`பிரதமரின் ஆசீர்வாதம் என் மகளுக்குத் தேவை!' - வேலூர் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியதால், வேலூர் மணமக்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ட்ரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர், ராஜசேகரன். பொது சுகாதாரத்துறையில் 32 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். வட்டார சுகாதார மேற்பார்வையாளராக சமீபத்தில்தான் ஓய்வுபெற்றார். இவரது மனைவி டாக்டர் ராஜலட்சுமி. இவர்களது மகள் டாக்டர் ராஜ்ஸ்ரீ, மகன் டாக்டர் ஸ்ரீராம்.

ராஜசேகரனின் மகளுக்கும் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-லட்சுமி தம்பதியரின் மகனான டாக்டர் சுதர்சனுக்கும் வரும் 11-ம் தேதி ராணிப்பேட்டை ஏ.ஆர்.எஸ் மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது. 10-ம் தேதி இரவு, மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மகளின் திருமணத்துக்கு நேரில் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடந்த மாதம் 28-ம் தேதி, வேலூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து விரைவுத் தபாலில் திருமண அழைப்பிதழ் அனுப்பினார் ராஜசேகரன். அவரது அழைப்பை ஏற்று மோடியிடமிருந்து வாழ்த்து மடல் வந்திருக்கிறது.

டெல்லியிலிருந்து மோடியின் கையொப்பமிட்ட அந்த வாழ்த்து மடல், நேற்று முன்தினம் (7-ம் தேதி) ராஜசேகரனுக்கு தபாலில் வந்துசேர்ந்தது. அதில், ‘‘ தங்களின் மகள் திருமணத்துக்கு என்னை அழைத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துகள்’’ என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த மடலைப் பார்த்து, ராஜசேகரனின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். இதுகுறித்து ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ நான் மோடியின் தீவிர பற்றாளன். அவரின் செயல்பாடுகள், நிர்வாகத் திறமை என்னைக் கவர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட நபரின் ஆசீர்வாதம்தான் என் மகளின் நல்வாழ்க்கைக்குத் தேவை.

அதற்காகத்தான் வாழ்த்து மடலை அனுப்பினேன். பிரதமரிடம் இருந்து பதில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இது போதும். வாழ்நாள் முழுவதும் பெருமைக்குரியதாக நினைத்துக்கொள்வோம். எங்களின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை’’ என்றார் உற்சாகத்துடன்.