Published:Updated:

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இவையும்தான்!

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

1,200 டன் பிளாஸ்டிக் கழிவுகள்... விதிமீறிய 5,247 கட்டடங்கள்...

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இவையும்தான்!

1,200 டன் பிளாஸ்டிக் கழிவுகள்... விதிமீறிய 5,247 கட்டடங்கள்...

Published:Updated:
சென்னை
பிரீமியம் ஸ்டோரி
சென்னை

சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் தேங்கிய வெள்ளத்துக்கு மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்படாதது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு, கால்வாய்களைத் தூர்வாராதது என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவற்றுடன் தற்போது சென்னையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களும், கால்வாய்களில் டன் கணக்கில் அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் குவியலும் வெள்ளத்துக்குக் கூடுதல் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இவையும்தான்!

நவம்பர் 10-ம் தேதி சென்னையில் தொடங்கிய மழை 11, 12 ஆகிய தேதிகளில் கனமழையாகப் பல மணி நேரம் கொட்டித் தீர்த்ததால் மொத்த சென்னையே வெள்ளக்காடானது. பல இடங்களில் அந்த வெள்ளமே இன்னும் வடியாத நிலையில், வங்கக்கடலில் உருவான அடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 18, 19 தேதிகளிலும் மழை கொட்டியது. இதனால், சென்னையில் மீண்டும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில்தான் சென்னையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களும் வெள்ளத்துக்கு ஒரு காரணம் என்றபடி நம்மிடம் பேசினார் வழக்கறிஞர் ருக்மாங்கதன். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் இவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இவையும்தான்!

நோட்டீஸ்விட்டும் பலனில்லை!

“சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் விதிமுறைகளை மீறி 5,247 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளை, வடிநீர் வாய்க்கால்களை ஆக்கிரமித்து இவற்றில் பல கட்டப்பட்டுள்ளன. பல கட்டடங்கள் கழிவுநீர், மழைநீர் வடிகால்களுடன் இணைக்கப் பெறாத வகையில் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் மழைநீர் வெளியேற முடியாமல் வெள்ளம் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். மேற்கண்ட கட்டடங்களில் ராயபுரம் மண்டலத்தில் கட்டப்பட்ட 356 கட்டடங்களுக்கு ‘ஸ்டாப் வொர்க்கிங்’ நோட்டீஸும், 300-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘லுக் அண்ட் சீல்’ நோட்டீஸும், 21 கட்டடங்களுக்கு ‘டீ ஆக்குபேஷன்’ நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைத்துக் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2019-ம் ஆண்டே வழங்கப்பட்டும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசாவது உரிய நடவடிக்கை எடுத்து, சென்னையைக் காப்பாற்ற வேண்டும். அடுத்த வெள்ளம் வருவதற்குள் இதைச் செய்தால்தான் சென்னை ஓரளவேனும் வெள்ளத்திலிருந்து தப்பும்” என்றார்.

சென்னையை மிதக்கவிட்ட பிளாஸ்டிக்!

சமீபத்திய மழையில் சென்னையில் மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர் உட்பட 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக்கொண்டன. அங்கிருந்து சுமார் 1,200 டன் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன. அடையாறு, கூவம் ஆறுகளின் வழியாகக் கடலுக்குச் செல்லும் நீரில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கலந்ததால், மெரினா கடற்கரை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருந்தது.

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இவையும்தான்!

இது பற்றிப் பேசிய சமூக ஆர்வலர்கள், “தமிழகத்தில் 2019, ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழகம் முழுவதுமுள்ள 1,350-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தடையைக் கண்காணிக்க மட்டும் 50,000 நபர்கள் அடங்கிய 10,000 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் தடை உத்தரவு, வெறும் கண்துடைப்பு அறிவிப்பாக மாறிப்போனது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் எளிதாகக் கிடைக்கின்றன. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட ஒரு மாநிலத்தில், ஒரு நாளைக்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என்றால், அரசு நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு பிரச்னைகளிலும் சென்னை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டோம்... “நான் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற பின்னர் லுக் அண்ட் சீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த சுமார் 800 கட்டடங்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறேன். பல இடங்களில் நோட்டீஸ் வழங்கப்பட்டதும், கட்டடங்களின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலோ, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடமோ மேல்முறையீட்டுக்குச் சென்றுவிடுவதால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இருப்பினும் வழக்குகளை எதிர்கொண்டு விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

மழை வெள்ளத்தின்போது பல இடங்களில் வடிகால்களில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது உண்மைதான்... அதேசமயம், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வுசெய்து, பல நூறு கிலோ பிளாஸ்டிக்குகளை தொடர்ந்து பறிமுதல் செய்துவருகிறோம். ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாகத் தடை செய்ய முடியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. பிளாஸ்டிக் இல்லாத சென்னை மாநகராட்சியை உருவாக்க கடும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறோம். பிளாஸ்டிக்குக்கு எதிரான போரில் வெற்றிபெற அரசின் முயற்சிகள் மட்டுமே போதாது; மக்களின் ஒத்துழைப்பும் தேவை. விரைவில் இந்த இரண்டு சிக்கல்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார் தீர்க்கமாக!

மீண்டும் ஒரு முறை மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும்!