஷுக்கு இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் கணம் வரை நம் பிரதமர் குறைந்தபட்ச இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. இரங்கல் குறிப்புகளால் மட்டும் மரணங்கள் மரியாதைக்குரியதாக மாறிவிடுவதில்லை. ஒருவர் வாழும்போது செய்த செயல்கள்தான் அவர் மரணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிவிடுகிறது. அப்படிப்பட்டவர்தான் டேனிஷ் சித்திக்கி.