Published:Updated:

‘காவல்துறை... கரைவேட்டி... மெடிக்கல் மாஃபியா...; - கோவையைக் கலங்கடிக்கும் கூட்டணி!

கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

திடீரென்று ஒருநாள் ராமச்சந்திரன், சில போலீஸார் மற்றும் ரெளடிகள் மருத்துவமனைக்கு வந்தார்கள். உமாசங்கரின் சட்டையைப் பிடித்து இழுத்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்

‘காவல்துறை... கரைவேட்டி... மெடிக்கல் மாஃபியா...; - கோவையைக் கலங்கடிக்கும் கூட்டணி!

திடீரென்று ஒருநாள் ராமச்சந்திரன், சில போலீஸார் மற்றும் ரெளடிகள் மருத்துவமனைக்கு வந்தார்கள். உமாசங்கரின் சட்டையைப் பிடித்து இழுத்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்

Published:Updated:
கோவை
பிரீமியம் ஸ்டோரி
கோவை

கோவை மருத்துவர் மர்ம மரண வழக்கின் பின்னணியில் ‘காவல்துறை, கரைவேட்டி, மெடிக்கல் மாஃபியா’ என அடுத்தடுத்த அதிரி புதிரி தகவல்களால் கொங்கு மண்டலமே கிறுகிறுத்து நிற்கிறது!

கோவை காந்திபுரம் பகுதியில், டாக்டர் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமாக எல்லன் மருத்துவமனை இயங்கிவந்தது. சில வருடங்களுக்கு முன்பு அந்தக் கட்டடத்தை ஒப்பந்தம் போட்டு வாடகைக்கு எடுத்து, ‘சென்னை மருத்துவமனை’ என்ற பெயரில் சேவையைத் தொடங்கினார் டாக்டர் உமாசங்கர். ஆனால், நாளடைவில் உமாசங்கருக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே பிரச்னைகள் உருவாகின. இதையடுத்து ‘சென்னை மருத்துவமனை’ தாக்குதலுக்குள்ளானது. இது குறித்த வழக்கில் உமாசங்கர் கைதுசெய்யப்பட்டார். 2021 ஜனவரியில் ஜாமீனில் வெளிவந்த உமாசங்கர், சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென கார் மோதி உயிரிழந்தார். இந்த மர்ம மரணத்தின் பின்னணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தரப்புக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரியது அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க.

 ‘காவல்துறை... கரைவேட்டி... மெடிக்கல் மாஃபியா...; - கோவையைக் கலங்கடிக்கும் கூட்டணி!

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘மருத்துவமனையைக் கைப்பற்ற ராமச்சந்திரனே கூலிப்படையைவைத்து மருத்துவமனையைத் தாக்கி, உமாசங்கர் மீது பழிபோட்டது தெரியவந்திருப்பதாக’க் கூறி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ‘காவல்துறை, அரசியல், மெடிக்கல் மாஃபியா’ என்று வழக்கு அடுத்தடுத்த தடங்களில் தடதடக்கிறது.

இது குறித்துப் பேசுகிற உமாசங்கரின் உறவினர்கள், “திடீரென்று ஒருநாள் ராமச்சந்திரன், சில போலீஸார் மற்றும் ரெளடிகள் மருத்துவமனைக்கு வந்தார்கள். உமாசங்கரின் சட்டையைப் பிடித்து இழுத்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். காவல்துறை உதவி ஆணையாளர் செளந்தரராஜன், ‘ஒப்பந்த முறிவு’ பத்திரத்தில் கையெழுத்து போடச் சொன்னார். உமாசங்கர் மறுத்தார். உடனே அவரைக் கைது செய்துவிட்டார்கள். ராமச்சந்திரனின் வழக்கறிஞர் எஸ்.பி ராஜேந்திரன் உள்ளிட்டோர், ‘மருத்துவமனையை ஒப்படையுங்கள். இல்லை உமாசங்கரை உயிருடன் பார்க்க முடியாது’ என மிரட்டினார்கள். சிறையில்கூட உமாசங்கரைக் கொல்ல சதி நடந்தது. ஜாமீனில் வெளிவந்த பிறகு, கார் மோதி உமாசங்கர் உயிரிழந்துவிட்டார். எல்லா போலீஸ்காரர்களும் பாபநாசம் படத்தில் வருவதைப்போல ஒரே கதையைக் கூறினார்கள். ஒரு சிசிடிவி பதிவுகூட இல்லை... விபத்து ஏற்படுத்திய டிரைவர் ரிச்சர்ட்டை விசாரிக்காமல், வழக்கையும் அவசரமாக முடித்துவிட்டனர். முதல்வர் தொடங்கி பிரதமர் வரை எல்லோருக்கும் புகார் அனுப்பினோம். நாங்கள் போய் நின்ற எல்லா இடங்களிலும் ‘அன்பு அண்ணன் (அன்றைய அ.தி.மு.க அமைச்சர் வேலுமணியின் சகோதரர்) நேடியாகத் தலையிட்டுள்ள பிரச்னை இது’ எனச் சொல்லி உதவ மறுத்துவிட்டனர்” என்றனர் ஆதங்கமாக.

அன்பரசன்
அன்பரசன்

உமாசங்கர் உறவினர் செந்தில்ராஜ் திரவியம், “கோவையில் தனியார் மருத்துவமனைகள், மாஃபியாபோல இயங்கிவருகின்றன. மருத்துவமனையை மேம்படுத்த ஒரு தனியார் வங்கியில் கடன் கேட்டுச் சென்றபோது, ‘நாங்கள் ஏற்கெனவே ஒரு பெரிய மருத்துவமனைக்குக் கடன் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு எதிராக நாங்களே போட்டியாளரை உருவாக்க மாட்டோம்’ என மறுத்துவிட்டனர். இங்கு குறிப்பிட்ட இரண்டு ஆதிக்க சமூகத்தினர்தான் மருத்துவத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர். அ.தி.மு.க வி.வி.ஐ.பி-கள் சிலரும் அந்தத் தனியார் மருத்துவமனைகளில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு உமாசங்கரின் வளர்ச்சி பிடிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் ராதாகிருஷ்ணன், ‘ரூ.10 கோடி கொடுக்கிறோம். மருத்துவமனையைக் கொடுத்துவிடுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், உமாசங்கர் மறுத்துவிட்டார்” என்றார்.

தினகரன்
தினகரன்

உமாசங்கரின் மகன் தினகரன், “எங்கள் வீட்டில் அப்பாதான் வருவாய் ஈட்டும் ஒரே நபர். இப்போது அது தடைப்பட்டுவிட்டது. வங்கியில், ‘11 கோடி ரூபாய் கடனைக் கட்டுங்கள். இல்லையென்றால் உங்கள் வீடுகளை ஏலத்தில் விட்டுவிடுவோம்’ எனச் சொல்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஏலம்விடத் தடை வாங்கியிருக்கிறோம். அப்பா மரணம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்!” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து, காவல்துறை உதவி ஆணையர் சௌந்தரராஜனிடம் விளக்கம் கேட்டபோது, “மருத்துவமனைக்குள் நுழைந்து பிரச்னை செய்த வழக்குக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. வாடகை பாக்கி தொடர்பான புகாரைத்தான் நாங்கள் விசாரித்தோம். சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடவடிக்கையும் எடுத்தோம்” என்றார்.

உமாசங்கர்
உமாசங்கர்
ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனிடம் கேட்டோம். “ராமச்சந்திரனைவிட அவர் சகோதரர் எனக்குப் பழக்கம். ‘மருத்துவமனையை காலி செய்து கொடுக்குமாறு’ மூன்றாம் நபர் மூலம் எங்களை அணுகினார் ராமச்சந்திரன். ஆனால், ‘அது போன்ற செயல்களிலெல்லாம் நாங்கள் ஈடுபட மாட்டோம்’ எனக் கூறி விட்டோம்” என்றார்.

வேலுமணியின் உதவியாளர் ராதாகிருஷ்ணன், “உமாசங்கர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்றார்.

ராமச்சந்திரன் தரப்பின் கருத்தை அறிய அவரின் வழக்கறிஞர் எஸ்.பி ராஜேந்திரனை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, ராமச்சந்திரனின் சகோதரர் லஷ்மி நாராயணசாமியைத் தொடர்புகொண்டோம். அவர் தங்கள் வழக்கறிஞர் சிவக்குமார் என்பவரின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். சிவக்குமாரைத் தொடர்புகொண்டோம். “நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். மாலை அழைக்கிறேன்” என்றார். அதன் பிறகு அவரும் அழைக்கவில்லை.

உண்மையை வெளிக்கொண்டு வருமா சி.பி.சி.ஐ.டி விசாரணை?