Published:Updated:

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

கீழக்கரை கருப்பட்டி துதல்
பிரீமியம் ஸ்டோரி
கீழக்கரை கருப்பட்டி துதல்

துதலை 30 நாள்கள் வரை கெடாமல் பயன்படுத்த முடியும்.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

துதலை 30 நாள்கள் வரை கெடாமல் பயன்படுத்த முடியும்.

Published:Updated:
கீழக்கரை கருப்பட்டி துதல்
பிரீமியம் ஸ்டோரி
கீழக்கரை கருப்பட்டி துதல்

கீழக்கரை கருப்பட்டி துதல்

னிப்பு வகைகளில் கீழக்கரை கருப்பட்டி துதலுக்கு எனத் தனி மவுசு உண்டு. இலங்கையிலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை பகுதிக்கு ராவியத் என்பவரால் இறக்குமதியான இனிப்பு வகைதான் ‘கருப்பட்டி துதல்’. நாட்டுக் கருப்பட்டியை பாகாகக் காய்ச்சி வடித்து எடுத்து, அத்துடன் முதல்தர தேங்காய்ப் பால், ஊறவைத்த ஜவ்வரிசி, மைதா பால் ஆகியவற்றுடன் தேவையான சர்க்கரை சேர்த்து சுமார் மூன்று மணி நேரம் அடிபிடிக்காமல் கிளறினால் உருவாகத் தொடங்கும் கருப்பட்டி துதல். இதோடு, சுத்தமான தேங்காய் எண்ணெய், ஏலக்காய்ப்பொடி சேர்த்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் தின்னத் தின்ன திகட்டாத துதலை ருசிக்கலாம்.

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?

2 கிலோ மைதாவில் இருந்து எடுக்கப்பட்ட பால், 8 கிலோ கருப்பட்டி, ஒரு கிலோ ஜவ்வரிசி, 20 தேங்காய்களில் இருந்து எடுக்கப்பட்ட பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் காய்ச்சும்போது நமக்கு 20 கிலோ துதல் கிடைக்கும். துதலை 30 நாள்கள் வரை கெடாமல் பயன்படுத்த முடியும். சாப்பிடும்முன் துதலை சூடு படுத்தினாலே அதன் சுவை அதிகரித்துவிடும். ஒரு கிலோ துதல் ₹300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கீழக்கரை கருப்பட்டி துதல்
கீழக்கரை கருப்பட்டி துதல்

‘`வளைகுடா நாடுகளுக்கு மட்டுமல்லாது, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவரும் அனைத்து நாடுகளுக்கும் நாள்தோறும் ‘கீழக்கரை துதல்’ விமானங்களில் பார்சலாகப் பறந்துகொண்டிருக்கிறது’’ என்கிறார் மூன்று தலைமுறையாக துதல் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் கீழக்கரை ராவியத் ஸ்வீட் பேலஸின் உரிமையாளர் ஜாகீர் உசேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை

தஞ்சாவூருக்கும் தலையாட்டிப் பொம்மைக்குமான உறவு என்பது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பர்யம் மிக்கது. தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் இது உருவாகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. தஞ்சைப் பெரிய கோயிலின் அடித்தளக் கட்டுமானத்தை அடையாளப்படுத்தும் விதமாகவே இது செய்யப்பட்டிருக்கக்கூடும்.

தலையாட்டிப் பொம்மை
தலையாட்டிப் பொம்மை

தலையாட்டிப் பொம்மையின் அடிப்பாகம், அரைவட்ட உருண்டையாக இருப்பதால்தான் கீழே சாய்ந்துவிடாமல் எப்போதும் நிமிர்ந்து நிற்கிறது. இதுபோலவே பெரிய கோயில் கோபுரமும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில்தான் காலத்தை வென்று கம்பீரத்தோடும் கலைநயத்தோடும் காட்சியளிக்கிறது தஞ்சை பெரிய கோயில். இதுமட்டுமல்ல, இன்னும் சில வாய்மொழிக் கதைகளும் தலையாட்டிப் பொம்மைக்கு உண்டு.

 ராஜேந்திர பிரபு
ராஜேந்திர பிரபு

``களிமண்ணால் செய்ற தலையாட்டிப் பொம்மைதான் பாரம்பர்யமானது. இப்போ இதுலயும் பிளாஸ்டிக் வந்துடுச்சு. சிலர் மட்டும்தான் களிமண்ல பொம்மை செஞ்சிக்கிட்டு இருக்கோம். இதுல இரண்டு வகை. ராஜா - ராணி ஜோடி. செட்டியார் - ஆச்சி ஜோடி. இப்ப ராஜா - ராணி ஜோடி மட்டும் உற்பத்தி செஞ்சிக்கிட்டு இருக்கோம். ஆறு இன்ச் உயரம்கொண்ட ஒரு ஜோடி பொம்மை விலை 100 ரூபாய். ஒன்பது இன்ச் உயரம் கொண்ட ஜோடி பொம்மை விலை 130 ரூபாய். 12 இன்ச் உயரம் கொண்ட ஜோடி 250 ரூபாய். களிமண்ணை உருண்டையா உருட்டி, அச்சுல வெச்சி அடிப்பாகம் தயார் செஞ்சிக்குவோம். மேல் பாகத்துக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்துவோம். ரெண்டையும் ஒண்ணா சேர்த்து வெயில்ல நல்லா காயவெச்ச பிறகு பெயின்ட் பண்ணுவோம். மாசத்துக்கு 800 பொம்மைகளுக்கு மேல தயார் செய்றோம்'' என்கிறார் பொம்மை உற்பத்தியாளர் ராஜேந்திர பிரபு.

பாம்பன் பன்னா கருவாடு

சீலா, நெத்திலி, கத்தாழை, கட்டா என பல்வேறு கருவாடுகளுக்கு மத்தியில் தனித்துவமாக விளங்குவது கொழுப்பு இல்லா பாம்பன் ‘பன்னா கருவாடு’. மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இருந்து மீனவர்களால் பிடிக்கப்பட்டுவரும் பன்னா மீன்களின் செதில்களைச் சுத்தம் செய்துவிட்டு, வயிற்றின் மேல் பகுதியையும் கிழித்து சுத்தம் செய்து உள்ளே கல் உப்பைத் திணித்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கிறார்கள். மறுநாள் பன்னா மீனின் வயிற்றில் வைக்கப்பட்ட கல் உப்பை முழுவதுமாக அகற்றிவிட்டு, கடல்நீரில் நன்றாக அலசியெடுத்து, பின்னர் இரண்டு நாள்கள் வெயிலில் உலரவைத்து எடுக்கப்படுகிறது, மூக்கைத் துளைக்கும் வாசம்கொண்ட கருவாடு!

பாம்பன் பன்னா 
கருவாடு
பாம்பன் பன்னா கருவாடு

கருவாட்டுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் மற்றும் மசாலாப்பொடி சேர்த்துக் குழம்பாகக் கொதிக்கவைத்தால் அதன் மணம் தெருவில் செல்வோரையும் ருசி பார்க்க அழைக்கும். மசாலாப் பொடி சேர்த்து எண்ணெயில் பொரித்தும் ருசிக்கலாம். கருவாட்டுத் தொக்காகவும் பயன்படுத்தலாம்.

ஆலின்
ஆலின்

``பாம்பன் பன்னா கருவாட்டில் கொழுப்பு இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடலாம். அதனால் வெளிநாடுகளில் வசிப்போரும் இந்தக் கருவாட்டை விரும்பி வாங்குகின்றனர்’’ என்கிறார் கருவாடு விற்பனை செய்துவரும் ஆலின். உலரவைக்கப்பட்ட கருவாட்டின்மீது மஞ்சளைத் தடவி காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்தினால் ஒரு மாதம்வரை பயன்படுத்தலாம். கருவாட்டில் மஞ்சள்பொடி தூவி டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். ருசி மிகுந்த பாம்பன் பன்னா கருவாடு கிலோ 300 ரூபாயில் இருந்து 350 வரை விற்பனையாகிறது.

சிங்கம்புணரி கயிறு

சிவகங்கை அருகிலுள்ள சிங்கம்புணரி மக்கள் தயாரிக்கிற கயிறு உறுதியின் அடையாளமாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவு இருந்ததால் தென்னை சார்ந்த உபதொழில்கள் பெருகின. அந்த வகையில் கயிறு தயாரிக்கும் தொழிலை 300 வருடங்களுக்கு மேல் பாரம்பர்யமாகச் செய்து வருகின்றனர். தேங்காய் மட்டை நார்களைப் பிரித்து கைக்குப் பக்குவமாக மாற்றி உறுதியான கயிறாக உருவாக்குகின்றனர். இதில் மணிக்கொச்சத்தில் இருந்து கோயில் தேர் இழுக்கும் கயிறுவரை பல வகை உண்டு. 95 சதவிகிதம் பெண்களே இந்தக் கயிறுகளைத் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம்புணரி
 கயிறு
சிங்கம்புணரி கயிறு
 சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

“ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் அதிகாலை 3 மணிக்கே வேலைகளை ஆரம்பித்து காலை 8 மணிக்கெல்லாம் முடித்துவிடுவார்கள். அதற்குப்பின் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள். விரைவாகவும் சரியாகவும் சுற்ற வேண்டும் என்பதால் மூளைக்கும் உடலுக்கும் போட்டியாக இருக்கும் வேலை இது. இதனால் பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு இணையாக நோய் நொடியின்றி வாழ்கின்றனர். இயந்திரங்களில் செய்யும் கயிறு கைகளுக்கு இலகுவாக இருக்காது. நீடித்தும் உழைக்காது. நாங்கள் கைகளால் முறுக்கியே கயிறாக மாற்றுவதால் பொருளின் தரம் உயர்வாக இருக்கும். அதோடு, எந்த பிளாஸ்டிக் நரம்பையும் இதில் பயன்படுத்துவதில்லை. அதனால்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்துவந்து சிங்கம்புணரி கயிற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விலையில் 300 ரூபாய் முதல் கயிறுகள் வழங்குகிறோம். கருதுகட்டு, கொட்டகை, சாரம், கிணறு இழுவை, பெயின்ட் அடிக்க என்று பலவித தொழில்களிலும் எங்கள் கயிறு நம்பிப் பயன்படுத்தப்படுகிறது’’ என்கிறார் கயிறு உற்பத்தியாளர் சத்தியமூர்த்தி.