பிரீமியம் ஸ்டோரி
‘`சொந்த வீடு கட்டும்போது இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஒரு கனவு இருக்கும்.

போட்டோகிராபரான எனக்கு, கேமராபோல வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. முதன்முதலில் இதைச் சொல்லியபோது, சிரிப்பு, கேலி எல்லாம் இருந்ததுதான். என்றாலும், நானும் என் மனைவியும் உறுதியாக இருந்து இதோ புதுமனைப் புகுவிழாவை முடித்துவிட்டோம். எங்கள் வீட்டின் புகைப்படங்கள் வைரலானது நாங்களே எதிர்பாராதது. இப்போது எங்கள் வீட்டின் முன் பலர் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்’’ - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் ரவி ஷங்கர் ஹோங்கல்.

'க்ளிக்' கனவு!

கர்நாடக மாநிலம், பெலகாவியைச் சேர்ந்த ரவி ஷங்கர், பதின் வயதி லிருந்தே போட்டோகிராபி துறையில் ஆர்வம்கொண்டு அதைத் தன் தொழிலாக்கிக்கொண்டவர். இப்போது தன் மனைவி கிருபா ராணியின் பெயரில் ‘ராணி’ என்ற பெயரில் போட்டோ ஸ்டூடியோவை நடத்திவருகிறார்.

‘`முதலில் சமூக வலைதளத்துக்கும், மீடியாவுக்கும் என் நன்றி. என் தெருவுக்குள் இருக்கும் எங்கள் வீடு, இந்தியா முழுவதும் பிரபலமாகி, இன்று தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் பேசும் அளவுக்கு வரவேற்பு பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை’’ என்றவர், தன் வீட்டுக்கு வைத்திருக்கும் பெயர்... ‘க்ளிக்’!

‘`வீட்டுக்கு மட்டுமல்ல... என் மூன்று மகன்களுக்கும் கேமரா தொடர்பான பெயர்களைத்தான் வைத்திருக்கிறேன். முதல் பையன் பிறந்தபோது, ‘கெனான் (Canon)’ என்று பெயர் வைத்தேன். ‘இதெல்லாம் ஒரு பெயரா...’ என்றார்கள் எல்லோரும். போட்டோகிராபரான என் மனைவிக்கு, இந்தத் துறைமீது எனக்கிருக்கும் காதல் தெரியும் என்பதால், ‘பையன் பெயர் கெனான்தான்’ என்றார் உறுதியுடன். கெனானுக்கு இப்போது 20 வயது. இரண்டாவது மகன் நிக்கானுக்கு (Nikon) 18 வயது, கடைசி மகன் எப்ஸானுக்கு (Epson) 13 வயது. இவர்களைப் பள்ளியில் சேர்க்கும்போதெல்லாம், ‘பெயரை மாற்றிக்கொள்வதென்றால் இப்போதே மாற்றிக்கொள்ளுங்கள்' என்று ஃப்ரீ அட்வைஸ் தருவார்கள்’’ என்று சிரிப்பவர்,

 ரவி ஷங்கர் குடும்பத்தினர்
ரவி ஷங்கர் குடும்பத்தினர்

‘`ஆரம்பத்தில் என் மகன்கள், ‘எல்லோரும் இது என்ன பெயர் என்று கேலி செய்கிறார்கள்' என்று வருத்தப்பட்டாலும், இப்போது, ‘அப்பா... ஆயிரம், லட்சம் பேருக்கு மத்தியிலும் எங்கள் பெயர்தான் தனித்துவமாக இருக்கிறது’ என்று குஷியாகிறார்கள். இப்படி போட்டோகிராபி எங்கள் வாழ்வின் அங்கமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் வீடு கட்டலாம் என்று முடிவெடுத்தபோது, ‘கேமரா வீடு’ கனவு எங்கள் குடும்பத்துக்குப் பற்றிக்கொண்டது’’ என்றவர், எண்ணம் செயலான விதம் பற்றிப் பகிர்ந்தார்.

'க்ளிக்' கனவு!

``கேமரா மாதிரி வீடா... இதெல்லாம் சரி வருமா போன்ற கேள்விகளையெல்லாம் கடந்து, ‘க்ளிக்’குக்கு அடிக்கல் வைத்தோம். மொத்தம் மூன்று தளங்கள். தரைத்தளம் பிரின்டர் வடிவத்திலும், முதல் தளம் கேமரா போலவும், இரண்டாவது தளம் ஃபிளாஷ் போலவும் வடிவமைத்திருக்கிறோம். மேலும், வீட்டை வெளியிலிருந்து பார்க்கும்போது வலப்பக்கத்தில் கேமரா ரீல், இடப்பக்கத்தில் மெமரிகார்ட் வடிவம் தென்படும். வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்ல, உட்புற இன்டீரியரிலும் கேமரா சாயல்தான். பல கேமரா கம்பெனிகளின் லோகோ டிசைன்களில் ஜன்னல் கம்பிகள், கேமராவின் பாகங்கள்போல வடிவமைக்கப்பட்ட ஃபால்ஸ் சீலிங் என்று இது ஒரு கேமரா கூடு. என் 10 வருடக் கனவு கண்முன் நிற்கிறது’’ என்று ரவி ஷங்கர் நிறைவு செய்ய, நம் கண்கள் விடாமல் அவருடைய வீட்டைக் க்ளிக்கிக்கொண்டே இருந்தன, அவரிடமிருந்து விடைபெறும் வரை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு