சமீபத்தில் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்குச் சென்ற அரசுப் பேருந்தை, நாங்குநேரி டோல்கேட் அருகே நிறுத்தி சோதனை நடத்தியது சிறப்பு பறக்கும் படை. அப்போது, பேருந்து நடத்துநரிடம் போலீஸார் பயணம் செய்யும் வாரன்ட் ஒன்று இருந்தது. பூதப்பாண்டி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயசேகர் அந்த வாரன்ட்டில் பயணிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்தில் அந்த சப் இன்ஸ்பெக்டர் பயணம் செய்கிறாரா என்று போக்குவரத்துப் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். காவல் துறையைச் சேர்ந்த யாரும் அந்தப் பேருந்தில் பயணிக்கவில்லை என்பதும், வாரன்ட்டுக்கான டிக்கெட்டை ஒரு பயணியிடம் நடத்துநர் கொடுத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த நடத்துநர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதென்ன புதுவகையான மோசடி?
நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்தின் நடத்துநர்களுக்கு, நேரக்காப்பாளர் ஒருவர் இதுபோன்ற வாரன்ட்களைக் கொடுத்தது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், நாகர்கோவில் ஏ.எஸ்.பி-யான ஜவஹரை நியமித்தார். நாமும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பல வருடங்களாக இதுபோன்ற மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம், ‘‘பிடி வாரன்ட், சர்ச் வாரன்ட், கைது வாரன்ட் போன்றது, பயணத்துக்கான வாரன்ட். அலுவல் சார்ந்த பணிகளுக்காக காவல் துறையினர் பேருந்தில் பயணிப்பதற்கு, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திலிருந்து பயணத்துக்கான வாரன்ட் பெறுவர். பேருந்து நடத்துநர் வாரன்ட்டை வாங்கிக்கொண்டு, பயணத்துக்கான டிக்கெட்டை வழங்குவார். டிக்கெட்டின் எண்ணையும் வாரன்ட்டில் குறித்துவைப்பார். நடத்துநர் கணக்கு ஒப்படைக்கும்போது, காவலர் பயணித்த டிக்கெட்டுக்கான தொகைக்காக வாரன்ட்டைச் சமர்ப்பிப்பார். அந்த வாரன்ட் காவல் துறைக்கு அனுப்பப்பட்டு, பயணத்தொகை வசூலிக்கப்படும். அப்படி காவல் துறையினர் அலுவல்ரீதியாகப் பயன்படுத்தும் பஸ் பயண வாரன்ட்கள்தான், அதிகாரிகள் சிலரின் துணையோடு நடத்துநர்களிடம் விற்கப்படுகின்றன.

2015-ம் ஆண்டு, கன்னியாகுமரி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையைச் சேர்ந்த ஒரு நடத்துநருக்கும் வேறு சிலருக்கும் சிறு பிரச்னை ஏற்பட்டது. அது சம்பந்தமாக விசாரணை நடத்த கன்னியாகுமரி காவல்நிலையத்துக்கு நடத்துநர் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்த பிறகு அவரது பையை அங்கேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். காவல் துறையினர் அதை எடுத்து டெப்போ அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அந்தப் பையில் காவலர்கள் பயணிக்கும் 39 வாரன்ட்கள் மொத்தமாக இருந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி கிளை மேலாளர், வணிகப் பிரிவு துணை மேலாளருக்குக் கடிதம் எழுதினார். அவர், அந்த வாரன்ட்கள் மூலம் மட்டும் 39,000 ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பதாக புள்ளிவிவரத்துடன் பதில் அளித்திருந்தார். போக்குவரத்து ஊழியர்களுடன் பல வருடங்களாக போலீஸார் கூட்டணி வைத்துக்கொண்டு, லட்சக்கணக்கில் மோசடி செய்கின்றனர். கிடைக்கும் பணத்தைப் பங்குபோட்டுக்கொள்கின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து திருநெல்வேலி மண்டல போக்குவரத்துப் பொதுமேலாளர் (வணிகம்) கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘சோதனையில் சிக்கிய நடத்துநர், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர். வடசேரி பேருந்துநிலையத்தில் பயணிகளை பேருந்தில் அழைத்து ஏற்றும் ஏஜென்ட் ஐயப்பன் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், தற்காலிகப் பணியாளரான அவரை பணிநீக்கம் செய்திருக்கிறோம். வாரன்ட்டை சமர்ப்பித்து காவல்துறையிடம் பணம் வசூலிக்கப்படும் என்பதால், போக்குவரத்துத் துறைக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது’’ என்றார்.
இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திவரும் நாகர்கோவில் ஏ.எஸ்.பி-யான ஜவஹரிடம் பேசினோம். ‘‘தனக்கான வாரன்ட் லெட்டரில் எஸ்.ஐ பயணிக்காமல் அதை நடத்துநரிடம் கொடுத்திருக்கிறார். அந்த வாரன்ட்டைப் பயன்படுத்தி நடத்துநர் வேறு பயணியைப் பயணிக்க வைத்துள்ளார். இதில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்துவருகிறது’’ என்றார்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யான ஸ்ரீநாத்திடம் பேசினோம். ‘‘விசாரணையில் எஸ்.ஐ தவறு செய் திருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளதால், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ‘‘இதற்கு முன்பு விநியோகிக்கப் பட்ட வாரன்ட்டுகள், சம்பந்தப்பட்ட காவலர்களே பூர்த்திசெய்து கொண்டு செல்லும் வகையில் இருந்தன. வாரன்ட்டைப் பயன்படுத்தி மோசடி நடப்பதாக புகார் வந்ததால், வாரன்ட்டில் காவல்நிலைய இன்ஸ்பெக்டரின் கையெழுத்து மற்றும் பயணிக்கும் தேதியுடன்கூடிய முத்திரையும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதிலும் மோசடி நடப்பதால், இனி வாரன்ட் முறையையே ஒழிக்கும் திட்டம் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது. காவலர்கள் பயணச் சீட்டை சமர்ப்பித்து, பயணத் தொகையைத் திரும்பப் பெறும் நடைமுறை வர வாய்ப்புள்ளது’’ என்றார்.
எப்படியெல்லாம் மோசடி செய்றாங்கப்பா!