சினிமா
Published:Updated:

“கேமராவை என்னை நோக்கித் திருப்பியிருக்கிறேன்!”

பொன்னுத்தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னுத்தாய்

கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த என் அண்ணன் ஓவியங்கள் வரைவதை அருகிலிருந்து பார்ப்பதன் மூலமாகக் கலைமீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது

1800-களின் பிற்பகுதி. அன்றைய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி-கீரிப்பட்டியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையன் ஆதிக்கச் சாதியினரின் ஒடுக்குமுறைக்கு அடிபணியாமல் வாழ்ந்துவந்தார். இந்தப் போக்கு அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று பெரியவர்கள் எச்சரித்தனர். அந்த வேளையில்தான் முல்லைப் பெரியாறு அணையின் கால்வாய்கள் வெட்டும் பணி தொடங்கப்படவே, மனைவி முத்தம்மாளுடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலுள்ள பொட்டுலுப்பட்டிக்கு இடம்பெயர்ந்தார் வெள்ளையன். அவருக்கு 1928-ல் மூத்த பெண்ணாகப் பிறந்த பொன்னுத்தாய் ஆசிரியராக மாறியதுடன், அதே ஊரில் 1953-ல் தொடங்கிய பள்ளிக்கூடம் தான் ‘காந்திஜி ஆரம்பப் பள்ளி.’

ஜெய்சிங் நாகேஸ்வரன்
ஜெய்சிங் நாகேஸ்வரன்

இப்படியான வரலாறு கொண்ட பொன்னுத்தாயின் பேரன் ஜெய்சிங் நாகேஸ்வரன் இப்போது புகழ்பெற்ற போட்டோகிராபர். 2002 காலகட்டத்தில், நர்மதா அணைக்கட்டுப் பிரச்னை தீவிரமடைந்தபோது, அதனால் இடம்பெயர நேர்ந்த மக்களின் வாழ்வை நேரடியாக அங்கு சென்று பதிவுசெய்ததன் மூலம் முதன்முதலில் இவருடைய படைப்புகள் கவனம் பெற்றன.

“கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த என் அண்ணன் ஓவியங்கள் வரைவதை அருகிலிருந்து பார்ப்பதன் மூலமாகக் கலைமீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் கிராம வளர்ச்சி அறிவியல் படிக்கும்போதுதான், ஊடகங்களின் பணி என்ன என்பதை அறிந்தேன். அந்தச் சமயத்தில் என் அண்ணன் மூலமாக ‘பாய்ன்ட் - ஷூட்’ கேமரா ஒன்று எனக்குக் கிடைத்தது. அதை வைத்து கல்லூரி நண்பன் ஒருவனைப் புகைப்படம் எடுத்தேன். அதைப் பார்த்து பிரமித்த மற்ற நண்பர்கள், தங்களையும் எடுக்கச் சொல்லி பிலிம் ரோல் வாங்கிக் கொடுத்தார்கள். அங்கிருந்துதான் தொடங்கியது பயணம்” என்று சொல்லும் ஜெய்சிங் மேற்படிப்புக்காகத் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் தொடர்பியல் பயின்றபோது, அருந்ததி ராய், ஆனந்த் பட்டவர்தன் போன்ற ஆளுமைகளைச் சந்தித்திருக்கிறார். .

 “கேமராவை என்னை நோக்கித் திருப்பியிருக்கிறேன்!”

“நர்மதா அணைக்காகப் பழங்குடிகளை அடித்து அப்புறப்படுத்தி இழுத்துக் கொண்டு போகிறார்கள், இதை எதிர்த்து மேதா பட்கர் சாலையில் தர்ணா மேற்கொண்டிருக்கிறார் - இந்த இரண்டும்தான் இந்தப் பிரச்னை பற்றி நான் முதன்முதலாகப் படித்த செய்திகள். இதை நான் சிறுவனாக இருந்தபோது ஆதிக்க சாதியினரால் எங்கள் பாட்டியின் பள்ளிக்கூடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்த்தேன். பள்ளிக்கூடம் இடிக்கப்பட்ட அன்று இரவு அந்த இடிபாடுகளுக்கு இடையில் எங்கள் அம்மாவுடன் நானும் என் அண்ணனும் நின்றுகொண்டிருந்தது என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால் நர்மதா அணைக்கட்டுக்கு எதிரான போராட்டத்தைப் புகைப்படம் எடுத்தபோது எனக்கு அந்த வடு நினைவுக்கு வந்தது” என்கிறார்.

 “கேமராவை என்னை நோக்கித் திருப்பியிருக்கிறேன்!”

நர்மதா படங்களைக் கொண்டு மதுரையில் நண்பர் உதவியுடன் ஜெய்சிங் நடத்திய கண்காட்சியை இயக்குநர் பாலு மகேந்திரா பார்வையிட்டு வாழ்த்தியிருக்கிறார். இவருடைய படைப்புகளைப் பார்த்துப் பாராட்டிய ஒளிப்பதிவாளர் செழியன், சென்னைக்கு வரும்படி அழைத்திருக்கிறார். சென்னை வந்த ஜெய்சிங், புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயில இரண்டு முறை விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். சினிமாவில் மட்டும் முடங்கிவிடாமல் இந்தியா முழுக்கப் பயணித்த ஜெய்சிங் விளிம்புநிலை மக்களைப் புகைப்படமெடுத்தார்.

உலகப் புகழ்பெற்ற மேக்னம் ஒளிப்பட நிறுவனம், 2021-ம் ஆண்டுக்கான ‘மேக்னம் ஒளிப்படம் மற்றும் சமூக நீதி நல்கை’யை ஜெய்சிங்குக்கு வழங்கியிருக்கிறது. உலகம் முழுவதுமிருந்து விண்ணப்பித்த 487 கலைஞர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் 11 பேரில் இந்தியாவிலிருந்து தேர்வாகியிருக்கும் மூவரில் ஜெய்சிங்கும் ஒருவர்; தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நல்கையைப் பெறுவதும் இதுதான் முதல்முறை!

 “கேமராவை என்னை நோக்கித் திருப்பியிருக்கிறேன்!”

“கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஊருக்குத் திரும்பிவந்தேன். கொரோனாப் பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்படவே வீட்டிலேயே தங்கிவிட்டேன். இந்தக் காலகட்டத்தில் ‘I feel like a fish’ என்ற தலைப்பில் எங்கள் வீட்டின் அன்றாடச் செயல்பாடுகளை ஒளிப்பட வரிசையாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தேன். அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது; முன்னதாக ‘Down by the River’ என்ற தலைப்பில் கிராமத்து வாழ்வியலைப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பட வரிசையும் கவனம் பெற்றிருந்தது; ‘When I was a boy’ என்ற சுயசரிதை ஒளிப்பட வரிசை ஒன்றையும் தொடங்கியிருந்தேன். இந்த வேளையில்தான் ‘மேக்னம் சமூக நீதி நல்கை’ கிடைத்திருக்கிறது. என்னுடைய கேமரா இத்தனை நாள்கள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தது, இப்போது உள்ளே திரும்பி என்னைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது” என்று புன்னகைக்கும் ஜெய்சிங், கொரோனாப் பொது முடக்கத்தின் போது நடந்த சாதி ரீதியான கொடுமைகள் பற்றி ‘The Ballad of wounds’, பாட்டி பொன்னுத்தாய் பற்றி ‘வெள்ளையன் மகள்’, சுயசரிதை ஒளிப்பட வரிசையாக ‘When I was a boy’ உள்ளிட்ட ஒளிப்பட, ஆவணப்படத் திட்டங்களிலும் தற்போது ஈடுபட்டுள்ளார்.