அலசல்
Published:Updated:

“ஐயோ, 140 வீடுகளைக் காணோம்!”

குடிசை வீட்டை காட்டும் 
இளவரசி பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
குடிசை வீட்டை காட்டும் இளவரசி பாலமுருகன்

ஒரு கிராமத்தையே ‘அலறடிக்கும்’ ஆளுங்கட்சிப்புள்ளியும் அதிகாரிகளும்

‘கிணற்றைக் காணோம்’ என ஒரு திரைப்படத்தில் போலீஸில் வடிவேலு புகார் கொடுத்து அதகளப்படுத்துவார். வயிறுவலிக்க நம்மையெல்லாம் சிரிக்கவைக்கும் அந்தக் காட்சிக்கு பின்னாலிருக்கும் உண்மை, நம் ஒவ்வொருவரையும் அதிரவும்வைக்கும்.

இதோ, இப்படித்தான் அதிர்ந்து கிடக்கிறார்கள் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவருமே! ‘எங்களுடைய பட்டா நிலத்தில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுங்கள்’ என்று பாதிக்கப்பட்ட 22 பேர், வயிறு எரிய எரிய தலையாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, உரிய நடவடிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

புகார் கிளப்பியிருப்பவர்கள் கைகாட்டுவது, தலையாமங்கலம் ஊராட்சியின் முன்னாள் அ.தி.மு.கழகக் கிளைச் செயலாளர் ராஜ்மோகனை நோக்கித்தான். ‘சுமார் 3 கோடி ரூபாய் வரை இதன் மூலம் மோசடி செய்துள்ளார். ஆனால், இவர்மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் திருவாரூர் மாவட்டத்தின் ஆளுங்கட்சிப் பெரும்புள்ளிகளான மக்கள் பிரதிநிதிகள்!

காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

ம.தி.மு.க-வின் மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி இதைப் பற்றி நம்மிடம் கொந்தளித்துத் தீர்த்தார். “பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 2016 முதல் 2020 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் 225 வீடுகள் மற்றும் 493 கழிப்பறைகள் எங்கள் கிராமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ராஜ்மோகன், தான் இந்தப் பணிகளைச் செய்து கொடுப்பதாகச் சொல்லி பட்டா, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட ஆவணங்களை ஊர் மக்களிடமிருந்து சேகரித்தார். ஆனால், அதில் பல பேரின் வங்கிக் கணக்குகளுக்கு வீடு கட்டுவதற்கான பணம் வரவே இல்லை. சந்தேகம் ஏற்பட்டு ஊராட்சி அலுவலகத்தின் ரெக்கார்டு நோட்டைப் பரிசோதித்தபோது தூக்கிவாரிப் போட்டது. 225 நபர்களுக்கு அவர்களின் பெயர்களுடன் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதாகவும், 493 நபர்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிட்டிருந்தது. இவர்களில், 140 வீடுகளுக்கு உரிய நபர்களுக்கு இதுவரை ஒரு பைசாகூடப் பணம் வரவில்லை. அதேபோல 215 கழிப்பறைகளுக்கு உரிய பயனாளிகளுக்கும் பணம் வரவே இல்லை. ஆனால், அவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக போலியான வங்கிக் கணக்குகளை உருவாக்கி, பணத்தை எடுத்துள்ளனர்.

ஒரு வீடு கட்டுவதற்கான பணமாக 1,10,000 ரூபாய் மற்றும் 70,000 ரூபாய் மதிப்பில் கம்பி, சிமென்ட் கொடுப்பார்கள். கழிப்பறை கட்டுவதற்கு 14,000 ரூபாய் கொடுக்கப்படும். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளைச் சரிக்கட்டி, போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து கூட்டுச் சேர்ந்து மோசடி செய்து இந்தப் பணத்தைச் சுருட்டியுள்ளார் ராஜ்மோகன். வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட பொருள்களையும் விற்றுப் பணமாக்கிவிட்டார். இப்படி, சுமார் 3 கோடி ரூபாய் வரை சுருட்டியிருக்கிறார்கள்.

கட்டப்பட்ட கழிப்பறை
கட்டப்பட்ட கழிப்பறை

இந்த விஷயத்தை நாங்கள் கையிலெடுத்துக் கேள்வி கேட்டதும், தன்னைத் தாக்கிவிட்டதாக என் மீதும், என் தம்பி ராஜகுரு மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான பிரபாகரன் ஆகியோர் மீதும் காவல் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்தார். ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால் முக்கியப் பெரும்புள்ளிகள் துணையாக இருக்கின்றனர். அதனால், ஜாமீனில் வெளியே வர முடியாத ஐந்து பிரிவுகளில் எங்கள்மீது வழக்கு பதிந்துள்ளனர். ஆனால், என்ன நடந்தாலும் இந்த முறைகேடுகளுக்கு நீதி கிடைக்கும்வரை விடப் போவதில்லை” என்றார் உறுதியான குரலில்.

உள்ளூரைச் சேர்ந்த ராஜ்குமார், ‘‘என்னுடைய குடும்பத்துக்கு இரண்டு வீடுகளும், நான்கு கழிப்பறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாக மோசடி செய்துள்ளனர். வீடு கட்டிக் கொடுக்கப்பட்டி ருப்பதாக இவர்கள் வைத்துள்ள பட்டியலில் இறந்துபோன இருவர் பெயர்களும் இருக்கின்றன’’ என்றார் சோகத்துடன்.

அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசி பாலமுருகன், ‘‘வீடு கேட்டு நானும் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், இதுவரை பத்து பைசாகூட வரவில்லை. ஆனால், நான் வீடு கட்டிவிட்டதாக பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இப்போதும் நான் குடிசை வீட்டில்தான் இருக்கிறேன்” என்று தன் வீட்டைக் காட்டினார்.

குடிசை வீட்டை காட்டும் 
இளவரசி பாலமுருகன்
குடிசை வீட்டை காட்டும் இளவரசி பாலமுருகன்

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ராஜ்மோகனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘வீடு கட்டுவதற்கு விண்ணப்பம் கொடுத்தவர் களில் தகுதியுடைய பயனாளிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனி ரிஜிஸ்டர் எண்ணை உருவாக்கி, அதன் அடிப்படையிலேயே பணிகள் நடக்கும். பல்வேறு அதிகாரிகள் சேர்ந்துதான் இந்த மோசடியைச் செய்துள்ளனர்” என்று குற்றம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம், “எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று ஒட்டுமொத்தமாக ஜகா வாங்கினார்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஏ.எம்.ராஜாவிடம் கேட்டபோது, “இதுவரை 108 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. 35 வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. இதில் மோசடி எதுவும் நடைபெறவில்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொள்வதுடன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்மீது பொய்ப் புகார் பரப்பி வருகின்றனர்” என்றவர், இப்படிப் புகார் கிளப்புபவர்கள் மீது, தான் மாநிலத் தலைவராக இருக்கும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை எஸ்.சி./எஸ்.டி அலுவலர் சங்கத்தின் சார்பில் இது குறித்து வழக்கு தொடரப்போவதாகவும் கூறினார்.

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளின் நிழலில் ஒளிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படும் ஆளுங்கட்சியின் ராஜ்மோகன், ‘அதிகாரிகள்தான் தவறு செய்துள்ளனர்’ என்று வாக்குமூலம் கொடுக்கிறார். அதிகாரிகளின் சார்பில் பேசுபவரோ, ‘வீண்பழி’ என்று சொல்வதோடு, சாதி சார்ந்த ஊழியர் சங்கத்தைத் துணைக்கு அழைக்கிறார்.

மாசிலாமணி -  ராஜ்மோகன் -  ராஜ்குமார்
மாசிலாமணி - ராஜ்மோகன் - ராஜ்குமார்

இந்த ராஜ்மோகன் ஆளுங்கட்சிக்காரர் மட்டுமே. அப்படியிருக்க, அரசாங்கத்தின் வீடுகட்டும் திட்டம் தொடர்பான பணிகளில் இவர் மூக்கை நுழைக்கக் காரணமே... வீடு கட்டும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தன் தம்பிக்கு ஒதுக்குவதற்குத்தான். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். பிரச்னை என்று வந்ததும், ராஜ்மோகனும் அதிகாரிகளும் பரஸ்பரம் கைகாட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள். இருதரப்பும் கூட்டுக் கொள்ளைதான் நிகழ்த்தியுள்ளன. அதிகாரிகளின் துணையில்லாமல் இதை நிகழ்த்த முடியாது என்பதுதான் ஊர் மக்களின் வாதம்.

ஏற்கெனவே இந்த விஷயம் தன் கவனத்துக்கு வந்ததும், விசாரணையை முடுக்கிவிட்டிருக்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், ‘‘முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்று அடுத்தகட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது” என்று உறுதியான குரலில் நம்மிடம் சொன்னார்.

`மாவட்ட ஆட்சித்தலைவரின் நியாயமான விசாரணையில் உண்மை தெரிந்துவிடும், தங்களுக்கு வீடும் கிடைத்துவிடும்’ என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் மக்கள். ஆட்சித் தலைவர் ஆனந்த், ஆளுங்கட்சிப் புள்ளிகளுக்கு அடிபணியாமல் அதை நிறைவேற்றிவைப்பார் என்று நம்புவோம்.