Published:Updated:

`எதுக்காக பணத்தைச் சேர்த்து வைக்கணும் சார்!' - கிருமிநாசினியுடன் தெருவில் இறங்கிய மாற்றுத் திறனாளி

ஜோசப்
ஜோசப்

10 ரூபாய் செலவு செய்துவிட்டு 100 ரூபாய்க்கு விளம்பரம் தேடும் மனிதர்கள் மத்தியில், தனது சொந்தச் செலவில் அமைதியாக புதுச்சேரியின் வீதிகளில் கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருக்கிறார் மாற்றுத் திறனாளி ஜோசப்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜோசப். சராசரி மனிதர்களைவிட உயரம் குறைவான இவர், ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் புத்தகங்களை பைண்டிங் செய்யும் கடையை நடத்தி வருகிறார். தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் இவர், கடந்த நாடாளுமன்றம் மற்றும் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி வீடு வீடாகப் பிரசாரம் மேற்கொண்டார்.

அதேபோல டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிய நேரத்தில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை நாள் வாடகைக்கு எடுத்து கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் மருந்து தெளித்தார். இவரின் செயல்களைப் பற்றி `வாழ்க்கையை புரிய வைத்த இரவு; சொற்ப வருமானத்திலும் தாராள உதவி’ என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஜோசப்
ஜோசப்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடக்கப்பட்டிருக்கிறது. வருவாய் இல்லாமல் முடங்கிய நிலையிலும் சிறுகச்சிறுக தான் சேமித்து வைத்திருந்த முழுத் தொகையையும் கொரோனா ஒழிப்புப் பணிக்கு செலவிட்டிருக்கிறார் தன்னம்பிக்கை மனிதர் ஜோசப். கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை சொந்தமாக வாங்கி புதுச்சேரியின் வீதிகளில் அன்றாடம் தெளித்துக் கொண்டிருக்கிறார் எந்த விளம்பரமுமின்றி.

ஜோசப்பிடம் பேசினோம். ``டெங்கு கொசு ஒழிப்புக்காக மெஷினை வாடகைக்கு எடுத்து மருந்து அடிச்சேன் சார். மருந்து வாங்கியும், வாடகை கொடுத்தும் கட்டுப்படி ஆகல. இந்த ஸ்கூல் சீஸன்ல வர்ற வருமானத்துல சொந்தமா மெஷின் வாங்கிடணும்னு நெனச்சேன். ஆனால், இந்தக் கொரோனா வந்து எல்லாத்தையுமே மாத்திடுச்சி. கொரோனாவ தடுக்க அரசாங்கம் நிறைய முயற்சிகளைச் செய்யுது. ஆனால், அரசாங்கம் மட்டும் நினைச்சா கொரோனாவை ஒழிக்க முடியாது. நாமளும் எதாவது செய்யணும்னு நினைச்சேன். அதனால நான் சிறுகச் சிறுக சேமிச்சு வச்சிருந்த பணம் 2,500 ரூபாயை எடுத்துக்கிட்டு கிருமிநாசினி தெளிக்கும் மெஷின் வாங்கப் போனேன். ஆனால், மெஷினோட விலை ரூ.4,500-னு சொல்லிட்டதால என்ன பண்றதுனு தெரியாம இருந்தேன்.

ஜோசப்
ஜோசப்

பல நண்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். அதுல ஒரு சிலர் கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணாங்க. அதுல இப்போ நான் சொந்தமா மெஷின் வாங்கி கிருமிநாசினி தெளிச்சிக்கிட்டிருக்கேன். நான் செய்யறத பாத்துட்டு நிறையபேரு உதவி செய்யறேன்னு சொல்லிட்டுப் போவாங்க.

ஆனா அதுக்கப்புறம் யாரும் திரும்பி வர மாட்டாங்க சார். நானும் அவங்களை எதிர்பார்க்கறது இல்லை. என்னோட உடல் குறையைப் பாத்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க யாரும் முன்வரல. எனக்கென்ன குழந்தையா குட்டியா... எதுக்கு சேர்த்து வைக்கணும்... நம்மளோட வாழ்க்கை யாருக்காவது பிரயோஜனமா இருக்கணும் சார்” என்று கூறிக்கொண்டு மெஷினை தோளில் மாட்டிக்கொண்டு குடியிருப்புகளை நோக்கி நடக்கிறார் ஜோசப்.

`வாழ்க்கையைப் புரியவைத்த இரவு; சொற்ப வருமானத்திலும் தாராள உதவி!' - `தன்னம்பிக்கை' மனிதர் ஜோசப்
அடுத்த கட்டுரைக்கு