சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட போலீஸைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் திருவாரூர் மாவட்டம், இடையூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி, கடலோர காவல் படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது விடுப்பில் சொந்த ஊரான காத்திருப்புக்கு வந்திருக்கிறார். வெளியூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் சக்திவேல் வீட்டின் அருகே குடித்துவிட்டு இரவில் சூதாட்டத்தில் ஈடுபடுவர் என்கிறார்கள். இதன் காரணமாக அருகில் வசிப்பவர்கள் நிம்மதி இழந்திருக்கிறார்கள். பெரியவர்கள் சிலர் சென்று அவர்களை அதட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள். அப்படியிருந்தும் அந்த நபர்கள் தங்கள் சூதாட்டத்தைத் தொடர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில் நேற்று (06.10.2021) இரவு காத்திருப்பு பெட்ரோல் பங்க் அருகே அதே இளைஞர்கள் சிலர் குடிபோதையில் சாலையோரம் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியே வந்த சக்திவேல் அதைத் தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். இதையடுத்து சக்திவேல் தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் நின்றிருக்கிறார். அப்போது மீண்டும் அங்கு வந்த அந்த நபர்கள் சக்திவேலைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள். இதில் தலை மற்றும் கையில் காயமடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்த பாகசாலை போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவின் பதிவை ஆய்வு செய்து இரவோடு இரவாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கை மாவட்ட எஸ்.பி சுகுணாசிங் நேரடியாகக் கண்காணித்துவருகிறார். காவலரைக் கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.