Published:Updated:

ஆளுங்கட்சி மேலிடத்துடன் மோதல்... அந்தமானில் சுற்றிவளைக்கப்பட்ட ஓ.வி.ஆர்!

ஓ.வி.ஆர்!
பிரீமியம் ஸ்டோரி
ஓ.வி.ஆர்!

காவல்துறையில் அதிரடிக்குப் பெயர்பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓ.வி.ஆருக்காகப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.

ஆளுங்கட்சி மேலிடத்துடன் மோதல்... அந்தமானில் சுற்றிவளைக்கப்பட்ட ஓ.வி.ஆர்!

காவல்துறையில் அதிரடிக்குப் பெயர்பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓ.வி.ஆருக்காகப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது.

Published:Updated:
ஓ.வி.ஆர்!
பிரீமியம் ஸ்டோரி
ஓ.வி.ஆர்!

ஏப்ரல் 3-ம் தேதி... அந்தமான் விமான நிலையம். பெங்களூருக்குச் செல்லும் விமானம் சற்று நேரத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார், விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்த ரௌடி ரஞ்சித்குமார் என்கிற ஓ.வி.ஆரைச் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைதுசெய்தார்கள். ஏன் இந்த அதிரடி கைது, யார் இந்த ஓ.வி.ஆர் என்று விசாரணையில் இறங்கினோம்.

முன்னதாக நடந்த இன்னொரு சம்பவத்தையும் பார்த்துவிடுவோம். மார்ச் 31-ம் தேதி... சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓ.வி.ஆர்., தன்னிடம் ஆக்டிங் டிரைவராகப் பணிபுரியும் என்.ரஞ்சித்குமாரை செல்போனில் அழைத்துள்ளார். அவர் வீட்டுக்குள் வந்ததும், ‘என்கூடவே இருந்துக்கிட்டு நான் இன்னொரு பொண்ணுகூட தொடர்புல இருக்குறேன்னு என் பொண்டாட்டிகிட்ட போட்டுக் கொடுக்குறியா?’ என்று சொல்லி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். வலி தாங்காமல் கழிவறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட டிரைவர், அங்கிருந்து ஜன்னலில் நைலான் கயிற்றைக் கட்டி அதன் வழியாகக் கீழே குதித்தார். இதில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து ரஞ்சித்குமாரின் மனைவி பவுலினா, கிண்டி காவல் நிலையத்தில் புகாரளிக்க... ஓ.வி.ஆரைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் அந்தமானில் பதுங்கியிருந்த ஓ.வி.ஆரை ஏப்ரல் 3-ம் தேதி கைதுசெய்து சென்னைக்கு அழைத்துவந்தது போலீஸ்.

ஆளுங்கட்சி மேலிடத்துடன் மோதல்... அந்தமானில் சுற்றிவளைக்கப்பட்ட ஓ.வி.ஆர்!

யார் இந்த ஓ.வி.ஆர்? செங்கல்பட்டு மாவட்ட கதர் வட்டாரத்தில் விசாரித்தபோது கதை கதையாகச் சொன்னார்கள்... ‘‘செங்கல்பட்டு மாவட்டம், செய்யாறு ஓதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓ.வி.ரஞ்சித்குமார். இவர் ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். புரட்சி பாரதம் கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்த ஓ.வி.ஆரை, சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கட்சிக்கு அழைத்து வந்தார். கட்சிக்கு வந்ததும் முக்கிய நிர்வாகிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ஓ.வி.ஆர்., தனக்கென்று ஒரு கோஷ்டியை ஏற்படுத்திக்கொண்டார். அடுத்து, மாவட்டத் தலைவர் பதவியைப் பெறவும் காய்நகர்த்தினார். எப்போதும் கழுத்தில் பெரிய செயின், கையில் மோதிரம், கட்சிக்கொடி கட்டிய சொகுசு கார், எந்நேரமும் ஆதரவாளர் புடைசூழ ஓ.வி.ஆர் ஊருக்குள் வலம்வருவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஓ.வி.ஆர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதனால், செய்யாறு காவல் நிலையத்தில் ‘சரித்திரப் பதிவேடு’ குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் அவரது குடும்ப விழாவுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஓதியூருக்கு வந்தபோது, சென்னையிலிருந்து வீடு வரை பேனர்களை வைத்து கெத்து காட்டினார். இப்படிக் கட்சியிலும் சொந்த ஊரிலும் பந்தா காட்டிய ஓ.வி.ஆர்., காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’’ என்றார்கள்.

ஓ.வி.ஆர் கைதுசெய்யப்பட்ட பின்னணி குறித்து போலீஸாரிடம் பேசினோம்... ‘‘டிரைவரைத் தாக்கிய வழக்கில் விசாரணை நடத்தியபோது, பா.ஜ.க-விலிருக்கும் மூத்த வழக்கறிஞர் ஒருவரும், இன்னும் சில வழக்கறிஞர்களும் எங்களிடம் ஓ.வி.ஆருக்காக போனில் பேசினார்கள். காவல்துறையில் அதிரடிக்குப் பெயர்பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓ.வி.ஆருக்காகப் பேசியது அதிர்ச்சியாக இருந்தது. அதனால், ரகசியமாக ஓ.வி.ஆரைத் தேடினோம். அப்போதுதான் மடிப்பாக்கத்திலிருக்கும் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவரின் உதவியால் ஓ.வி.ஆர் அந்தமானுக்குத் தப்பிச் சென்றிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக, விமானத்தில் அந்தமான் சென்றோம். நாங்கள் கிளம்பிய தகவலை இங்கிருந்தே சிலர் ஓ.வி.ஆருக்குக் கசியவிட்டிருக்கிறார்கள். இதையடுத்து அவர் அந்தமானிலிருந்து தப்பிச் செல்ல விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். அப்போதும் விடாமல் நாங்கள் சுற்றிவளைத்து அவரைக் கைதுசெய்துவிட்டோம்’’ என்றவர்கள், இன்னும் சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

சுனிதா
சுனிதா

“டிரைவரைத் தாக்கியதின் பின்னணியில் ஒரு பெண் விவகாரம் இருக்கிறது. அது எங்களுக்குக் கிடைத்த முதல் துருப்புச்சீட்டு. மேலும், அவர்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருந்தன. தவிர அவர்மீது மேலிடத்திலிருந்தும் சில புகார்கள் வந்திருந்தன. கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த நிலையில், ஆளுங்கட்சியில் ரியல் எஸ்டேட் தொடர்புடைய பெரிய இடத்துடன் மோதியிருக்கிறார்கள். இதனால்தான் அவரைக் கைதுசெய்ய அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் ஏப்ரல் 3-ம் தேதி ஓ.வி.ஆர் கைதுசெய்யப்பட்ட மறுநாளே மோசடி வழக்கு ஒன்றில் அவரின் மனைவி சுனிதாவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். கொரோனா காலகட்டத்தில் மேடவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசனிடம் 12.5 கோடி ரூபாயும், 36 சவரன் தங்க நகைகளையும் ஏமாற்றியதாக சுனிதா மீதான புகாரை தூசுதட்டி எடுத்திருக்கிறது போலீஸ். இது ஆரம்பம்தான்... இருவரின் மீதான பல்வேறு மோசடி விவகாரங்களும் விரைவில் வெளிவரும்” என்று சொல்லி முடித்தார்கள்!

அரசியல்வாதிகளையும் குற்றங்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism