Published:Updated:

` அவ கடைசி வரைக்கும் வாங்க மாட்டாள்!' - வெங்காய சண்டையில் வழக்கு வாங்கிய 6 பெண்கள்

உத்தரப்பிரதேசத்தில் வெங்காயம் வாங்குவதில் ஏற்பட்ட சண்டையில் 6 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

வெங்காயம்
வெங்காயம்

சமையலில் சுவை கூட்டுவதில் வெங்காயத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த சில நாள்களுக்கு முன்பு உச்சத்தை தொட்ட வெங்காயத்தின் விலை கடந்த சில நாள்களாகக் குறைந்து வருகிறது. வெங்காயத்தை வெட்டும்போது கண்ணீர் வரும். இதை அனுபவப்பூர்வமாக உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், வெங்காயத்தால் வழக்கு வந்த கதையைத்தான் இப்போது படிக்கப் போகிறீர்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் காலாகேரி கிராமத்தில் காய்கறி வியாபாரி ஒருவர் வெங்காயத்தை விற்பனை செய்துள்ளார். அந்த கிராமத்தைச் சேர்ந்த நேஹா என்ற பெண், வியாபாரியிடம் காய்கறிகளை வாங்கச் சென்றுள்ளார். வெங்காயம் விலையைக் கேட்டவர், அவரிடம் மேலும் விலையைக் குறைத்துத் தருமாறு பேரம் பேசினார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த தீப்தி என்பவர் வெங்காயம் வாங்க வந்துள்ளார். நேஹா பேரம் பேசியதைப் பார்த்தவர், `இவர் இப்படிதான் பேரம் பேசிக்கிட்டே இருப்பார், கடைசி வரை வெங்காயத்தை வாங்க மாட்டார்' எனப் பொருளாதாரரீதியாக அவரைச் சற்று தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

வெங்காயம்
வெங்காயம்

தீப்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமடைந்த நேஹா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் ஆதரவாக மேலும் சில பெண்கள் வந்ததால் இறுதியில் கைக்கலப்பில் ஏற்பட்டது. இந்தச் சண்டையில் 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.