Published:Updated:

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

புறா
பிரீமியம் ஸ்டோரி
புறா

உயிர்நலம்

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

உயிர்நலம்

Published:Updated:
புறா
பிரீமியம் ஸ்டோரி
புறா

மெரினா கடற்கரையிலும், புராதனக் கோயில்களிலும் புறாக்கள் கூட்டம் கூட்டமாகப் பறப்பதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இல்லை. அதே எண்ணிக்கையிலான புறாக்களை ஒருவர் தனியாகப் பராமரித்துவருகிறார் என்றதும் முதலில் நம்ப முடியவில்லை. வாழ்வில் அனைவருக்கும், ஏதாவது ஒன்றைச் சேகரிப்பதில் அதீத ஆர்வம் இருக்கும். சிலருக்கு நாணயம், சிலருக்கு அஞ்சல் தலை, சிலருக்குப் படங்கள் என்று அது ஒவ்வொருவரின் ரசனைக்கும் மாறுபடும். செந்தில் அரசுக்குப் புறாக்களைச் சேகரித்துப் பராமரிப்பதில் ஆர்வம் அதிகம். பொள்ளாச்சி, கோவில்பாளையம் பகுதியில் செந்தில் அரசைச் சந்தித்துப் பேசினோம்.

ஆடம்பரப் புறா (Fancy pigeon), பந்தயப் புறா (Racing pigeon) என்று புறாக்களைத் தனித்தனியாகப் பிரிக்கலாம். பந்தயப் புறாக்களை வளர்ப்பவர்களை நாம் அதிகம் பார்த்திருப்போம். செந்திலுக்கு ஆடம்பரப் புறா வளர்ப்பதில்தான் ஈடுபாடு அதிகம். உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 வகை புறா இனங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட புறாக்களைப் பராமரித்து வளர்க்கிறார். மேலும், புறா நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் கலந்துகொள்கிறார். வெளிநாட்டுப் புறாக்களைக் கொண்டு நடக்கும் புறா நிகழ்ச்சிக்கு (Pigeon show) இந்தியாவில் உள்ள ஒரே நடுவர் செந்தில் அரசுதான். உலக அளவில் ஒரே இடத்தில் அதிக புறா இனங்களை வைத்து வளர்ப்பவர்களில் இவர் முதன்மையானவர்.

“பொள்ளாச்சி, தேவனாம்பாளையம் தான் என் சொந்த கிராமம். விவசாயக் குடும்பம். அப்பா கல்வித்துறைல பல பொறுப்புகள்ல இருந்து ஓய்வு பெற்றார். நான் என்.ஜி.எம் காலேஜ்ல பி.எஸ்சி தாவரவியல் படிச்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்குப் பறவைகள் மேல ஈடுபாடு அதிகம். நினைவு தெரிஞ்ச வயசுல இருந்து கிளிகள், குருவிகள், லவ் பேர்ட்ஸ், புறாக்கள், கோழிகள் வளர்த்திருக்கேன். நிறைய பறவைகள் இருந்தாலும், புறா மேல தனிப்பாசம் இருந்தது. படிக்கிறப்பவே 100 புறாக்கள் வரை வெச்சிருந்தேன். ஒரு கட்டத்துல பறவைகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போக... மற்றதையெல்லாம் கொடுத்துட்டு, புறாக்களை மட்டும் வளர்த்துட்டு வர்றேன். 30 வருஷமா உலகம் முழுவதும் இருந்து ஏராளமான புறாக்களைச் சேகரிச்சுட்டு இருக்கேன். புறாக்கள் ஆர்வம் எனக்கு பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குச்சு.

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

புறா நிகழ்ச்சிக்குப் போவேன். அந்த நிகழ்ச்சிக்கு நடுவரா வெளிநாட்ல இருந்தெல்லாம் வருவாங்க. அவங்க தொடர்புகள் மூலமா, இன்னும் நிறைய புறா வகைகள் கிடைச்சுது. நான் நிறைய சுற்றுலா போவேன். எங்க போனாலும் கார்ல காலிக் கூண்டு வெச்சிருப்பேன். என்கிட்ட இல்லாத புறா இனம் இருந்தா வாங்கிடுவேன். திரும்பி வர்றப்ப 10-15 புறாக்களோடுதான் வருவேன். இந்தியால சுமார் 16 வகை ஆடம்பரப் புறாக்கள் இருக்கு. ஒரு கட்டத்துல அதை எல்லாத்தையும் சேகரிச்சுட்டேன். அப்புறம், வெளிநாட்டுத் தொடர்பு மூலமா அங்க இருக்கற புறாக்களைச் சேகரிச்சேன். சில வகை புறாக்கள் பரிசாவும் கிடைச்சுது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற ஸ்கேண்டிநேவியன் நாடுகள் மற்றும் ஐஸ்லாந்து புறாக்களைத் தவிர, உலகத்துல இருக்கற எல்லாப் புறா வகைகளும் என்கிட்ட இருக்கு.

15 வருஷத்துக்கு முன்னாடி ஸ்கேண்டிநேவியன் நாடுகள்ல இருந்தும் 5 வகை புறாக்களைத் தனி ரூம்ல ஏ.சி எல்லாம் வெச்சு பராமரிச்சேன். ஏ.சி வெச்சும்கூட அதுங்களுக்கு இந்த க்ளைமேட் சரிவரல. நம்ம உணவு வகை, தண்ணி எதுவும் சேரல. அந்தப் புறாக்கள் பிழைக்கல. இப்ப உலகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புறா வகைங்க என்கிட்ட இருக்கு. கிட்டத்தட்ட 3,000 புறாக்கள் இருக்கு. எல்லாமே நான் 15 வருஷத்துக்கு முன்னாடி சேகரிச்ச புறாக்கள்தான். அவற்றை இனப்பெருக்கம் செய்ய விட்டு, பராமரிச்சுட்டு இருக்கேன். மத்திய அரசு வெளிநாட்டுல இருந்து பறவைகளைக் கொண்டுவரத் தடை விதிச்சிருக்கு. அதன் காரணமா, கடந்த 10 வருஷங்களா புதுசா எந்தப் பறவையும் கொண்டு வர முடியல” என்றவரிடம், “இவற்றை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

“புறாக்கள் காலனியா வாழத்தான் விரும்பும். அதனால என்கிட்ட இருக்கற புறாக்களை ரெண்டு வகையா வளர்க்கறேன். 11,000 சதுர அடி கட்டடத்துல கூண்டுகள்ல ஆயிரத்துக்குமேல புறாக்கள் இருக்கு. அது இனப்பெருக்கத்துக்காக வெச்சிருக்கற அமைப்பு. கூட்டமா இருக்கறப்ப முட்டை வெச்சு, குஞ்சு பொரிச்சு பராமரிக்கறது கஷ்டம். அதனால, அங்க பொரிக்கற குஞ்சுகளை ஏவரி அமைப்புல (Aviary Setup) பராமரிக்கிறோம். நிறைய இடம், இயற்கையோட இயற்கையா புறாக்கள் கூட்டமா இருக்கும்” என்றவர், கூண்டு செட்டப்பில் உள்ள புறா முகாமைப் பார்க்க அழைத்துச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

கட்டடத்துக்குச் சில அடி தொலைவு இருக்கும்போது புறாக்களின் சத்தம் தெளிவாகக் கேட்டது. உள்ளே செல்லச் செல்ல புறாக்கள் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. உள்ளே நுழைந்ததும், வெளிச் சத்தம் முழுவதும் நின்று, புறாக்கள் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. பல அடுக்குக் கூண்டுகளில் இருந்த விதவிதமான புறாக்களைக் காண்பித்தபடியே பேசத் தொடங்கினார் செந்தில்.

“பராமரிப்புதான் பெரிய வேலை. இதுக்காகத் தனியா ஆட்கள் போட்ருக்கேன். சுகாதாரம் ரொம்ப முக்கியம். தினமும் கூண்டுகளைச் சுத்தம் பண்ணி, சுத்தமான தண்ணீர், இரை கொடுக்கறது அவங்க வேலை. கோதுமை, கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, அரிசி, பட்டாணின்னு விதவிதமான இரைகள் கொடுப்போம். புறா எல்லா வகை தானியங்களையும் விரும்பிச் சாப்பிடும். அதை சமச்சீரா கொடுத்தா நல்ல ஆரோக்கியமா இருக்கும். குஞ்சு பொரிக்கற புறாக்களுக்குப் பச்சப்பயிறு, தட்டப்பயிறு, நிலக்கடலை, கொள்ளு மாதிரியான சிறப்பு உணவுகள் கொடுப்போம். இதை அளவாதான் கொடுக்கணும். அதிகமா கொடுத்தா கொழுப்புச் சத்து அதிகமாகிடும். அளவா கொடுத்தா குஞ்சுகளோட வளர்ச்சி சிறப்பா இருக்கும்.

நோய்த் தடுப்பு முறை நிறைய இருக்கு. புறாக்களைப் பொறுத்தவரை சளி பிடிக்கும். தொண்டைத் தொற்று, ஜீரணப் பிரச்னை வரும். சில வைரஸ் தொற்றுகளும் தாக்கும். இந்தியால புறாக்களுக்குன்னு தனிக் கால்நடை மருத்துவர்கள் இல்லை. நானே பார்த்து கவனிக்கறேன். 10 புறாக்கு வைரஸ் தொற்று தாக்கினா, அறிகுறிகளை வச்சு உணர்ந்து, அந்தப் புறாக்களைத் தனித்தனிக் கூண்டுல போட்டுருவேன். ஒவ்வொரு புறாவுக்கும் ஒவ்வொரு வகையான மருந்து கொடுப்பேன். எந்தப் புறா சீக்கிரம் சரியாகுதோ, அதுக்குக் கொடுத்த மருந்தை மத்த புறாக்களுக்குக் கொடுத்து சரியாக்கிடுவேன். சில நேரத்துல குழந்தைகளுக்குக் கொடுக்கற மருந்துகளை வாங்கி, அதுல சின்னப் பகுதிய மட்டும் கொடுப்பேன். புறாக்களும் பச்சிளம் குழந்தைகள் மாதிரிதான்.

உலக அளவுல ஜெர்மனி, அமெரிக்கா, அரபு நாடுகள்ல புறாக்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்காங்க. இந்தியால புறாக்கள் ஈடுபாடு ரொம்ப ரொம்பக் குறைவு. கடந்த 20 வருஷமாதான் இங்க ஆடம்பரப் புறாக்கள் வளர்ப்பு, புறா நிகழ்ச்சிகள் நிறைய நடக்குது. புறாக்கள் நிகழ்ச்சிக்கு வெளிநாடுகள்ல இருந்து வரும் நடுவர்களுக்கு நான் உதவியா இருப்பேன். அப்படியே புறாக்கள் சம்பந்தமான பல அரிய ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படிச்சேன். இதுல நீண்ட அனுபவம் இருக்கறதால பலரும் என்கிட்ட கேட்டு புறாக்கள் வளர்ப்பாங்க. இப்ப புறாக்கள் நிகழ்ச்சிக்கு நான் நடுவரா போயிட்டு இருக்கேன். இந்தியால என் அனுபவம் வேற யாருக்கும் இல்ல. அப்படியே இருந்தாலும், நிறைய ஆராய்ச்சிகள் பண்ணிருக்கணுங்கறதால எல்லாரும் தவிர்த்துடுவாங்க. நிகழ்ச்சி நடக்கும்போது நிறைய பேர் டெக்னிக்கலா கேள்வி கேட்பாங்க. போதுமான அனுபவம், ஆராய்ச்சி இருக்கறதால நடுவர் வேலைல பெரிய சிரமம் இல்ல.

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

இந்தியால கேரளாவுலதான் புறாக்கள் மேல ஈடுபாடு அதிகம். அங்கே பல ஊர்கள்ல குறைந்தது 50 ஆடம்பரப் புறா வளர்ப்பாளர்கள் இருக்காங்க. கேரள நகரங்கள், மும்பை, அகமதாபாத், கொல்கத்தான்னு புறா நிகழ்ச்சிகள்ல நடுவரா கலந்துகிட்டு இருக்கேன். புறாக்கள் நிகழ்ச்சில, ஒவ்வொரு புறாக்கும் அதோட மூக்கு, வால், ஆரோக்கியம், சுறுசுறுப்புன்னு எல்லாத் தரநிலையை அடிப்படையா வெச்சும் மார்க் போடுவோம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலேயும் 30 வகை புறாக்கள் கலந்துக்கும். அந்தந்த வகை புறாக்களுக்கு தனித்தனியா போட்டி இருக்கும். அறிவிப்பு முன்னாடியே வந்துடும். அதுக்கான ஏற்பாடுகள் ரொம்பவே தீவிரமா நடக்கும். அதிக மார்க் வாங்கற புறாதான் வெற்றி பெற முடியும். இதே நிகழ்ச்சிகள்ல நான் ஆரம்பத்துல ஒரு போட்டியாளரா கலந்திருக்கேன். தொடர்ந்து 5 வருஷம் ஆல் இந்தியா ஷோவுல வெற்றி பெற்றிருக்கேன்.

நாமளே முயற்சி பண்ணி புது வகை புறாக்களை உருவாக்கலாம். அதுக்குன்னு ஒரு தரநிலை கமிட்டி இருக்கு. அவங்க பல கட்ட சோதனை நடத்தி, ஒப்புதல் கொடுத்தாதான் அந்தப் புறாவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்” என்றவர், ஒரு புறாக் கூண்டைக் காட்டினார்.

“இந்தப் புறாவோட பெயர் மதுரை கட்ட மூக்கு. இதோட மூக்கு கட்டையா வித்தியாசமா இருக்கும். அதை நாம ஆவணப்படுத்தல. இதைப் போலந்து நாட்டுக்காரன் கொண்டு போய் ‘போலிஷ் பார்ப்’னு பெயர் வெச்சுட்டான். இப்ப இங்கிலாந்துல ‘இங்கிலீஷ் பார்ப்’, ஜெர்மனில ‘ஜெர்மன் பார்ப்’னு அந்தந்த நாடுகள்ல அவங்களுக்குத் தகுந்த மாதிரி பெயர் வெச்சுக்கிறாங்க. ஆனா, அந்தப் புறா இங்க இருந்து போனதுதான். நிறைய இந்திய வகை புறாக்கள் ஐரோப்பா போயிருக்கு. நாம அதை ஆவணப்படுத்தாம விட்டுட்டோம். அதனால, வெளிநாட்டுக்காரன் அதை அவன் நாட்டுப் புறா மாதிரி ஆவணப்படுத்தி வெச்சிருக்கான். பேன்டெய்ல் (fan tail), கப்புசின் (capuchin), ஜேக்கோபின் (jacobin) மாதிரி பல புறாக்களை அவங்க ஆவணப்படுத்தி வெச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு இப்ப நம்மளோட 10 வகை புறாக்களுக்கான ஆவணம், தரநிலை எல்லாம் வெளிநாட்டுக்காரங்கதான் விதிக்கறாங்க.

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

மதுரை கட்ட மூக்குப் புறாவைக் கொண்டு வந்து இப்ப நிறைய பேருக்குக் கொடுத்து வளர்க்க வெச்சுட்டு வரேன். மதுரைல எல்லார்கிட்டயும் இருந்த அந்தப் புறாவ, இப்ப பொள்ளாச்சி வந்து என்கிட்ட வாங்கிட்டுப் போறாங்க” என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்ததாக ஒரு ஏக்கரில் அமைந்துள்ள ஏவரி அமைப்புக்குச் சென்றோம். முன்பு கட்டடத்தில் பார்த்த அதே புறாக்களும், அதில் இல்லாத பல அரிய வகை புறாக்களும் சற்றே இயற்கையான சூழலில் கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக்கொண்டிருந்தன. அனைத்துப் புறாக்களையும் பார்வையிட கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. சில புறாக்களைக் கையில் எடுத்துக் கொஞ்சிவிட்டு செந்தில் அரசு மீண்டும் தொடர்ந்தார்.

“தென்னை நார்த் தொழிற்சாலைதான் என்னோட முக்கியத் தொழில். புறா வளர்ப்பு எனக்கு ஒரு பொழுதுபோக்குதான். இதை வணிகமா பண்றது இல்ல. என்கிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறா வகைங்க இருக்கலாம். ஆனா, மார்க்கெட்ல எப்பவும் ஒரு பத்து வகை புறாக்கள்தான் விற்பனை ஆகிட்டிருக்கும். ஒரு கூண்டுல 10-15 புறாதான் இருக்க முடியும். அதுல புறாக்கள் எண்ணிக்கை அதிகரிச்சாதான் அதை நான் விற்பேன். அந்தப் பணத்தை அப்படியே பராமரிப்புக்குப் பயன்படுத்துவேன். எப்ப நேரம் கிடைச்சாலும் புறாக்களோட போய் நேரம் செலவிடுவேன். எனக்கு மன அழுத்தம் போக்கும் மருந்தா புறாக்கள்தான் இருக்கு. 100 கிராம்ல இருந்து ஒரு கிலோ எடை வரை இருக்கற புறாக்கள் என்கிட்ட இருக்கு. குறைந்தபட்சம் ஜோடி 1,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை மதிப்பிலான புறாக்கள் இருக்கு.

கோனிங்ஸ்பெர்க் கலர் ஹெட் டம்ப்ளர்னு (Konigsberg Colour-head Tumbler) ஒரு புறா இருக்கு. ஜெர்மனி நாட்டுப் புறா. கோனிங்ஸ்பெர்க் ஜெர்மனில ஒரு ஊர்ப் பெயர். டம்ப்ளர்ங்கறது அது பறக்கும் வகையின் பெயர். தலையில வித்தியாசமா கலர் இருக்கறதால இந்தப் பெயர். சாக்ஸன் ஷீல்டுனு (Saxon Shield pigeon) ஒரு புறா இருக்கு. அதோட கால் நல்லா பெருசா வித்தியாசமா இருக்கும். போர் வீரர்கள் கையில் வைத்திருக்கும் கேடயங்கள் போல, இதுக்கு ரெண்டு பக்கமும் கலர் வரும். ஜெர்மனி – போலந்து எல்லைல சாக்ஸனின்னு ஒரு இடம் இருக்கு. அங்க இருந்து வர்ர எல்லாப் புறாப் பெயருக்கு முன்னாடியும் சாக்ஸன் சேர்ந்துடும்.

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

இப்படி புறாவோட தோற்றம், ஊர் அடிப்படைல அதுக்குப் பெயர் வைப்பாங்க. பௌட்டர்னு (Pouter) ஒரு வகை புறா இருக்கு. அது ஊதும் புறா வகை. தன்னோட எதிர் பாலினத்தை ஈர்க்கறதுக்காக காத்தை இழுத்து உள்ள வெச்சுக்கும். புறாவைப் பார்க்கறப்ப பால் மாதிரி தோற்றம் இருக்கும். சாப்பிடற நேரம், இனப்பெருக்கம் முடியற நேரத்துல காத்தை வெளிவிட்ரும். மற்ற நேரங்கள்ல இதோட தோற்றம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்.

என்னோட பணிகள்ல இனப்பெருக்கம், பராமரிப்புதான் முக்கியம். இந்திய வகை புறாக்கள் நல்ல பெற்றோராக இருக்கும். ஆனா, வெளிநாட்டு வகை புறாக்கள் குஞ்சு பொரிப்பு, குஞ்சு வளர்ப்பில் இந்தியப் புறாக்களை மாதிரி பொறுப்பா இருக்காது. ஒரு வெளிநாட்டு ஜோடிப் புறா இருந்தா, மூணு ஜோடி இந்தியப் புறாக்கள் வெச்சிருக்கணும். புறாக்கள் முட்டை போடறதை டைரி போட்டுப் பராமரிப்பேன். வெளிநாட்டுப் புறாக்களோட முட்டைய, இந்தியப் புறாக்கள்கிட்ட வெச்சுடுவேன். அதுங்க நல்லபடியா குஞ்சு பொரிச்சு, நல்லா வளர்த்துக் கொடுத்திடும்.

“இந்தியப் புறாக்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம்!”

குஞ்சு பொரிக்க 18 நாள் அடைல இருக்கணும். வெளிநாட்டுப் புறாக்கள் 18 நாள் உட்காரும்னு உறுதியா சொல்ல முடியாது. குஞ்சு பொரிச்ச அப்புறம், புறாவுக்குப் பால் சுரக்கும். குஞ்சு பொறந்த முதல் ஐந்து நாள் அந்தப் பாலைத்தான் கொடுக்கும். ஐந்து நாளுக்கு அப்புறம் பால், தானியம் கலந்து கொடுக்கும். 15 நாளுக்கு அப்புறம் சராசரி இரையைக் கொடுக்கும். அந்த முதல் ஐந்து நாள் ரொம்பவே முக்கியம். இந்தியப் புறாக்கள் ரொம்பப் பொறுப்பா கவனிச்சுக்கும். நம்ம கை கொண்டு போனாக்கூடக் கொத்திரும்.

பல நாடுகள்ல பறவைகள மற்ற நாடுகள்ல இருந்து கொண்டு வர சில கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க. தனிமைப்படுத்தி, தடுப்பூசி போட்டு, பல கட்ட சோதனைகள் பண்ணி அப்புறம்தான் சம்பந்தப்பட்டவங்க கைக்குப் போகும். அதே மாதிரி நம்ம நாட்டுலயும் பறவைகள் கொண்டு வர்ரதுக்கான தடையை நீக்கி, விதிமுறைகளைக் கடுமையாக்கலாம். இதே மாதிரி தடை நீடிச்சா அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு விஷயம் இருந்ததே தெரியாமப்போயிடும்” என்கிறார் செந்தில்.