Published:Updated:

வருடக் கடைசி வழக்குகள்... நாடோடிப் பழங்குடியினர் மீது திணித்ததா போலீஸ்?

16-ம் தேதி காலையில எங்க வீட்டுக்கு வந்த ஏழு போலீஸ்காரங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்த என் வீட்டுக்காரரை அடிச்சு இழுத்துக்கிட்டுப் போனாங்க

பிரீமியம் ஸ்டோரி

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது தமிழகக் காவல்துறை பதிவுசெய்யும் பொய் வழக்குகளையும், அவர்கள்மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களையும் மையமாகக்கொண்டு சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தாக்கம் விலகாத நிலையிலேயே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாடோடிப் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை சட்டவிரோதமாக போலீஸார் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சக்திவேல், தர்மராஜ், பிரகாஷ், பரமசிவம்
சக்திவேல், தர்மராஜ், பிரகாஷ், பரமசிவம்

நவம்பர் 16-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரை, கண்ணீரும் கம்பலையுமாகச் சந்தித்த சின்ன சேலத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, ‘நாங்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 14-ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சீருடை அணியாத காவலர்கள் என் கணவர் பிரகாஷ், அவரின் உறவினர்கள் தர்மராஜ், செல்வம் ஆகியோரை அடித்து, வெள்ளை நிற டெம்போ வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்குள் இன்று (நவம்பர் 16) தர்மராஜின் தம்பியான சின்னசேலத்தைச் சேர்ந்த பரமசிவம், சக்திவேல் இருவரையும் காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். ஐந்து பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை மீட்டுத் தாருங்கள்’ என்று மனு ஒன்றை அளித்தார்.

மனு அளிக்கப்பட்ட தினம் இரவே செல்வம், பரமசிவம் இருவரையும் விடுவித்த போலீஸார், மறுநாள் 17-ம் தேதி சக்திவேலைத் தவிர்த்து தர்மராஜ், பிரகாஷ் இருவரை மட்டும் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதுசெய்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ‘சக்திவேலின் நிலை என்ன?’ என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கேள்விகள் எழுந்தன. அதன் பிறகே, ‘கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்க்குப்பம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுக்காக பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் மூவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் விற்பனை செய்த 38 சவரன் திருட்டு நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. தர்மராஜ், பிரகாஷ் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். சக்திவேல் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படவிருக்கிறார்’ என்று பத்திரிகைச் செய்தியை வெளியிட்டது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. அன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக்திவேலுக்கு மறுநாள் 18-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செல்வம்
செல்வம்

காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்தோம். ‘‘ஞாயித்துக்கிழமை நடுராத்திரி என்னை, தர்மராஜ், பிரகாஷ் மூணு பேரையும் கள்ளக்குறிச்சி போலீஸ்காரங்க பிடிச்சு, கண்ணைக்கட்டி ஒரு வேன்ல அழைச்சுக்கிட்டுப் போனாங்க. வேன்ல போறப்பயே எங்களைக் கடுமையா தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. மறுநாள் ஒரு மண்டபத்துக்கு கூட்டிக்கிட்டுப் போய் அங்கவெச்சும் எங்களை அடிச்சாங்க. அப்புறம் தர்மராஜ், பிரகாஷை தனியா அழைச்சுக்கிட்டு போயி, ஜன்னல்ல கையை விரிச்சு கட்டிப்போட்டு கண்ணுமண்ணு தெரியாம அடிச்சாங்க. அவங்க ரெண்டு பேரு கையையும் சுவத்துல பதிய வெச்சு, ‘இந்த ரேகையை திருட்டு நடந்த இடத்துல வெச்சு உங்களைக் கடைசிவரைக்கும் ஜெயில்ல தள்ளிடுவோம்’னு மிரட்டினாங்க. ‘நாங்க திருடலை’னு எவ்ளோ சொல்லியும் அவங்க கேட்கலை’’ என்றார் கண்ணீருடன்.

நம்மிடம் அழுதபடியே பேசிய சக்திவேலின் மனைவி கஸ்தூரி, ‘‘16-ம் தேதி காலையில எங்க வீட்டுக்கு வந்த ஏழு போலீஸ்காரங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்த என் வீட்டுக்காரரை அடிச்சு இழுத்துக்கிட்டுப் போனாங்க. மறுநாள் ராத்திரி 8 மணிக்கு கோர்ட்டுக்கு அவரை கூட்டிட்டு போனப்ப அவரால நடக்கவே முடியலை. 18-ம் தேதி சாயங்காலம் நாலு மணிக்கு ஜெயில் வார்டன் எனக்கு போன் பண்ணி, ‘உங்க வீட்டுக்காரருக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்துடுச்சு. முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்காங்க’னு சொன்னாரு. அங்க போய் பார்த்தப்போ படுத்த படுக்கையா கிடந்த எங்க வீட்டுக்காரரு, ‘போலீஸ் அடிக்கறதைத் தாங்க முடியலை’னு சொல்லி அழுதாரு. இதுக்கெல்லாம் ஒரு முடிவே வராதா?’’ என்றார் விரக்தியுடன்!

கஸ்தூரி, ஜெயசுதா, ராஜலெட்சுமி
கஸ்தூரி, ஜெயசுதா, ராஜலெட்சுமி

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் ‘விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் ஜெயசுதா, “போலீஸார் முரண்பாடாகப் பேசியதிலிருந்தே சட்டவிரோதமாக அவர்களைக் கஸ்டடி எடுத்தது அம்பலமாகிவிட்டது” என்றபடியே நம்மிடம் பேசினார்... ‘‘கள்ளக்குறிச்சி போலீஸ் என்று சொல்லித்தான் அவர்களை அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி போலீஸாரிடம் கேட்டபோது, ‘நாங்கள் அழைத்து வரவில்லை. சின்னசேலத்தில் கேட்டுப் பாருங்கள்’ என்றார்கள். சின்னசேலத்தில் கேட்டால், ‘நாங்கள் இல்லை’ என்று கைவிரித்தார்கள். ஆனால், நவம்பர் 14-ம் தேதி இரவே அவர்களைச் சட்டவிரோத கஸ்டடியில் இழுத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தி, குற்றம் செய்ததாக ஒப்புதல் வாங்கிவிட்டு, 16-ம் தேதி மாலைதான் அவர்களைக் கைதுசெய்ததாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருக்கிறார்கள் சின்னசேலம் போலீஸார். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், முடிக்க முடியாத வழக்குகளைப் பட்டியல் சமூக மக்கள்மீது திணித்து சிறைக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழகக் காவல்துறை. தற்போது நடந்திருப்பதும் அதுதான்’’ என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட டி.எஸ்.பி ராஜலெட்சுமியிடம் இது பற்றிக் கேட்டால், “நவம்பர் 14-ம் தேதி நாங்கள் கைதுசெய்ததை நீங்கள் பார்த்தீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியவர், ‘‘எங்கள் டீம் 16-ம் தேதிதான் அவர்களைக் கைதுசெய்தது. 13 திருட்டுச் சம்பவங்களில் அவர்கள் கைரேகை பொருந்துகிறது. அவர்கள் கூறிய தகவலை வைத்துத்தான் கடைகளிலிருந்து 38 பவுன் நகைகளை மீட்டிருக்கிறோம்’’ என்றார்.

“நவம்பர் 14-ம் தேதி எங்கள் டீம் கைதுசெய்யவில்லை’ என்கிறார் டி.எஸ்.பி ராஜலெட்சுமி. அப்படியென்றால், ‘அவர்களைக் கைதுசெய்து சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தது எந்த டீம்?’ என்ற கேள்வியில் புதைந்துகிடக்கிறது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு